“கேவலம் ஒரு யூடியூபர்…!”

ஸ்டிங் ஆபரேஷன் பற்றிய விவாதங்கள் முகநூல் முழுக்க உலா வந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் நான் கவனிப்பது ‘கேவலம் ஒரு யூட்யூபர்’ எனும் சொற்றொடர்தான். அது என்னை ஆச்சரியமூட்டுகிறது.

யூடியூபர்கள் என்றால் என்ன கேவலம் என்பது புரியவில்லை. சில யூடியூபர்கள் சர்ச்சைகளை மற்றும் பரபரப்பு விஷயங்களை நோக்கி ஓடுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக யூடியூபில் இயங்குபவர்கள் அனைவரும் கேவலம் என்று எப்படி ஆகும்? தொலைக்காட்சி சேனல் வைத்திருப்பவர்கள் அனைவரும் ஒழுங்கான, உண்மையான செய்திகளை வழங்குகிறார்களா? பரபரப்புகள் ஏதும் இன்றி ஆபாசங்கள் ஏதும் இன்றி இயங்குகிறார்களா? ‘மிட்நைட் மசாலா’ என்ற பதம் இன்றைய இளைஞர்கள் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அன்றைய இளைஞர்களுக்கு நன்றாகவே தெரியும். அதை நமக்கு அறிமுகப்படுத்தியது தொலைக்காட்சிகள்தான். போலவே இந்த ஸ்டிங் ஆபரேஷன்களும் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களினால் 90கள் மற்றும் 2000களில் நடத்தப்பட்டிருக்கின்றன.

பத்திரிகைகளும் கூட விதிவிலக்கல்ல. ஹிண்டு போன்ற நாளிதழ்கள் கொஞ்சம் பொறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்க டைம்ஸ் போன்ற இதழ்கள் பரபரப்பையும் சினிமா கிசுகிசுக்களையும் மட்டுமே நம்பி செயல்பட்டுக் கொண்டிருந்தன. தமிழ் நாளிதழ்களும் சினிமா செய்திகளை நம்பியே பெரும்பாலும் இயங்கி வந்தன. ‘ஐந்தெழுத்து நடிகர் இரண்டெழுத்து நடிகையுடன் ஏழேழுத்து ஊரில் சல்லாபம்!’ போன்ற தலைப்பு செய்திகள் மிகப் பிரபலம். தினத்தந்தி போன்ற நாளிதழ்கள் கொலை, கொள்ளை செய்திகளை மட்டுமே நம்பி விற்பனையை நடத்தின. இதெல்லாம் 20ம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே நடந்தன. பண்டைய காலத்தில் இருந்தே கூட இது இருக்கிறது. ‘தேவபாஷை’ என்று உருட்டப்படும் சமஸ்கிருதத்தில் நிறைய போர்னோகிராஃபி எழுதப்பட்டிருக்கிறது.++

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். எந்த ஊடகமாகிலும் அங்கே பரபரப்பையும், ஆபாசத்தையும், அவல செய்திகளையும் பரப்பி இயங்கும் நிறுவனங்கள் இருக்கும். போலவே அமைதியான, நம்பகத்தன்மையை ஊட்டும், அறிவை வளர்க்கும் விஷயங்களை முன்னெடுக்கும் நிறுவனங்கள் இருக்கும். எந்த ஊடகமானாலும் பரபரப்பு கும்பலின் சதவிகிதம் கொஞ்சம் அதிகமாகவும் அமைதி மற்றும் அறிவு கும்பலின் சதவிகிதம் சற்றே குறைவாகவும் இருக்கும். யூ டியூபும் அதற்கு விதிவிலக்கல்ல.

உலகின் முன்னணி விஞ்ஞானிகள் இன்று யூ டியூபில் இயங்குகிறார்கள். Fermi Lab போன்ற உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் தங்களுக்கென்று சேனல் வைத்து இயங்குகின்றன. மேற்கத்திய தத்துவ சிந்தனைகளை அலசும் Philosophy Tube எனும் சேனலை நான் தொடர்ந்து பின்பற்றுகிறேன். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடக்கும் விவாத நிகழ்வுகள் தொடர்ந்து அவர்கள் சேனலில் பதிப்பிக்கப்படுகின்றன. இவையெல்லாம் மிகவும் ஆழமான, அறிவார்ந்த வீடியோக்களை நமக்குக் கொடுக்கின்றன.

யூடியூபில் உங்களுக்கு எது வேண்டுமோ கிடைக்கும். அறிவார்ந்த, ஆழமான, ஆதாரங்களைக் கொண்டு இயங்கும் கன்டன்ட் வேண்டுமா? கிடைக்கும். அதே நேரம் பரபரப்பு மட்டுமே வைத்து, சினிமா கிசுகிசுக்கள் வேண்டுமா? வரலாற்று அரசியல் பொய்கள் வேண்டுமா? மதவாத மூட சிந்தனைகள் வேண்டுமா? கிடைக்கும்.

உங்களுக்கு எது கிடைக்கிறது என்பது நீங்கள் யார், எதனைத் தேடுகிறீர்கள் என்பதைப் பொருத்தே இருக்கிறது. குப்பையை ரொம்ப ஆவலுடன் கிளறி, முகர்ந்து பார்த்து விட்டு ‘சே ரொம்ப நாறுது பாஸ்!’ என்று சொல்வது அறிவீனம்.

நான் அங்கம் வகிக்கும் ‘சேப்பியன் சங்கம்’ சேனலும் அமைதியான, அறிவார்ந்த, ஆழமான விஷயங்களை வழங்குவதற்காகவே துவக்கி நடத்துகிறோம். சொல்லும் விஷயத்தின் நம்பகத்தன்மை முக்கியமாக இருக்க வேண்டும் என்று மெனக்கெடுகிறோம். நாங்கள் சொல்லும் விஷயங்களுக்கான தரவுகளை வீடியோ description செக்சனில் வழங்குகிறோம். முந்தைய வீடியோக்களில் செய்த தகவல் பிழைகளை கற்றுக் கொண்டு, அடுத்தடுத்த வீடியோக்களில் சரி செய்து தகவல்களை இன்னமும் மெருகேற்ற முயல்கிறோம். அறிவியல் பூர்வ அணுகுமுறையை முக்கிய அளவுகோலாக வைத்திருக்கிறோம்.

ஒரு Fermi Lab போல, ஒரு Oxford Union போல, ஒரு Dr Becky Smethurst, Bryan Green, Sam Harris போல எங்களுக்கு ஒரு நம்பகத்தன்மையும், மதிப்பீடும் உருவாக வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. பரபரப்பையும், தனி மனித நிந்தனைகளையும் மட்டுமே நம்பி இருக்கும் சேனல்கள் இயங்கும் அதே யூடியூபில்தான் ‘சேப்பியன் சங்கம்’ போன்ற முயற்சிகளும் அரங்கேறுகின்றன. இதுதான் நவீன உலகத்தின் ஆச்சரியம்.

நாளைக்கு ஏதாவது யூடியூப் சேனல் உங்களுக்கு கசப்புணர்வைத் தந்தால் யூடியூபைத் திட்டாதீர்கள். நீங்கள் தவறான இடத்தில் தவறான விஷயங்களைத் தேடுகிறீர்கள் என்று அர்த்தம். சேப்பியன் சங்கங்கள் போன்ற சேனல்களைத் தேடி செலுங்கள். உங்களுக்கு தேவைப்படும் அறிவுடன் சிந்தனைத் தெளிவும் கிடைக்கும் என்பதற்கு நான் காரண்டி!

– ஸ்ரீதர் சுப்ரமணியம்

 

Read previous post:
0a1d
கப்ஜா – விமர்சனம்

நடிப்பு: உபேந்திரா, ஸ்ரேயா, கிச்சா சுதீப், சிவராஜ்குமார் (சிறப்பு தோற்றம்), முரளி சர்மா, நவாப் ஷா,ஜான் கொக்கேன், கோட்டா சீனிவாசராவ், தேவ்கில் மற்றும் பலர் இயக்கம்: சந்துரு

Close