களவாடிய பொழுதுகள் – விமர்சனம்

‘எவனோ எழுதிய கதையை எவனெவனோ உல்டா பண்ணி படம் எடுக்கிறான். அப்படியிருக்கும்போது, நாம் எழுதிய ‘அழகி’ வெற்றிப் படக்கதையை நாமே உல்டா பண்ணி புதுப்படம் எடுத்தால் என்ன?’ என்று இயக்குனர் தங்கர்பச்சான் “புரட்சிகரமாக” சிந்தித்து செயலில் இறங்கியதன் விளைவு – ‘களவாடிய பொழுதுகள்’.

ஒருகாலத்தில் உருகி உருகி காதலித்த காதலர்கள், பின்னர் பிரிந்து வெவ்வேறு திசைகளில் பயணித்து, திருமணம், குடும்பம் என்றானபின், பின்னொரு காலத்தில் எதிர்பாராத விதமாக மீண்டும் சந்திக்க நேர்ந்தால் என்ன ஆகும் என்பது ‘அழகி’ படத்தின் கதைக்கரு. அதுதான் ‘களவாடிய பொழுதுகள்’ படத்தின் கதைக்கருவும்.

இரண்டு படங்களுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்னவென்றால், ‘அழகி’ படத்து நாயகன் பார்த்திபனை இதில் நாயகி பூமிகாவாகவும், ‘அழ்கி’ நாயகி நந்திதாதாஸை இதில் நாயகன் பிரபு தேவாவாகவும், ‘அழகி’ பட தேவயானியை இதில் பிரகாஷ்ராஜ் ஆகவும் ‘பால் மாற்றம்’ செய்திருக்கிறார் இயக்குனர் தங்கர்பச்சான். இந்த பால் மாற்றம் கோருகிற உரிய மாற்றங்களை கதையிலும், காட்சிகளிலும் செய்து, கிளைமாக்ஸை மட்டும் ஏறக்குறைய அப்படியே வைத்துக்கொண்டு, ஒரு நெகிழ்ச்சியான காதல் கதையை, பார்வையாளர்களின் உள்ளத்தை உருக்கும் வகையில் திரையில் கொடுத்திருக்கிறார் அவர்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த கால்டாக்ஸி டிரைவர் பிரபுதேவா, சாலை விபத்தொன்றில் சிக்கி ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடக்கும் சென்னை தொழிலதிபர் பிரகாஷ்ராஜை மனிதாபிமான அடிப்படையில் மீட்டு மருத்துவமனையில் சேர்க்கிறார். அப்போது தனது கல்லூரிப் பருவத்து காதலி பூமிகாவின் கணவர் தான் பிரகாஷ்ராஜ் என்பது பிரபுதேவாவுக்கு தெரிய வர அதிர்ச்சியடைகிறார். தனது முன்னாள் காதலியை, அவருக்குத் தெரியாமலே பார்த்துவிட்ட பிரபுதேவா, சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து நழுவி போய்விடுகிறார்.

தன் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு நன்றி செலுத்தும் வகையில் ஒரு பெரிய தொகையை தன் மனைவி பூமிகா மூலம் கொடுத்தனுப்புகிறார் பிரகாஷ்ராஜ். இதற்காக கோவை வரும் பூமிகா, தனது முன்னாள் காதலர் பிரபு தேவா தான் தன் கணவரை காப்பாற்றியவர் என அறிந்து நெக்குருகுகிறார். மனைவி, குழந்தை சகிதம் பிரபு தேவா கஷ்ட ஜீவனம் நடத்திக்கொண்டிருப்பது கண்டு மனம் இரங்கி, தன் கணவரிடம் சொல்லி தங்கள் நிறுவனத்திலேயே அவருக்கு ஒரு நல்ல வேலை வாங்கித் தருகிறார். பிரபு தேவா குடும்பம் சென்னைக்கு இடம் மாறுகிறது.

பிரபு தேவா மீது கொண்டிருந்த காதல் மீண்டும் உயிர் பெற, அதை வெளிப்படுத்த முடியாமல் தவித்து தத்தளிக்கிறார் பூமிகா. அதே காதலுணர்வு பிரபு தேவாவுக்கு இருந்தபோதிலும், அவர் அதை கட்டுப்படுத்திக்கொண்டு பூமிகாவிடமிருந்து விலகியே இருக்கிறார். இதனால் ஏற்படும் மனப்போராட்டங்கள், வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. இதற்கு நிரந்தரத் தீர்வாக, பிரபு தேவா தன் குடும்பத்துடன் சொல்லாமல் கொள்ளாமல் (‘அழகி’ கிளைமாக்ஸ் நந்திதாஸ் போல) பூமிகாவின் வாழ்க்கையை விட்டு வெளியேறி வெகுதூரத்துக்குப் போய்விடுகிறார். சுபம்.

நெஞ்சுக்கு நெருக்கமாக, நிஜம் போல் காட்டப்படும் காதல் கதைகள் என்றும் பசுமையானவை என்பார்கள். அத்தகைய ஒரு காதல் கதையில் சற்று நேரம் கிறங்கிக் கிடப்பதற்காகவும், வழக்கத்துக்கு மாறான கதாபாத்திரத்தில் பிரபு தேவாவை பார்ப்பதற்காகவும், பூமிகா, பிரகாஷ்ராஜ் ஆகியோரின் வித்தியாசமான பாத்திர படைப்புகளுக்காகவும் ‘களவாடிய பொழுதுகள்’ படத்தை நிச்சயம் பார்க்கலாம். ரசிக்கலாம்.