டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மீண்டும் வருகிறது எம்.ஜி.ஆரின் ‘மாட்டுக்கார வேலன்’

46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறது எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஜோடியாக நடித்து வெள்ளி விழா கண்ட, ஜனரஞ்சக திரைப்படம் ‘மாட்டுக்கார வேலன்’.

எம்.ஜி.ஆர்., இரட்டை வேடங்களில் நடித்த படம் என்ற பெருமையையும், கவியரசர் கண்ணதாசன் மற்றும் வாலியின் வரிகளில் அமைந்த தித்திக்கும் பாடல்களைக் கொண்ட காவியத் திரைப்படம் என்ற பெருமையையும் ஒருசேர பெற்ற படம், “மாட்டுக்கார வேலன்”.

ப.நீலகண்டன் இயக்கத்தில் 1970ல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, லட்சுமி, அசோகன், வி.கே.ராமசாமி, சோ மற்றும் பலர் நடித்த மாட்டுக்கார வேலன் திரைப்படத்திற்கு இசை அமைத்தவர்  ‘திரை இசைத் திலகம்’ கே.வி.மகாதேவன்.

இப்படம் கிட்டத்தட்ட 46 வருடங்களுக்குப் பின் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட்டு, மெருகேற்றப்பட்ட வண்ணக்கலவையில், 5.1 ஒலி அமைப்பில்,சினிமாஸ்கோப் திரைப்படமாக தயாராகிக் கொண்டிருக்கிறது.

1970ம் வருடத்திலேயே சினிமாஸ்கோப் தொழில்நுட்பத்துடன் உருவாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து சென்னையில் மட்டும் அரங்கம் நிறைந்த 400 காட்சிகள் என்ற வரலாறு படைத்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆன, மாட்டுக்கார வேலன், இன்னும் மெருகூட்டப்பட்டு விரைவில் வெளியாக உள்ளது.

கவியரசரின் வரிகளில் அமைந்த “தொட்டுக்கொள்ளவா, நெஞ்சில் தொடுத்துக்கொள்ளவா” பாடலும், “ஒரு பக்கம் பாக்குறா” பாடலும், வாலி வரிகளில் அமைந்த “பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா” என்ற இனிமையான பாடலும் அமைந்த திரைப்படம் இது. மேலும், “சத்தியம் நீயே தர்ம தாயே” பாடலும், “பட்டிக்காடா பட்டணமா” பாடலும் இதில் இடம் பெற்றுள்ளன.

ஜெயந்தி பிலிம்ஸ் சார்பில் என்.கனகசபை தயாரிப்பில் உருவான மாட்டுக்கார வேலன் டிஜிட்டல் பதிப்பை சாய் வெங்கட் ராமா பிலிம்ஸ் சார்பில் சுனிதா வெளியிடுகிறார்.