உள்குத்து – விமர்சனம்

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் அதிமுகவினரே இரட்டை இலையை தோற்கடித்தார்களே… அதற்குப் பெயர் தான் உள்குத்து. திமுகவினரே உதயசூரியனை டெபாசிட் இழக்கச் செய்தார்களே… அதற்குப் பெயரும் உள்குத்து தான். வெளியில் நட்புடனும், உள்ளுக்குள் பகைமையுடனும் இயங்குவது என்பது தான் உள்குத்து என்பதற்கான விளக்கம். கதையின் நாயகனே இப்படி இரண்டு விதமாய் இயங்கினால்…? அது தான் ‘உள்குத்து’ திரைப்படம்.

ஆதரிக்க ஆள் இல்லாதவராய், கடலோர மீனவ குப்பத்துக்கு வருகிறார் நாயகன் தினேஷ். அங்கு தன்னை ஒரு தாதா என்று பீலா விட்டுத் திரியும் காமெடி பீஸ் பாலசரவணன், தினேஷூக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார். தினேஷூக்கும், பாலசரவணனின் தங்கையான நாயகி நந்திதாவுக்கும் காதல் அரும்புகிறது.

பாலசரவணனைப் போல் இல்லாமல், நிஜமாகவே ஒரு டெரர் தாதாவாக இருக்கிறார். சரத் லோகிதஸ்வா. அவரது மகன் திலீப் சுப்பராயன், கந்துவட்டிக்கு கடன் கொடுத்துவிட்டு, கடனை திருப்பிச் செலுத்த இயலாத கடனாளிகளை கடுமையாக துன்புறுத்தி வருகிறார்.

ஒரு மோதலில் பாலசரவணனை திலீப் சுப்பராயனின் கையாள் ஒருவன் செமத்தையாக ‘சுளுக்கு’ எடுக்கிறான். அவனை நண்பனுக்காக அடித்துத் துவைக்கிறார் தினேஷ். கையாளுக்காக வரிந்துகட்டிக் கொண்டு வரும் திலீப் சுப்பராயனையும் நையப் புடைக்கிறார். இதனால் ஆவேசம் கொள்ளும் திலீப் சுப்பராயனின் தந்தை சரத் லோகிதஸ்வா, தினேஷை கொலை செய்யத் துடிக்கிறார். ஆனால், அவரிடம் தினேஷ் உருக்கமாகப் பேசி, சமரசம் செய்து, திலீப் சுப்பராயனின் நண்பராகிவிடுகிறார். இப்படி நட்புடன் இருக்கும்போதே ஒருநாள் திடீரென்று திலீப் சுப்பராயனை தீர்த்துக்கட்டுகிறார் தினேஷ்.

திலீப் சுப்பராயனுடன் வெளியில் நட்புடனும், உள்ளுக்குள் தீராப்பகையுடனும் தினேஷ் இருக்கக் காரணம் என்ன? முன்கதை என்ன? கிளைமாக்ஸ் என்ன? என்பது ‘உள்குத்து’ படத்தின் மீதிக்கதை.

நாயகன் தினேஷ் படம் முழுக்க யதார்த்தமான, பக்குவமான நடிப்பை சிறப்பாக வெளிப்ப்டுத்தி இருக்கிறார். குடும்பப் பாசத்தில் உருகுவது, பாலசரவணனை தனது குரு எனச் சொல்லி கலாய்ப்பது, அதிரடி சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷமாக கெத்து காட்டுவது என தன் கதாபாத்திரத்துக்கு நிறைவான பங்களிப்பைச் செய்திருக்கிறார் தினேஷ்.

‘கடலரசி’ என்ற பெயரில், அந்த பெயரைப் போலவே அழகாக வருகிறார் நாயகி நந்திதா. ஆனால், நாயகனை காதலிப்பது மட்டும் தான் படத்தில் அவருக்கான வேலை என்பதால், அதை மட்டும் கச்சிதமாகச் செய்துவிட்டுப் போகிறார்.

“சுறா சங்கர்னா சும்மாவா…” என்று தன்னைப் பற்றி தானே சீன் போட்டுத் திரியும் காமெடி தாதா கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார் பாலசரவணன். தனக்குக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி கைதட்டல்களை அள்ளியிருக்கிறார்.

சரத் லோகிதஸ்வா, திலீப் சுப்புராயன், ஜான் விஜய், சாயா சிங், ஸ்ரீமன், செஃப் தாமு உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்கள் அனைவரும் தங்கள் பாத்திரம் உணர்ந்து அளவாய் நடித்து, கதை நகர்வுக்கும், திருப்பங்களுக்கும் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.

இன்றைய தமிழ் சமூகத்தில் கொழுந்துவிட்டு எரியும் கந்துவட்டிக் கொடுமையை மையமாக வைத்து, சஸ்பென்ஸ் கலந்த ஆக்சன் ரூட்டில் திரைக்கதை அமைத்து, வெகுஜன சினிமாவுக்கான அத்தனை தகுதிகளுடனும் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் ராஜூ. பாராட்டுக்கள்.

பி.கே.வர்மா ஒளிப்பதிவு, ஜஸ்டின் பிரபாகரன் இசை, பிரவீனின் படத்தொகுப்பு போன்ற தொழில்நுட்ப நேர்த்திகள் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.

உள்குத்து – செம குத்து!