அனைத்து அவமானங் களுடனும் “அருமையாக” நடந்து முடிந்தது நீட் தேர்வு!

இந்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (நீட்) சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) நடத்தும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது. உச்ச நீதிமன்றமும் ‘நீட்’ தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனால், தமிழக மாணவர்களுக்கு ‘நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு இந்த மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டு வைத்துவிட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, இந்தியா முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்றது. 104 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 1,900–க்கும் அதிகமான மையங்களில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு நடந்தது. நாடு முழுவதும் 11 லட்சத்துக்கும் அதிகமான பேர் இந்த தேர்வை எழுதினர்.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 57 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.

சென்னையில் பல்லவன் சாலையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளிட்ட 13 மையங்களில் தேர்வு நடந்தது.

தமிழகத்தில் நீட் தேர்வை எழுத 90 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ–மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் பலர் தேர்வு எழுத வரவில்லை. சுமார் 85 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். கடந்த வருடம் தேர்வு எழுதிய சிலரும், இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதினர். காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடைபெற்றது. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

காலை 7.30 மணி முதல் 9.30 மணிவரை மாணவ–மாணவிகள் தேர்வு எழுத மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தாமதமாக வந்த மாணவ–மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் வருத்தத்துடன் திரும்பிச் சென்றனர்.

தீவிர சோதனைக்கு பின்னரே மாணவ–மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

நீட் தேர்வு எழுத வருபவர்கள் கைக்கெடிகாரம், பெல்ட், கம்மல், மூக்குத்தி கொலுசு போன்றவற்றை அணிந்து வரக்கூடாது என்று கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இதனால் மாணவிகள் இவற்றையெல்லாம் கழற்றியபின் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.

முழுக்கை சட்டை அணிந்து வரவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. எனவே முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்கள் அவற்றை கழற்றி கைப்பகுதியை கத்தரிக்கோலால் வெட்டி, அரைக்கை சட்டையாக மாற்றி அணிந்து கொண்டு உள்ளே சென்றார்கள்.

இப்படியாக அனைத்து அவமானப்படுத்தல்களுடனும் நீட் தேர்வு “அருமையாக” நடந்து முடிந்திருக்கிறது.

பாரத் மாதா கீ ஜே!

 

Read previous post:
0
டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மீண்டும் வருகிறது எம்.ஜி.ஆரின் ‘மாட்டுக்கார வேலன்’

46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறது எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஜோடியாக நடித்து வெள்ளி விழா கண்ட, ஜனரஞ்சக திரைப்படம் ‘மாட்டுக்கார வேலன்’. எம்.ஜி.ஆர்., இரட்டை வேடங்களில் நடித்த படம்

Close