பலூன் – விமர்சனம்
ஒரே டெம்ப்ளேட்டில் பழிவாங்கும் பேய் படங்கள் எத்தனை வந்தாலும், அத்தனையையும் சலிக்காமல் பார்ப்பேன் என சபதம் எடுத்திருப்பவரா நீங்கள்? ஆம் எனில் உங்களுக்காகவே வெளிவந்திருக்கிறது ‘பலூன்’ திரைப்படம்.
திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் நாயகன் ஜெய்யும், அவரது காதலியான நாயகி அஞ்சலியும் திருமணம் செய்துகொள்கிறார்கள். எனினும், ஜெய் ஒரு படமாவது இயக்கிய பிறகுதான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பாக்கியராஜ்தனமாக முடிவெடுத்து வைராக்கியமாக இருக்கிறார்கள்.
பேய் படம் எடுக்க விரும்பும் ஒரு சினிமா தயாரிப்பாளர், ஜெய்யிடம் ஒரு பேய்கதை எழுதி வரச் சொல்கிறார். ஊட்டியில் ஒரு பேய் வீடு இருப்பதைத் தெரிந்துகொள்ளும் ஜெய், அது பற்றி விசாரித்து கதைக்குத் தேவையான தகவல்கள் திரட்டுவதற்காக தன் மனைவி அஞ்சலி, தன் அண்ணன் மகனான சிறுவன் பப்பு, தன் நண்பர்கள் யோகி பாபு, கார்த்திக் யோகி ஆகியோருடன் ஊட்டிக்குச் சென்று, அந்த பேய் வீட்டுக்கு எதிரே உள்ள ரெஸ்ட் ஹவுசில் தங்குகிறார்.
பலூன்களை மையமாகக் கொண்டு அமானுஷ்ய பயமுறுத்தல்கள் செய்யும் பேய்களில் ஒன்று ஜெய்யின் அண்ணன் மகன் பப்புவுக்குள்ளும், இன்னொரு பேய் அஞ்சலிக்குள்ளும் புகுந்துகொள்கின்றன. இந்த பேய்களுக்கும், ஜெய்க்கும் என்ன சம்பந்தம்? அவற்றின் பிடியிலிருந்து ஜெய் வகையறாக்கள் எப்படி மீண்டார்கள்? ஜெய் திரைப்பட இயக்குனர் ஆனாரா, இல்லையா? என்பது மீதிக்கதை.
கதையில் சமகாலத்தில் ஒரு ஜெய், பிளாஷ்பேக்கில் ஒரு ஜெய் என இரண்டு ஜெய்கள். சமகால ஜெய், அஞ்சலியுடன் காதல் ரசம் சொட்டச் சொட்ட நடித்திருக்கிறார். பிளாஷ்பேக் ஜெய், ஜனனி அய்யருடன் காதல், சாதிப்பிரச்சனை, கொலை என வேறு ரூட்டில் பயணித்து, அதற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கிளைமாக்ஸ் சண்டையில் பின்னியெடுத்திருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஞ்சலியை தமிழ் திரையில் மீண்டும் பார்த்தது கண்ணுக்குக் குளிர்ச்சி. ப்ளாஷ்பேக்கில் வரும் ஜனனி அய்யரை இன்னும் கொஞ்சம் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம்.
வழக்கம் போல யோகி பாபு காமெடியில் கலக்கியிருக்கிறார். அவர் பேசும் வசனங்களுக்கு மொத்த திரையரங்கமும் கைதட்டி சிரித்து மகிழ்கிறது. சிறுவன் பப்புவின் காமெடி காட்சிகளும் அருமை.
டைட்டில் கார்டு போடும்போது ‘இந்தப் படம் இன்ன இன்ன ஆங்கிலப் பேய்ப் படங்களைப் பார்த்து எடுக்கப்பட்டது’ என்று துணிச்சலாக சொன்னதற்காக இயக்குநர் சினிஷை பாராட்டலாம். இப்படத்தில் உள்ள நிறை குறைகளுக்கெல்லாம் அந்த ஆங்கில பேய் படங்களின் இயக்குனர்களே பொறுப்பு என்பதால், இயக்குனர் சினிஷை விட்டுவிடலாம்.
சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவும், ரூபனின் எடிட்டிங்கும் யுவன்சங்கர் ராஜாவின் இசையும் படத்துக்கு பலம். பாடல்கள் சுமார் ரகம்.
‘பலூன்’ – உயரே பறக்க இன்னும் கொஞ்சம் ஊதியிருக்கணும்!
நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவதற்குரிய பெரிதாக எந்தக் காட்சிகளும் ஜெய்க்கு படத்தில் இல்லை. அஞ்சலியுடன் அழகாக ரொமான்ஸ் செய்து கொண்டே சாதாரணமா நடித்து விடுகிறார். கிளைமாக்சில் மட்டும் ஆக்ஷனில் அதிரடி காட்டுகிறார்.
படத்தை இடைவேளை வரை கலகலப்புடன் நகர்த்துகிறார் யோகி பாபு. அதன் பின் பிளாஷ் பேக்கில் வரும் ஜெய், அவருடைய காதலியாக வரும் ஜனனி ஐயர் என காதல், சாதி, மோதல், கொலை என வேறு தளத்திற்குக் கதை பயணித்து பின் பழி வாங்கலில் முடிகிறது.
யுவன்ஷங்கர் ராஜா படத்தின் டைட்டில் இசையில் இருந்தே மிரட்டலை ஆரம்பித்துவிடுகிறார். ஒளிப்பதிவும், அரங்க அமைப்பும், படத் தொகுப்பும் மேக்கிங்கில் நிறைவாக அமைந்துள்ளது.
எந்தப் புதுவிதக் காட்சிகளும் இல்லாத வழக்கமான பயமுறுத்தும் பேய்ப் படம்.
# # #
குட்டி, சார்லி என இரு கதாபாத்திரங்களில் நாயகன் ஜெய் நடித்திருந்தாலும் இயல்பு, பரபரப்பு என சகல காட்சிகளிலும் ஒரே வகை உணர்ச்சியையே வெளிப்படுத்துகிறார்.
‘‘பசங்க லவ்வுக்கு எவ்ளோ பண்றாங்க; இந்தப் பொண்ணுங்க மட்டும் ஏன் இப்படி இருக்கீங்க?”என ஜனனி வெள்ளந்தியாக பேசும் இடம் கவிதை.
‘‘ஃபாதர் மேட்டுப்பாளையம் சென்றுள்ளார்’’ என்றதும், ‘‘பிளாக் தண்டர் போயிருக்காரா?” என கேட்பது தொடங்கி, முதல் பகுதி முழுவதும் வரும் பகடிகள் திரையரங்கை கலகலக்க வைக்கின்றன. இதே உழைப்பை இரண்டாம் பகுதிக்கும் செலவிட்டிருக்கலாம்.