பொள்ளாச்சி ஜெயராமன் புகார்: மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது போலீஸ் வழக்குப் பதிவு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தன் மீது களங்கம் கற்பித்ததாக சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீதும், நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் இந்த வழக்கில் ஆளுங்கட்சியினரைக் காப்பாற்ற காவல்துறை செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.  சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனின் தலையீடு உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் பொள்ளாச்சி ஜெயராமன் டிஜிபியை சந்தித்துப் புகார் அளித்தார். புகார் அளித்தபின், ”என் மீதும் என் குடும்பத்தார் மீதும் பரப்பப்பட்ட தவறான குற்றச்சாட்டின் மீது முழுமையாக விசாரித்து தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையரைச் சந்தித்து கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.

திமுகதான் இதற்குக் காரணம். 25 நாட்களுக்கு முன்னாடி இந்த விவகாரம் தொடங்கியது முதல் இதன்மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னது நான்.  புகார் கொடுக்கச் சொன்னது நான், புகார் கொடுப்பவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கச் சொன்னது நான்.

ஆனால், இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் என் பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் பதிவுகள் இடப்படுகின்றன. அதற்கு ஸ்டாலின் மருமகன் சபரீசனின் தூண்டுதலே காரணம்” என்று பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் இந்தப் புகார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்தப் புகாரின்பேரில் நக்கீரன்கோபால் மீதும், சபரீசன் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நக்கீரன் கோபால் நாளை காலை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது.