‘ஜோக்கர்’ சினிமாவும், பீச்சாங்கை முத்தங்களும்!

ஓர் ஆண் என்ற வகையிலான என் காமப் பார்வையில் பெண்களின் பின்பகுதியும், மார்பகங்களும் மிகவும் ஈர்க்கத்தக்கவை. ஆனால், ஒரு பெண் வெளிக்குப் போகும்போது பின்பகுதியையும், குழந்தைக்குப் பாலூட்டும்போது மார்பகங்களையும் யதேச்சையாகக் காண நேரும்போது காம எண்ணம் பொசுக்கப்படுவதையும் உணர்ந்திருக்கிறேன்.

என் டீன் வயது அனுபவம்தான் என் மனநிலைக்கு முக்கியக் காரணம். அப்போது, சென்னையில் உள்ள குடிசைப் பகுதிகள் எனக்கு மிகவும் நெருக்கமானவை. நான் அந்தப் பகுதிகளைக் காலை வேளைகளில் கடக்கும்போதெல்லாம் ஒரு காட்சி மட்டும் கொந்தளிக்க வைத்தது. குடிசைப் பகுதி பெண்கள் குளிக்கும்போதும், அவர்கள் வெளிக்குப் போகும் போதும் எட்ட நின்று வெறித்துப் பார்க்கும் ஆம்பளகள்தான் அந்தக் கோபத்துக்குக் காரணம். வறுமை உள்ளிட்ட காரணங்களால் திறந்தவெளியில் மனிதக் கழிவுகளை வெளியேற்றும்போதும், உடம்பைச் சுத்தப்படுத்த குளிக்கும்போதும் காமப் பார்வையை செலுத்துவது எவ்வளவு பெரிய கேவலம்?

ஆம், எனக்கும் பெண்கள் குளிப்பதை நோக்குவது கிளர்ச்சி தரக் கூடியதுதான். அப்படிப் பார்க்க வேண்டும் என்று தோணுச்சு என்றால் நான் போர்ன் சைட்டுகளுக்குச் சென்று குளியலறைக் காட்சிகளை ரசித்துத் திளைப்பது உண்டு. ஆனால், ஆற்றங்கரையிலோ அல்லது ஏரிக்கரையிலோ அல்லது குடிசைப் பகுதிகளிலோ ஒரு பெண் மார்பளவு துணியைக் கட்டிக் கொண்டு குளிப்பதைக் காண நேரிட்டால் மனம் கனக்கும்.

நான் சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்டவன். எல்லாம் சென்னையிலேயே நடந்தது. குடித்தனத்தையும் சென்னையிலேயே தொடங்கினேன். என் மனைவியை ஊரில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்று பார்த்துவிட்டுத் திரும்ப தயங்கினேன். முதல் ஆறு மாத காலம் மொக்கை காரணங்கள் சொல்லி தள்ளிப் போட்டேன். அப்புறம் நெருக்கம் வெகுவாக கூடிய பின் காரணத்தைச் சொன்னேன். ஊரில் என் வீட்டில் கழிவறை இல்லை என்பதுதான் அந்தக் காரணம். என் தயக்கத்தின் பின்னணியைத் தெரிந்துகொண்ட என் மனைவி ‘பரவாயில்லைடா மேனேஜ் பண்ணிக்கலாம்’னு கூறியது ஒருபோதும் மறக்க முடியாத வார்த்தைகள்.

என் ஊரில் ஓரளவு வசதியானவர்கள் வீட்டில் கூட கழிவறை இல்லாத காலகட்டம் அது. ஓடைக்கு பெண்களும், ஏரிக்கு ஆண்களும் ஒதுங்குவர். இப்போது நிலைமை ஓரளவு மாறிவிட்டது. ஒரு வீட்டில் பெரிதும் கண்டுகொள்ளப்படாத பகுதியாக விளங்கும் ‘கழிவறை’ என்பது அது நம் வீட்டில் இல்லாதபோதுதான் அதன் அருமையும் முக்கியத்துவமும் தெரியும். வேறு வழியின்றி குப்பைத்தொட்டியின் அருகே இருந்துகொண்டு கூட நம் வாய்க்கு உணவளிக்க பசியின் விளைவாக நம் மனித மனம் சம்மதிக்கும். ஆனால், திறந்தவெளியில் கழிக்க வேண்டிய சூழல் என்பது கொடுமை. அதற்கு மனம் மரத்துப் போகணும்.

ஏழைகளின் சொர்க்கமான ‘கழிவறை வசதி’யை ஒரு டாக்குமென்ட்ரியாக சில நிமிடங்கள் சொன்னால்கூட உட்கார்ந்து பார்க்கும் காலகட்டத்தை நாம் எப்போதோ இழந்துவிட்டோம். அதேபோல், கருணைக்கொலை என்பதும் மிகப் பெரிய உணர்வுபூர்வ பிரச்சினை. இந்த இரண்டையும் ஒன்றிணைத்து இயல்பு மீறாமல் உருவாக்கப்பட்ட ‘ஜோக்கர்’ எனும் சினிமா என்னை வெகுவாக ஈர்த்தது.

உண்மையில், ஜோக்கர் ட்ரெய்லர் பார்த்து வருத்தத்தைவிட கோபமே மேலிட்டது. வெறும் வார்த்தைகளால் குத்தப்படும் பிரச்சாரப் படம் போல தோற்றம். ஆனால், படம் பார்த்து முடித்தபோது அற்புத சினிமா அனுபவம் கிட்டியது.

படம் தொடங்கியதில் இருந்தே இயக்குநர் ராஜுமுருகனின் தனித்துவங்களை கண்டுகொள்ள முடிந்தது. குரு சோமசுந்தரம் மற்றும் உறுதுணை கதாபாத்திரங்கள் குறித்தும், அவர்களது செயல்பாடுகள் குறித்தும் எஸ்டாபிளிஷ் செய்த விதமும் அதில் சமகால அரசியலை நையாண்டியுடன் அணுகிய முறையையும் வெகுவாக ரசித்தேன்.

ப்ரொட்டாகனிஸ்ட்டின் தற்போதைய நிலைக்கு வலுவான பின்னணி இருக்கிறது என்பதை ‘என்னங்க சார் உங்க சட்டம்’ பாடல் முடிந்தவுடனேயே உணர்ந்துவிட்டேன். அதன்பிறகும், எஸ்டாபிளிஷ்மெண்ட் நீடிக்கச் செய்தது சற்றே சோர்வடைய வைத்தாலும், அதன் தேவையை உணர முடிந்தது. இடைவேளை என்ற கான்செப்ட் இல்லாமல் படம் பார்த்திருந்தால், அந்த முக்கியப் பகுதிகளின் தாக்கம் இன்னும் வலுவலுடைந்திருக்கும் என்று நினைத்தேன்.

ஜோக்கர் போன்ற படங்கள்தான் தமிழில் உலக சினிமா. அதேநேரத்தில், இது திரை விழாக்களில் ஒரே ஒரு ஷோ மட்டும் போட்டு அரங்கை நிரப்பி அறிவுஜீவிகள் என்று கூறப்படுபவர்கள் மட்டுமே கொண்டாடும் படைப்பு அல்ல. உலக மக்களுக்கு உள்ளூர் மக்களின் வாழ்க்கையைக் காட்டும் சினிமா படைப்பாகவும், உள்ளூர் மக்களுக்கு தங்கள் நிலையைக் காட்டும் திரைக் குரலாகவும் இருக்கிறது.

ஆங்கிலத்தில் ஸ்பெல்லிங் கூட சரியாகத் தெரியாத அர்ஜெண்டினா என்ற நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு சினிமாவைப் பார்த்து, அங்கிருக்கும் என் சக மனிதனின் வாழ்க்கை முறையையும், உணர்வுகளையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதுதான் உலக சினிமா. இங்கு நம்மவர்களால் உருவாக்கப்படும் 95 சதவீத தமிழ் சினிமாவை தமிழ்நாடு அறியாத உலக மக்கள் காண நேர்ந்தால்… அவர்கள் நம் வாழ்வியலை எப்படிப் புரிந்துகொள்வார்கள்?

அப்படி ஒரு கொடுமையான நிலைக்குத் தள்ளப்பட்ட தமிழ் சினிமாவில், திரை மொழியை மதித்து செயல்படும் பட்டியலில் ராஜுமுருகனும் இடம்பெற்றுவிட்டார். அர்ஜெண்டினாவில் வாழும் ஒரு சினிமா ரசிகன் ‘ஜோக்கர்’ பார்க்க நேர்ந்தால் நிச்சயம் அவனுக்கு பலன் தரும் அனுபவம் கிடைக்கும்.

சினிமாவில் பாடல்கள் கூடாது என்ற அதிதீவிர அறிவுஜீவிகளின் வாதம் எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. நம் சினிமாவின் தனித்துவம் அது. அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைத்தான் யோசிக்க வேண்டும் என்பேன். ராஜுமுருகனின் சினிமாவில் உதடுகள் அசைக்காமல் அரங்கேற்றப்படும் பாடல்கள்தான் சினிமா மீது அவர் கொண்டிருக்கும் ஈடுபாட்டுக்கு சான்று.

ஜோக்கரின் இறுதிப் பகுதியில் கேமராவைப் பார்த்து பேசியபோது கொஞ்சம் உறுத்தியது. ஆனால், சொல்லப்பட்ட கருத்துகள் நச்சென உரைத்தது. ஜோக்கரின் கடைசி நிலையைப் பார்த்து அவர்கள் இருவரும் நடந்து சென்று அமர்ந்த காட்சியே எல்லாவற்றையும் கன்வே செய்துவிட்டது. எனினும், அந்த இடத்தில் வைத்த வசனங்கள், நம் எளிய மனிதர்களுக்காக. வசனங்கள் மூலம்தான் திரைப்படத்தை ரசிக்கக் கற்றுக்கொண்ட நம் மக்களுக்கு, ஒரே ராத்திரியில் திரைமொழியைச் சொல்லித்தர முடியாது. எனவே, வழக்கமான படங்கள் போல் பேசியே புரியவைப்போம் என்ற ராஜுமுருகனின் சமரச உத்தியின் உன்னதம் உணர்ந்தேன். அதுவும், வழக்கமான பஞ்ச்களாக அல்லாது எளிய சொற்களில் நெஞ்சைக் குத்திய விதம் அற்புதம்.

எளிய மக்களுக்காக அந்தக் காட்சியை வைத்துவிட்டு, கடைசியில் அந்த ஒற்றை ஃப்ரேம் மூலம் தன் சினிமா மொழியை சினிமா ஆர்வலர்களுக்காக நிறுவியதும், அதை எளிய பார்வையாளனும் புரிந்துகொள்ளச் செய்ததும் சிறப்பு.

ஓவர் ஆக்டிங்தான் ஆகச்சிறந்த நடிப்பு என்று தப்புத் தப்பாக நம்பியே சினிமாவை ரசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட தமிழ் மக்களில் பெரும்பாலோனோருக்கு, ‘கச்சித நடிப்பு’ என்றால் என்ன என்பதைக் காட்டும் வகையில், தன் கதாபாத்திரத்தை எம்ப்பத்தைஸ் செய்து பிரித்து மேய்ந்திருக்கும் குரு சோமசுந்தரம் அவர்களை தமிழ் சினிமா தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் ரம்யா பாண்டியன் உள்ளிட்ட அனைவரின் பங்களிப்புமே சிறப்பு.

சினிமா எனும் மகத்தான ஊடகத்தில் தங்கள் சமூக அக்கறையை நேர்மையாக பதிவு செய்பவர்களை எனக்கு ரொம்பவே பிடிக்கும். அகிராவின் ‘I live in fear’, ரித்விக் கட்டக்கின் ‘Mega Dhaka Tara’ முதலான படங்களைப் பார்த்து முடித்தப் பிந்தனைய உணர்வுதான் ஜோக்கர் பார்த்து முடித்ததும் நிலவியது.

தீவிர சினிமா ஆர்வலர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக திரை மொழியைக் கையாள்வதில் காட்டிய சிரத்தையைவிட, எளிய மக்களுக்கு கொண்டுபோய் சேர்ப்பதற்காக திரை மொழிகளை எல்லாம் தூக்கி தூரப் போட்டுவிட்டு நெத்தியடியாக சொல்லும் விதமாக வசனங்களில் தெறிக்கவிட்டது என்பதை ராஜுமுருகன் வலிந்து செய்துகொண்ட சமரசமாகவே தோணுது.

நேரமின்மை காரணமாக ‪#‎Joker‬ குறித்து விரிவாக எழுத முடியாமல் போவது வருத்தம்தான். எனினும் இப்போதைக்கு இதைப் பதிவு செய்ய விழைந்தேன்.

படத்துக்கு இதைவிட பொருத்தமான தலைப்பு இருக்காது என்பதை உணர்ந்து வரிவிலக்கு மீது அக்கறை கொள்ளாமல் ஜோக்கர் என தலைப்பிட்டதில் ஆரம்பித்து பெரிய வணிகத்துக்கான எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் இயக்குநரின் தேவையை உணர்ந்து இப்படத்தைத் தயாரித்தவர்கள், மக்களுக்கான மக்கள் படைப்பை சினிமாவாக கொடுத்துள்ள இயக்குநர் ராஜூமுருகன் உள்ளிட்ட ஜோக்கர் படத்துக்காக பங்காற்றிய ஒவ்வொருவரின் பீச்சாங்கையிலும் முத்தமிடுகிறேன்.

கீட்சவன்

சினிமா விமர்சகர்

Courtesy: thetimestamil.com

Read previous post:
m11
“அழகான த்ரில்லர் பேய் கதை ‘மெர்லின்”!

ஜேஎஸ்பி பிலிம் ஸ்டூடியோஸ் சார்பில், ஜே.சதீஷ்குமார் தயாரிப்பில், ஜே.பாலாஜி இணை தயாரிப்பில், வ.கீரா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘மெர்லின்’. நட்புக்காக ‘அட்டக்கத்தி’ தினேஷ் நடிக்கும் இப்படத்தில், கதாநாயகனாக

Close