“விளையாட்டு வீரர்களுக்கு இறைச்சி உணவு கட்டாயம்”: சிந்துவின் பயிற்சியாளர் அதிரடி!

பாரதிய பார்ப்பனியர்கள் பீற்றிக்கொள்ளும் இந்திய தாவர உணவு முறை, விளையாட்டு வீரர்களுக்கு உகந்தது அல்ல; அவர்களுக்கு இறைச்சி உணவு கட்டாயம் அவசியம் என்பது, ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிவி.சிந்துவின் பயிற்சியாளரும், முன்னாள் பேட்மிண்டன் வீரருமான பி.கோபிசந்த் நிலைப்பாடு. தன்னுடைய பயிற்சியில் கட்டாயம் இறைச்சி உணவுகளை உண்ண வேண்டும் என விளையாட்டு வீரர் – வீராங்கனைகளை அவர் வலியுறுத்துகிறார்.

இது குறித்து ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:

“கோபிசந்த் பேட்மிண்டன் அகாடமியில் தாவர உணவு மட்டுமே உண்பவர்கள் சேர்ந்தாலும்கூட, பயிற்சியின் ஒரு பகுதியாக இறைச்சி உணவுகள் உண்பது கட்டாயம் ஆக்கப்படும். ஏனெனில், இறைச்சி உணவுகளைத் தவிர்க்கச் சொல்லும் இந்திய தாவர உணவு முறையால், விளையாட்டுக்கான போதுமான கலோரியை தர முடியாது. சாய்னா நைவால், சாய்நாத் போன்ற தாவர உணவு மட்டுமே உண்டவர்களும் இங்கு வந்தபிறகு, குறைந்தபட்சம் கோழிக்கறியையாவது கட்டாயமாக உண்ண வைக்கப்பட்டனர். ஆரம்பத்தில் மறுப்பவர்கள்கூட இறைச்சி உணவு உண்ண ஆரம்பித்த பிறகு, அதை விரும்புகிறார்கள்” என்கிறார் அகாடமியின் பயிற்சியாளர் ஒருவர்.

“புரோட்டீன் சத்துள்ள கோழிக்கறி, உடல் எடை இழப்பை ஈடுகட்டி, மினரல்களையும், விட்டமின்களையும் தரக்கூடியது. ரெட் மீட் எனப்படும் மாட்டிறைச்சி இரும்புச் சத்து நிறைந்தது. உடலில் உள்ள சத்துக்களை தக்க வைப்பதோடு, விளையாட்டின்போது ஏற்படும் தசை பிரச்சனைகளை இறைச்சியில் உள்ள அமினோ ஆசிட் சரிசெய்யக்கூடியது” என்கிறார் அவர்.

“சீன பயிற்சி முறையை பின்பற்றும் கோபிசந்த், பயிற்சி வகுப்புகளில் தரப்படும் உணவில் இறைச்சி இருக்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கியுள்ளார். அவரே நேரில் வந்து என்னமாதிரியான உணவுகள் தரப்படுகின்றன என சோதிப்பார்” என்று சொல்லும் பயிற்சியாளர், “சாய்னா – சிந்துவின் வெற்றி, பலரின் உணவுப்பழக்கம் குறித்த நம்பிக்கையை உடைக்கும்” என நம்புகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.