சங்கு சக்கரம் – விமர்சனம்
பேருக்குத் தான் இது பேய் படம். இதில் பேய்கள் இருக்கத் தான் செய்கின்றன. என்றாலும், இது ஜாலியான குழந்தைகள் படம். சிறுவர் – சிறுமியரைக் கொண்டு பேய்களிடம் சரமாரியாக கேள்விகள் கேட்க வைத்து, பேய்களையே திக்குமுக்காடச் செய்து, நம்மை சிரிக்க வைக்கும் படம் பேய் மற்றும் பேய் உலகம் பற்றி காலங்காலமாக கற்பனையாக கட்டப்பட்டிருக்கும் பிம்பங்களை இப்படம் கேள்விக்கு உள்ளாக்குகிறது. அதுபோல் பேய்களைக் கொண்டு மனித சமூகத்தின் அவலங்களை, அலங்கோலங்களை பிட்டுப் பிட்டு வைத்து, நம்மை சிந்திக்கவும் வைக்கிறது.. சமீபகாலத்தில் வதவதவென்று எத்தனையோ பேய் படங்கள் தமிழில் வெளிவந்துள்ள போதிலும், சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கக் கூடிய, குழந்தைகளும் ரசிக்கக்கூடிய ‘சங்கு சக்கரம்’ போன்ற கருத்தாழம் மிக்க ஒரு சிறந்த பேய் படம் வந்ததே இல்லை என்று அடித்துச் சொல்லலாம்.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கிறது ஒரு பேய் பங்களா. அந்த பங்களாவுக்குள் தாய் பேய் (புன்னகைப்பூ கீதா), அதன் பாசத்துக்குரிய மகள் பேய் (பேபி மோனிக்கா) என இரண்டு பேய்கள் இருக்கின்றன. அந்த பேய்களை வெளியேற்றிவிட்டால் பங்களாவை நல்ல விலைக்கு விற்கலாம் என்று கணக்குப் போடும் ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர், அப்பேய்களை துரத்தியடிப்பதற்காக இரண்டு மந்திரவாதிகளை உள்ளே அனுப்புகிறார்.
குழந்தைகளைக் கடத்தி, அவர்களின் பெற்றோர்களை மிரட்டி பணம் பறிக்கும் ஒரு கடத்தல்காரர் (திலீப் சுப்பராயன்), வீதியில் விளையாட இயலாமல் தவிக்கும் ஏழு சிறுவர் – சிறுமியரை, தனது கையாளான பஞ்சுமிட்டாய் வியாபாரி மூலம் ஏமாற்றி அந்த பேய் பங்களாவுக்குள் வர வைக்கிறார்.
பல கோடி மதிப்புள்ள சொத்துக்கு சொந்தக்காரன் ஒரு சிறுவன் (மாஸ்டர் நிஷேஷ்). அவனை கொன்றுவிட்டு, பேய் கொன்றுவிட்டதாக நாடகமாடி, சொத்துக்களை அபகரிக்கலாம் என்ற திட்டத்துடன் அச்சிறுவனை அந்த பேய் பங்களாவுக்கு அழைத்து வருகிறார்கள் அவனது கார்டியன்கள்.
காதலியுடன் (தினத்தந்தி பாஷையில்) “உல்லாசம் அனுபவிப்பதற்காக”, நைசாக பேசி அவரை அழைத்துக்கொண்டு பேய் பங்களாவுக்கு வருகிறார் ஒரு அவசரக்குடுக்கை காதலர்.
இப்படி வெவ்வேறு திட்டங்களுடன் தனித்தனியே பேய் பங்களாவுக்குள் வரும் இவர்கள் அனைவரையும் அங்குள்ள தாய் – சேய் பேய்கள் என்ன செய்கின்றன? இவர்கள் பேய்களை என்ன செய்கிறார்கள்? என்பது தான் திகிலும், நகைச்சுவையும் கலந்த மீதிக்கதை.
இப்படியொரு வித்தியாசமான கான்செப்ட்டை கையில் எடுத்து, பெருமளவுக்கு சிறுவர் – சிறுமியரை முதன்மைப்படுத்தி, சுவாரஸ்யமாக திரைக்கதையை நகர்த்திச் சென்றதற்காக அறிமுக இயக்குனர் மாரிசனை எத்தனை பாராட்டினாலும் தகும். மேலும், குழந்தைகளை இயல்பாக நடிக்க வைத்து, அவர்களின் சுட்டித்தனங்களை அப்படியே பார்வையாளர்களுக்கு கடத்தியிருப்பது சிறப்பு.
படத்தில் நடித்துள்ள அத்தனை குழந்தைகளுமே போட்டி போட்டு அருமையாக நடித்துள்ள போதிலும், மகள் பேயாக வரும் அழகிய பேபி மோனிக்கா, நம் இதயங்களில் தனியாக சிம்மாசனம் போட்டு ஒய்யாரமாக அமர்ந்துவிடுகிறாள். அவள் கண்களில் தெரியும் வெகுளித்தனமும், சோகமும் எளிதில் நம் நினைவை விட்டு நீங்காது. அதுபோல் சரமாரியான கேள்விக்கணைகளால் பேய்களை துளைத்தெடுக்கும் மாஸ்டர் நிஷேஷ் நடிப்பும் அசால்டு.
தாய் பேயாக வரும் புன்னகைப்பூ கீதா, தரையில் கால் பாவாமல் அந்தரத்தில் தொங்கியபடியே சுழன்றலைந்து பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். திலீப் சுப்பராயன், ராஜா உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தங்கள் பங்குக்கு நம்மை விலா நோக சிரிக்க வைக்கிறார்கள்.
இப்படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய முக்கிய அம்சம் – வசனம். எடுத்துக்காட்டுக்கு சில: “பணம் நிரந்தரம் இல்லேன்னு சொன்னவனெல்லாம் இன்னிக்கி உயிரோட இல்ல. ஆனா, பணம் நிரந்தரமா இருக்குல்ல!”; “ஓ மை காட்! நீ தூண்லயும் இருப்ப, துரும்புல்யும் இருப்பன்னு சொல்றாங்க. ஆனா, பேய்வீட்டுல மட்டும் ஏன் இருக்க மாட்டேங்கற?”; “நம்ப வைக்கப்பட்ட பொய் தாண்டா லாஜிக்”; “பேய் மோசம், பேய் மோசம்னு சொல்றாங்களே, எந்த பேயாவது பொய் பேசியிருக்கா? செயினை திருடியிருக்கா?” “தமிழ், தெலுங்கு, இங்கிலீஷ்னு பல மொழி பேசுறவங்க செத்து பேய் உலகத்துக்கு போறாங்களே… அங்க எல்லாரும் என்ன மொழி பேசுவாங்க?” “உன்னைப் பாத்தா எங்க சாதி பேய் மாதிரி இருக்கு, என்னை விட்ரு” என்று ஒருவன் கெஞ்ச, அதற்கு பேய், “ஏண்டா, பேய்கள்டயும் சாதி பாக்க ஆரம்பிச்சிட்டீங்களாடா?”…. இப்படி ரசிப்புக்குரிய ஏராளமான வசனங்கள் தெறிக்கவிடப்பட்டிருக்கின்றன.
‘சங்கு சக்கரம்’ – குழந்தைகளுடன் ஜாலியாக கண்டு களிக்கலாம்!