திருமுருகன் காந்தியின் அரசியலில் என்ன பிரச்சினை?

எல்லா காலக்கட்டங்களிலும் தேர்தல் அரசியலில் நம்பிக்கை இல்லாத இயக்கங்கள் இருந்தன. பெரியாரே அப்படி உருவாகி வந்தவர்தான். திருமுருகனும் பெரியாரும் ஒன்றிணைவது அங்குதான். பார்ப்பனீய இந்தியாவுக்குள் பார்ப்பனீய அதிகாரம் நடத்தும் தேர்தலில் என்ன நியாயம் நேர்ந்துவிட போகிறதென்பதுதான் இருவரும் இணைகிற புள்ளி.

இந்தியாவின் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்த ஆங்கிலேய அதிகாரி ‘பார்ப்பனர்களின் ஆதிக்கம்தான் அதிகார வர்க்கத்தில் இருக்கிறது. பார்ப்பனீயக் கண்ணாடி அணிந்தே இச்சமூகத்தின் பிரச்சினைகளை அரசு பார்க்கிறது. அவற்றுக்கு பார்ப்பனீய தீர்வுகளையே வழங்கியும் வருகிறது’ என்றே கணக்கெடுப்பு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இன்று என்ன நிலைமை?

பார்ப்பனீய அதிகார வர்க்கம் இல்லை என்று கூறிவிட முடியுமா என்ன?

அதிகாரத்திலும் அதிகார வர்க்கத்திலும் பார்ப்பனரல்லாதோர் இன்று இடம்பெற்றிருக்க, தேர்தல் முறைதானே சாத்தியப்படுத்தியது என கேட்கலாம். நியாயம்தான். ஆனால் இன்றும் நாம் யாரை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறோம்?

மக்கள்தொகை கணக்கெடுப்பு 1872ம் ஆண்டு எடுக்கப்பட்டது. இப்போது 2019. எதை நாம் கவனிக்க மறந்தோம்?

தேர்தலில் அதிகாரம் கொள்வது ஒரு முறை. போராட்ட களம் மற்றொரு முறை. ஆயுதங்கள் இன்னொரு முறை. இவை போல பல முறைகள் உலகமெங்கும் இருக்கின்றன.

இன்றைய தேதியில் தேர்தலை பற்றிய பார்வை உலக நாடுகளின் பெருமளவு மக்களுக்கு மாறித்தான் போயிருக்கிறது. அவநம்பிக்கையில்தான் இருக்கிறார்கள். அரசுகளின் தோல்வி உலகம் முழுவதும் மக்களை தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

தேர்தல் என ஒரு முறை இருந்தால் நிச்சயமாக அதை எதிர்க்கும் போக்கும் சமூகத்தில் இருந்தே ஆகும். அதுவே இயங்கியல். அந்த போக்கை மறுத்து பேசுவதும், புரிந்துகொண்டு பேசுவதும் நமக்கான தெரிவுகளிலும் தெளிவிலும்தான் இருக்கிறது.

ஆயுதத்தால் ஈழம் விழுந்ததென பேசுபவர்கள் தந்தை செல்வா காலத்திலிருந்து ஈழ வரலாற்றை பார்க்க வேண்டும். உண்மையில் தமிழ்நாடும் மற்ற பிற இந்திய மாநிலங்களும் இலங்கைக்குள் தற்போது இருக்கும் தமிழர் நிலமாகத்தான் இருக்கின்றன. அதிகாரங்கள் ஏதுமின்றி பல் பிடுங்கப்பட்ட பாம்புகளாக.

‘ஆயுதம் தாங்கியதால்தானே இத்தனை மக்களை இழந்தோம்’ என கேட்பார்கள். கிடையாது. ஆயுதம் தாங்கவில்லை என்றாலும் இந்த இழப்பு நேர்ந்திருக்கும். ஏனென்றால் இலங்கையில் இருப்பது பேரினவாதம். அதை தொடங்கி வைத்தது பிரபாகரனும் அல்ல; தமிழர்களும் அல்ல. பேரினவாதம் இருந்ததன் விளைவாகத்தான் பிரபாகரனும் பேரிழப்பும்.

உலகப் போக்குகளையும் புரிந்து கொள்ளாமல் சமூக அரசியல் திசைகளையும் தெரிந்து கொள்ளாமல் மூலதனக் கொடுக்குகளையும் கவனிக்காமல் விமர்சனம் செய்வதற்காகவே விமர்சனம் பேசுவதும் அரசியல் லாபத்தை கணக்கு செய்து அரசியல் பேசுவதும்தான் தற்காலத்தைய சாபங்கள்.

தேர்தல் மட்டுமேதான் இந்தியாவில் உயிர் வாழ வழி என்ற சிந்தையை நம் தலைகளுக்குள் புகுத்தியிருப்பது பீடத்தில் அமர்ந்திருக்கும் பார்ப்பனீயமும் அதை வளர்த்துவிடும் பனியாக் கூட்டமும்தான் என்று சொன்னால் என்னை என்ன சொல்வீர்கள்?

ஹெச்.ராஜாவின் வழி நின்று தேச விரோதி என்பீர்கள். அவ்வளவுதானே! என் தாத்தனே பெரிய தேச விரோதி. அதனால் உங்கள் பட்டங்கள் ஏதும் செய்து விடாது எங்களை!

திருமுருகன் அரசியலில் பிழை இருக்கலாம். ஆனால் அவற்றை காலம்தான் சொல்ல முடியும். நாமல்ல. நாம் பேசும் அரசியலில் இருக்கும் பிழைகளையே நாம் பொருட்படுத்த முனைவதில்லை. இதில் அடுத்தவரின் அரசியலை சீர்தூக்கிட நமக்கு என்ன அருகதை இருக்கிறது?

RAJASANGEETHAN

 

Read previous post:
0a1a
பொள்ளாச்சி ஜெயராமன் புகார்: மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது போலீஸ் வழக்குப் பதிவு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தன் மீது களங்கம் கற்பித்ததாக சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீதும், நக்கீரன் பத்திரிகை

Close