பொன்னியின் செல்வன் – விமர்சனம்

நடிப்பு: விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஜெயராம் மற்றும் பலர்

இயக்கம்: மணிரத்னம்

தயாரிப்பு: ’லைகா புரொடக்சன்ஸ்’ சுபாஸ்கரன் & ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ மணிரத்னம்

இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

ஒளிப்பதிவு: ரவி வர்மன்

கலை: தோட்டா தரணி

0a1b

கொஞ்சம் வரலாறையும், நிறைய கற்பனையையும் கலந்து, சுமார் 70 ஆண்டுகளுக்குமுன் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ என்ற ஐந்து பாகங்கள் கொண்ட,  காலத்தால் அழியாத, பிரசித்தி பெற்ற நாவலை எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் போன்ற ஜாம்பவான்கள் திரைப்படமாக எடுக்க ஆசைப்பட்டு, அது முடியாமல் போக, இப்போது ‘லைகா புரொடக்சன்ஸ்’ சுபாஸ்கரனின் பிரமாண்ட முதலீட்டில் இயக்குனர் மணிரத்னம் வெற்றிகரமாக பிரமாண்ட திரைப்படமாக்கி, அதன் முதல் பாகத்தை திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார். இதுவே மிகப் பெரிய சாதனை என்பதால், இதற்காகவே சுபாஸ்கரனுக்கும், மணிரத்னத்துக்கும் நமது முதல் பாராட்டு.

கதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ‘பிற்கால சோழர்கள்’ காலத்தில் நிகழ்வதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கதை தொடங்கும்போது சோழ நாட்டை ஆண்டுகொண்டிருக்கிறார் சுந்தர சோழன் (பிரகாஷ்ராஜ்). அவருக்கு ஆதித்த கரிகாலன் (விக்ரம்), குந்தவை (திரிஷா), அருள்மொழி வர்மன் என்ற பொன்னியின் செல்வன் (ஜெயம் ரவி) என மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இச்சமயத்தில் வானில் திடீரென வால்நட்சத்திரம் தோனறுகிறது. இது குறித்து ஆராயும் ஜோதிடர்கள், அரச குடும்பத்தில் நிகழப்போகும் மரணத்தின் அறிகுறி இது என்று கணிக்கிறார்கள். அதற்கிணங்க, சோழப் பேரரசர் சுந்தர சோழனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. அவர் விரைவில் இறந்துபோவார் என்ற நிலையில், அடுத்த பேரரசர் யார் என்பதை முடிவு செய்வதற்கான சதிகளும் சூழ்ச்சிகளும் தொடங்குகின்றன. பேரரசர் சுந்தர சோழரின் மூத்த மகனும், பட்டத்து இளவரசருமான ஆதித்த கரிகாலன் அடுத்து அரியணை ஏறுவாரா? அல்லது அவரது தம்பி அருள்மொழி வர்மன் என்ற பொன்னியின் செல்வன் ஆட்சியில் அமருவாரா? அல்லது இவர்களின் உறவினரும், போட்டியாளருமான மதுராந்தகன் (ரகுமான்) ஆட்சியைக் கைப்பற்றுவாரா? என்ற கேள்விகள் தான் கதையின் முக்கிய முடிச்சு. இந்த முடிச்சை சுவாரஸ்யமாக இறுக்கிப்போட்டு, பின் விறுவிறுப்பாக அவிழ்ப்பது தான் ‘பொன்னியின் செல்வன்’ கதை.

படத்தின் பெரிய பலமே பிரபலமான நடிகர்- நடிகையர் பட்டாளம் தான். பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலனாக வருகிறார் நடிப்பு அசுரன் விக்ரம். தமிழர்களின் சிறப்பு இயல்புகளாக இலக்கியங்கள் சொல்லும் காதலும் வீரமும் ஒருங்கே அமையப் பெற்ற கதாபாத்திரத்தில் தூள் பரத்தியிருக்கிறார் விக்ரம்.  அவரது அறிமுகக் காட்சியில் பனிமூட்டத்தினூடே அவருடைய முகம் அறிமுகமாவது மெய் சிலிர்க்க வைக்கிறது. குதிரையில் அமர்ந்து ராஷ்ட்ரகூட நாட்டுப் படையினருக்கு எதிராக வாளைச் சுழற்றும்போது வீரம் தெறிக்கிறது. தனது விடலைப் பருவக் காதலை நினைவுகூரும்போது காதல்தீ பற்றி எரிகிறது. விக்ரமின் நடிப்பு பசிக்கு நல்ல தீனி. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஆதித்த கரிகாலனின் நம்பிக்கைக்கு உரிய நண்பன் வந்தியத்தேவனாக வருகிறார் கார்த்தி. துணிச்சல், நக்கல், நையாண்டி, ஜொள்ளு என அனைத்தும் கலந்த துருதுரு கதாபாத்திரம் என்பதால், அசால்டாக அற்புதமாக நடித்து பார்வையாளர்களின் கைத்தட்டலைப் பெறுகிறார்.  ஆழ்வார்க்கடியான் என்ற வைணவ பிராமணராக வரும் ஜெயராமுடன் சேர்ந்து கார்த்தி செய்யும் காமெடி – நகைச்சுவை சரவெடி.

அருள்மொழி வர்மன் என்ற பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி இடைவேளைக்குப் பிறகுதான் வருகிறார் என்றாலும் இயல்பான நடிப்பை பாராட்டும் வகையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

சோழப் பேரரசை வேரறுக்கத் துடிக்கும் நந்தினி என்ற அழகிய வில்லி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய், சோழப் பேரரசை அழிய விடாமல் காக்கும் பொறுப்புமிக்க குந்தவையாக திரிஷா, படகோட்டி பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, நிதியமைச்சர் பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், கோட்டைத் தளபதி சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், அரசாட்சியை அபகரிக்க விரும்பும் மதுராந்தகனாக ரகுமான் மற்றும், ஆழ்வார்க்கடியானாக ஜெயராம், மலையமானாக லால்,  பெரிய வேளாராக பிரபு, பார்த்திபேந்திரனாக விக்ரம் பிரபு, சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், செம்பியன் மாதேவியாக ஜெயசித்ரா உள்ளிட்ட அனைத்து நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

1940களிலும், 1950களிலும் தமிழ்த்திரையை ஆட்டிப்படைத்த ‘ராஜா ராணி கதை’ பாணியிலான படம் தான் என்றாலும், இதன் மேக்கிங்கிலும் இயக்குனர் மணிரத்னம் தன் டச்சை நிலை நாட்டுவதில் வெற்றி பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும். ராஷ்ட்ரகூடப் போர், நுளம்பபாடி போர், ஈழப் போர் ஆகியவற்றை கிராஃபிக்ஸ் ரசிகர்களை மனதில் கொண்டு பிரமாண்டமாக கொடுத்திருப்பது நல்ல உத்தி. இறுதியில் வரும் கடல் கொந்தளிப்புக் காட்சி, பிரமிப்பில் வாய் பிளக்க வைக்கிறது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கத் தூண்டும் வகையில் முதல் பாகத்தை முடித்திருப்பது அருமை. மொத்தத்தில், மணிரத்னம் தன் கனவுப்படைப்பை அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும் வகையில் படைத்தளித்திருக்கிறார். பாராட்டுகள்.

மணிரத்னத்துடன் இளங்கோ குமரவேலும், ஜெயமோகனும் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். கல்கியின் எழுத்துகளுக்கு திரைவடிவம் கொடுக்க தங்களால் இயன்ற அளவு முயன்றிருக்கிறார்கள். அவை சில இடங்களில் கைகொடுத்திருக்கிறது; சில இடங்களில் காலை வாரிவிட்டிருக்கிறது.  நாவலை வாசித்தவர்கள், ”நாவலில் உள்ள இன்னின்ன காட்சிகள் படத்தில் இல்லையே” என்றும், “படத்தில் உள்ள இன்னின்ன காட்சிகள் நாவலில் இல்லையே” என்றும் கருதக் கூடும். அதுபோல், நாவலை  வாசிக்காதவர்கள் கதையும், கதாபாத்திரங்களும் புதிது என்பதால், டீடெய்லிங் மிஸ்ஸிங் என்று கருதக்கூடும். ஆனால், இரண்டாயிரம் பக்கங்களைக் கொண்ட நாவலை திரைக்கதை ஆக்கும்போது இத்தகைய குறைபாடுகள் நிகழ்வது சகஜம் தான். எனினும், ஒருசில இடங்களில் திரைக்கதையில் ஏற்படும் தொய்வுகளைத் தவிர்த்து விறுவிறுப்பு சேர்த்திருக்கலாம்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், கலை இயக்குனர் தோட்டா தரணி உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் அபார உழைப்பு ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிவது பரவசம்.

’பொன்னியின் செல்வன்’ நிச்சயம் பாராட்டத்தக்க முயற்சி. மட்டுமல்ல, தமிழில் கொட்டிக் கிடக்கும் ஏராளமான வரலாற்றுப் புதினங்களை திரையாக்கம் செய்வதற்கான துணிவை இப்படத்தின் வெற்றி ஏற்படுத்தும்.

வெற்றியை பரிசாகப் பெற்றிருக்கும் ’லைகா புரொடக்சன்ஸ்’  சுபாஸ்கரன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நம் மனமார்ந்த பாராட்டுகள்.