ஆரம்பமே அட்டகாசம் – விமர்சனம்

நாயகன் ஜீவாவின் அப்பா பாண்டியராஜன் சிறுவயதில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியவில்லை என்பதால் தனது மகனை சிறுவயதில் இருந்து காதலித்து தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லியே வளர்க்கிறார்.

வளர்ந்து பெரியவனானதும் ஜீவா, ஒருநாள் நாயகி சங்கீதா பட்டை பார்க்கிறார். அவரைப் பார்த்ததும் இவருக்குள் காதல் பிறக்கிறது. மறுநாளும் நாயகியை பார்க்கும் சூழ்நிலை ஜீவாவுக்கு கிடைக்க இருவரும் நட்பாகிறார்கள். இந்த நட்பு நாளடைவில் காதலாகி இருவரும் காதலர்களாக வலம் வருகிறார்கள்.

காதலர்களான பிறகு நாயகி கேட்கும் அனைத்தையும் எந்தவித மறுப்பும் சொல்லாமல் வாங்கிக் கொடுக்கிறார் ஜீவா. அவருக்கு செலவு செய்வதற்காகவே தனது நண்பர் சாம்ஸிடம் சொல்லி, அவரது கம்பெனியிலேயே வேலைக்கும் சேர்கிறார். இந்நிலையில், ஜீவா வேலை விஷயமாக வெளியூர் செல்லவேண்டிய சூழ்நிலை வருகிறது.

வெளியூர் சென்றபிறகு சங்கீதாவிடமிருந்து எந்தவொரு அழைப்பும் ஜீவாவுக்கு வரவில்லை. சந்தேகத்தின் பேரில் சென்னை திரும்பும் ஜீவாவுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. சங்கீதா மற்றொருவருடன் நெருக்கமாக பழகி வருகிறார். அதை தட்டிக்கேட்க செல்லும் ஜீவாவை அவமானப்படுத்தி திருப்பி அனுப்புகிறார் நாயகி.

இதன்பிறகு ஜீவா நாயகியை விட்டுக்கொடுத்துவிட்டு பிரிந்து சென்றாரா? அல்லது அவரை பழிவாங்கினாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

ஜீவா இதுவரை காமெடி நடிகராக வலம்வந்தவர் தற்போது ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார்.  ஹீரோவுக்குண்டான முகம், வசனம் உச்சரிக்கும் விதம், ரொமான்ஸ் என எல்லாவற்றிலும் கலக்கியிருக்கிறார். காதல் தோல்விக்கு இவர் முகத்தில் கொடுத்திருக்கும் பாவனைகள் ரசிக்குமபடியாக இருக்கிறது. இப்படத்தில் நடனமும் நன்றாகவே ஆடியிருக்கிறார். இவரது நடிப்பில் கொஞ்சம் ரஜினியின் சாயல் இருக்கிறது. அதை தவிர்த்து தனக்கேற்றவாறு தனி ஸ்டைலை ஏற்படுத்திக்கொண்டு நடித்தால் இவருக்கென்று சினிமாவில் தனி மார்க்கெட் உருவாக்கலாம்.

சங்கீதா பட்டை சுற்றிதான் கதையே நகர்கிறது. அதை உணர்ந்து அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். சாம்ஸ், வையாபுரி ஆகியோரின் காமெடி படத்தின் இடைவேளை வரை கதையை நகர்த்தி செல்கிறது. பாண்டியராஜன் ஒருசில காட்சிகள் வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார். பதிவாளராக வரும் ஞானசம்பந்தம் பேசும் வசனங்கள் எல்லாம் அர்த்தமுள்ளதாக அமைந்துள்ளது. இன்றைய காதலர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக அமைந்துள்ளது.

இயக்குனர் ரங்கா இன்றைய இளைஞர்களை காதலித்து கழட்டிவிட்டு செல்லும் பெண்களுக்கு புகட்டும் பாடமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். தங்களுடைய காதலிக்காக ஆண்கள் எந்தளவுக்கெல்லாம் இறங்கிச் செல்கிறார்கள் என்பதையும் அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். காதல், ஊடல் அதனிடையே காமெடியையும் கலந்து சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

ஆனந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, ஒயின்ஷாப்பில் வரும் பாடல் காட்சிக்கு இவர் அமைத்திருக்கும் ஒளியமைப்பு பிரமாதமாக இருக்கிறது. ஜெயா கே தாஸின் இசையில் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது. பின்னணி இசையும் ஓகே ரகம்தான்.

‘ஆரம்பமே அட்டகாசம்’ – அட்டகாசம்!