வேலைக்காரன் – விமர்சனம்
சமத்துவமற்ற தற்கால சமூகத்தின் சகல தீங்குகளுக்கும், சகல துயரங்களுக்கும் காரணம் லாபவெறி பிடித்தலையும் முதலாளி வர்க்கமே என சரியாகக் கணித்து அறிவித்தான் மாமேதை கார்ல் மார்க்ஸ். அத்தகைய கேடுகெட்ட முதலாளி வர்க்கத்தை வீழ்த்தி, நீதியான சமத்துவ சமூகத்தைப் படைக்கும் ஆற்றல் கொண்ட புரட்சிகர சக்தியாக உழைக்கும் வர்க்கத்தை அவன் அடையாளம் காட்டினான்.
மார்க்ஸ் வாழ்ந்த காலத்தைவிட தற்காலத்தில் இன்னும் மோசமாய் – சாமான்ய மக்களின் உயிர்குடிக்கும் ஈவு இரக்கமற்ற அரக்க வர்க்கமாய் – கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் உருமாறி இருக்கும் சூழலில், அந்த வர்க்கத்தை எதிர்த்துப் போராட வேண்டிய உழைக்கும் வர்க்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, அதன் ஆற்றலையும், சமூகக் கடமையையும் எவ்வித சமரசமுமின்றி உணர்த்த வந்திருக்கிறது, சிவகார்த்திகேயன் நடிப்பில், மோகன் ராஜா இயக்கியுள்ள ‘வேலைக்காரன்’.
“உலகிலேயே சிறந்த சொல் – செயல்” என்ற சேகுவேராவின் புரட்சிகர பொன்மொழியை அடிக்கடி உச்சரித்து, அதை உறுதியாகப் பற்றிநிற்கும் நாயகன் அறிவு (சிவகார்த்திகேயன்), குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து, பாக்கெட்டில் அடைத்து விற்கும் ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் மார்க்கெட்டிங் பிரிவில் விற்பனைப் பிரதிநிதியாக வேலைக்கு சேருகிறார். கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக அந்த உணவுப் பொருட்களில் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அளவுக்கு அதிகமாக இரசாயனப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை ஒரு கட்டத்தில் அறிவுக்குத் தெரிய வருகிறது.
கார்ப்பரேட் முதலாளிகள் மட்டுமல்ல, ‘சம்பளத்துக்கான வேலை’ என்ற பெயரில் அத்தகைய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களும், டார்கெட் நிர்ணயித்து ஓடி ஓடி அவற்றை விற்கும் விற்பனைப் பிரதிநிதிகளும் கூட குழந்தைகளைக் கொல்லும் கொலைகாரர்களே என்ற கசப்பான உண்மை புரிகிறது அறிவுக்கு. இந்த உண்மையை சக வேலைக்காரர்களுக்கு எடுத்துச் சொல்லும் அறிவு, அவர்களது ஒத்துழைப்புடன் கம்பெனிக்கு எதிராக நூதனமான போராட்டத்தில் இறங்குகிறார். இதனை முறியடிக்க கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் செய்யும் சதிகள் என்ன? அவற்றை முறியடித்து அறிவு எப்படி வெற்றி பெறுகிறார்? என்பது ‘வேலைக்காரன்’ படக்கதையின் அடித்தளம்.
கொஞ்சம் டான்ஸ், கொஞ்சம் ஆக்சன், நிறைய காமெடி என்ற ஃபார்முலா படங்களிலேயே இதுவரை நடித்து வந்த சிவகார்த்திகேயன், முதன்முறையாக முற்றிலும் மாறுபட்ட சீரியசான சமூகப் பிரச்சனையை மையமாகக் கொண்ட படத்தில் நடித்திருக்கிறார். இதனால் சீரியஸான முகபாவம், அழுத்தமான வசன உச்சரிப்பு, சமூகப் பொறுப்புணர்வை துல்லியமாக பிரதிபலிக்கும் இயல்பான நடிப்பு என தனது திறமையின் இன்னொரு பரிமாணத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில், தான் பிறந்து வளர்ந்த குப்பத்தில் வாழும் இளைஞர்கள் அடியாட்களாக பிழைப்பது கண்டு வருந்தி, அவர்களை திருத்துவதற்காக சமூக வானொலி ஆரம்பிப்பதில் தொடங்கி, கிளைமாக்ஸ் வரை அறிவு என்ற நாயக கதாபாத்திரத்துக்குள் தன்னை கச்சிதமாகப் பொருத்திக்கொண்டு, அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். பாராட்டுக்கள்.
பெண்ணுரிமைக்காக வாதாடி போராடும் பெண்ணாக அறிமுகமாகி, நாயகன் அறிவின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும் மிருணாளினி என்ற கதாபாத்திரத்தில் வருகிறார் நயன்தாரா. இப்போதெல்லாம் தனது கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்திவரும் நயன்தாரா, அறிவுமுதிர்ச்சியை வெளிப்படுத்தும் மிருணாளினி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. பெண்ணுரிமை பேசும்போது நயன்தாராவின் உதடுகள் தந்தை பெரியாரை உச்சரிப்பது இதம்.
முதலில் கார்ப்பரேட் கம்பெனி மார்க்கெட்டிங் பிரிவின் அதிகாரியாகவும், பின்னர் முதலாளியின் மகனாகவும் நிறம் மாறும் ஆதி என்ற வில்லத்தனமான கதாபாத்திரத்தில் வருகிறார் ஃபகத் பாசில். ஒயிட் காலர் கிரிமினலுக்கே உரிய மிடுக்கும் நடிப்புமாய் அவர் அனைத்து முகபாவங்களையும் அசால்டாக வெளிப்படுத்தி பிரமாதப்படுத்தி இருக்கிறார். அவருக்கு தமிழ்ப்பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும் என்று உறுதியாக நம்பலாம்.
குப்பத்து ரவுடி காசியாக பிரகாஷ்ராஜ், அறிவின் அம்மா பொன்னியாக ரோகிணி, அப்பா முருகேசனாக சார்லி, அறிவின் நண்பன் பாக்கியமாக விஜய் வசந்த், தன் குழந்தையின் உயிரைப் பறித்தது கார்ப்பரேட் கம்பெனியின் உணவுப்பொருள் தான் என்பதை நிரூபிக்க தன்னையே சோதனைக்கூடம் ஆக்கி அழித்துக்கொள்ளத் துணியும் கஸ்தூரியாக சினேகா ஆகியோர் கதையில் திருப்பங்களை ஏற்படுத்தும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்து உருக்கமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
சரத் லோகிதஸ்வா, ஆர்ஜே.பாலாஜி, தம்பி ராமய்யா, ரோபோ சங்கர், சதீஷ், காளி வெங்கட், முனீஷ்காந்த் ராமதாஸ், மன்சூர் அலிகான், அருள்தாஸ், ஒய்.ஜி.மகேந்திரன், வினோதினி, மைம் கோபி, மதுசூதன ராவ் போன்றோர் தத்தமது பாத்திரம் உணர்ந்து அளவாய் நடித்திருக்கிறார்கள்.
‘தனி ஒருவன்’ வெற்றிப்படத்தின் மூலம் தனித்துவமான இயக்குனர் என பெயரெடுத்த மோகன் ராஜா, ‘வேலைக்காரன்’ மூலம் அப்பெயரை தக்க வைத்துக்கொண்டுள்ளார். கார்ப்பரேட் கம்பெனிகளின் உணவுப் பொருட்கள் குழந்தைகளின் உடல் நலத்தைக் கெடுக்கின்றன என்று எச்சரித்துவரும் மருத்துவர் சிவராமன் போன்றோரின் கருத்துக்கு செவி சாய்த்து, அதையே கதைக்கரு ஆக்கி, பொருத்தமான கதாபாத்திரங்களைப் படைத்து, விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து, பார்வையாளர்களை திரையோடு கட்டிப்போடுவதில் வெற்றி பெற்றிருக்கிறார் மோகன் ராஜா. சமூகத்தில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக உழைக்கும் வர்க்கத்தை முன்நிறுத்தியதற்கு அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எடுத்துக்கொண்ட கதையை சிறப்பாக சொல்லுவதற்கு அவர் மேற்கொண்ட ஆய்வுகளும், கொட்டிய கடினஉழைப்பும் படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் பளிச்சிடுகிறது. அவரது மகத்தான சமூக அக்கறையும், வசன விளாசல்களும் நிச்சயம் வரவேற்புக்கு உரியவை. தொடரட்டும் மோகன் ராஜாவின் மக்களுக்கான கலைப்பணி.
ராம்ஜியின் ஒளிப்பதிவும், அனிருத்தின் இசையும் படத்துக்கு பக்க பலமாக அமைந்திருக்கின்றன.. “கருத்தவன்லாம் கலீஜாம்”, “இறைவா”, “வா வேலைக்காரா” ஆகிய பாடல்களும், அவற்றை படமாக்கிய விதமும் ரசிக்க வைக்கின்றன. முத்துராஜின் கலை இயக்கம் குடிசைப் பகுதியையும், கார்ப்பரேட் உலகத்தையும் அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. ரூபனின் படத்தொகுப்பு படத்தின் வேகத்தைக் கூட்டுகிறது.
‘வேலைக்காரன்’ – கருத்தாழம் மிக்க புரட்சிக்காரன்!