சிறந்த நடிகருக்கான விருது: சூர்யாவுக்கு வழங்கினார் குடியரசு தலைவர்

டெல்லியில் இன்று 68-வது ஒன்றிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், நடிகர்கள் சூர்யா, அஜய் தேவ்கன் ஆகியோருக்கு சிறந்த நடிகர்களுக்கான விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

கடந்த 2020ஆம் ஆண்டுக்கான, 68-வது ஒன்றிய திரைப்பட விருதுகள் ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த நடிகர்களாக தமிழ் நடிகர் சூர்யா, இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். மேலும், சிறந்த படம், சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த பின்னணி இசை (ஜி.வி.பிரகாஷ்), சிறந்த திரைக்கதை (ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதா கொங்கரா) ஆகிய பிரிவுகளில் ‘சூரரைப் போற்று’ படம் விருதுகளை வென்றது.

வசந்த் இயக்கிய ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம், சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதை வென்றது. இந்த திரைப்படத்தில் நடித்த லட்சுமிப் பிரியா சந்திரமவுலி, சிறந்த துணை நடிகைக்கான விருதுக்கும், இதே படத்துக்காக சிறந்த எடிட்டிங் பிரிவுக்கான விருதுக்கு ஸ்ரீகர் பிரசாத்தும் தேர்வு பெற்றனர். ‘மண்டேலா’ இயக்குநர் மடோன் அஸ்வினுக்கு அறிமுக இயக்குநர், சிறந்த வசனகர்த்தா என 2 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த இந்தி படமாக துள்சிதாஸ் ஜூனியர், கன்னடப் படமாக டோலு, மலையாளப் படமாக ‘திங்களச்ச நிச்சயம்’ உட்பட பல்வேறு விருதுகளும் அறிவிக்கப்பட்டன. சிறந்த இயக்குநராக சச்சி (அய்யப்பனும் கோஷியும்- மலையாளம்), துணை நடிகராக பிஜூ மேனன் (அய்யப்பனும் கோஷியும்) ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். நடிகர் சூர்யா, ‘சூரரைப் போற்று’ படத்தைத் தயாரித்த ஜோதிகா, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் சுதா கொங்கரா உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கினார். பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக்குக்கு (வயது 79), 2020-ம் ஆண்டுக்கான `தாதா சாகேப் பால்கே’ விருது சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அவருக்கும் இவ்விழாவில் விருது வழங்கப்பட்டது.

 

Read previous post:
0a1a
பொன்னியின் செல்வன் – விமர்சனம்

நடிப்பு: விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஜெயராம் மற்றும் பலர் இயக்கம்: மணிரத்னம் தயாரிப்பு: ’லைகா புரொடக்சன்ஸ்’ சுபாஸ்கரன்

Close