எங்க அம்மா ராணி – விமர்சனம்

வெற்றிகரமான தமிழ் சினிமாவுக்கான எவர் கிரீன் சப்ஜெக்ட் – தாய்ப்பாசம். அத்தகைய தாய்ப்பாசத்துடன் பேய் பயமும் கலந்து, விறுவிறுப்பான படைப்பாக வெளிவந்திருக்கிறது ‘எங்க அம்மா ராணி’.

மலேசியாவில் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார் தன்ஷிகா. இவரது கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றவர் திரும்பி வராததால் அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில், தன்ஷிகாவின் ஒரு குழந்தை திடீரென மயக்கமடைந்து கீழே விழ, அந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்க்கிறார். அன்று இரவே அந்த குழந்தை இறந்து போகிறது.

தன்னுடைய கவனிப்பில்லாமல் தான் குழந்தை இறந்துவிட்டது என்ற குற்ற உணர்வுடன் இருக்கும் டாக்டரான சங்கர் அந்த குழந்தை எதனால் இறந்தது என்பதை கண்டறிய முற்படுகிறார். அப்போது, அந்த குழந்தை வினோதமான ஒரு நோயால் பாதிக்கப்பட்டுதான் இறந்துபோனது என்று கண்டுபிடிக்கிறார். தன்ஷிகாவின் மகள்கள் இரட்டையர்கள் என்பதால் மற்றொரு குழந்தைக்கும் அந்த நோய் தாக்கியிருக்கக் கூடும் என்ற அச்சத்தில், அந்த குழ ந்தையையும் அவர் சோதிக்கிறார்.

பரிசோதனையில் அந்த குழந்தைக்கும் வினோதமான நோய் தாக்கியிருப்பது தெரிய வருகிறது. ஒரு பக்கம் தனது கணவரை தேடும் பணியிலும், மறுபக்கம் தன்னுடைய மகளை அந்த நோயிலிருந்து காப்பாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார் தன்ஷிகா.

இறுதியில், தனது கணவரை தன்ஷிகா தேடிக் கண்டுபிடித்தாரா? தன்னுடைய மற்றொரு பெண்ணையாவது காப்பாற்றினாரா? தன்னுடைய பெண்ணுக்கு வந்துள்ள அந்த விநோதமான நோய்க்கு என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

தன்ஷிகா இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க ஒப்புக்கொண்டதற்காக அவரை பாராட்டலாம். நாயகி சப்ஜெக்ட். படம் முழுவதையும் தாங்கிக் கொள்ளும்படியான ஒரு கதாபாத்திரம் தன்ஷிகாவுக்கு. அதை நிறைவாகவே அவர் செய்திருக்கிறார். காணாமல் போன கணவன், இந்தியாவில் கணவர் வீட்டார் தொல்லை, இரட்டை மகள்களில் ஒருவரை திடீரெனப் பறி கொடுக்கும் நிலை, இருக்கும் மற்றொரு மகளை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை, அந்த மகளுக்குள் புகும் ஒரு சிறுமியின் ஆவியால் ஏற்படும் பிரச்சனை என எந்தப் பக்கம் திரும்பினாலும் சோதனை மேல் சோதனை. அனைத்தையும் தாக்குப் பிடித்து சரியாகச் செய்திருக்கிறார். கிளைமாக்சில் தன்ஷிகா எடுக்கும் முடிவு, பாசத்தின் உச்சம். படம் பார்ப்பவர்கள் திடுக்கிட்டுப் போவது நிச்சயம்.

தன்ஷிகாவின் இரட்டை மகள்களாக வர்ணிகா, வர்ஷா. இருவருமே அவ்வளவு இயல்பாய் நடித்திருக்கிறார்கள். வேறொரு சிறுமியின் ஆவி புகுந்தபின் பார்வையாலேயே மிரட்டியிருக்கிறார் இரண்டாவது மகள்.

நமோ நாராயணா சொக்கு என்ற கதாபாத்திரத்தில் இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் வந்து ரசிக்க வைக்கிறார். இவருக்கு ஒருசில காட்சிகள் என்றாலும் தனது நடிப்பில் நிறைவை கொடுத்திருக்கிறார். டாக்டராக வரும் சங்கர்ஸ்ரீ ஹரி புதுமுகம் என்றாலும் அவருடைய கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

இளையராஜாவின் இசையில் ‘அம்மா பாடலும், மகளே பாடலும்’ உருக வைக்கும் பாடல்கள். குமரன், சந்தோஷ்குமார் இருவரின் ஒளிப்பதிவு, மலேசியாவின் அழகை அள்ளித் தருகிறது.

பழி வாங்கும் பேய்க் கதைதான் என்றாலும், அதை தாய்ப்பாசம் கலந்து நெகிழ்ச்சியும் விறுவிறுப்புமான படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாணி.

‘எங்க அம்மா ராணி’ – பார்க்கலாம்!