“இடிக்கும்போது காட்டிய அக்கறையை கட்டும்போது அதிகாரிகள் காட்டியிருந்தால்…?”

“அரசு அதிகாரிகள் கட்டடத்தை இடிக்கும்போது காட்டிய அக்கறையில் சிறிதளவாவது அது கட்டப்படும்போது காட்டியிருந்தால்…?” என்ற ஆதகங்கம் மிகுந்த கேள்வி சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.

சென்னை போரூர் அருகே மௌலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த இரண்டு 11 அடுக்குமாடி கட்டடங்களில் ஒன்று, கடந்த 2014 -ஆம் ஆண்டு ஜூன் 28 -ஆம் தேதி சரிந்து தரைமட்டமானது. இதில் கட்டுமான ஊழியர்கள் 61 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, உள்வெடிப்பு முறை (இன்ப்ளோஷன்) மூலம் வெடிக்க செய்து கட்டடத்தை இடிக்க, திருப்பூரில் உள்ள “மேக்லிங்க்’ கட்டுமான நிறுவனத்துடன் சிஎம்டிஏ ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி, நேற்று (நவம்பர் 2 ஆம் தேதி) மாலை கட்டடத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது.

கட்டடம் இடிப்பதையொட்டி, மௌலிவாக்கம் ராஜராஜன் நகர் தெரு, ராஜலட்சுமி நகர், தாமரை நகர் பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள், மதனந்தபுரத்தில் ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் தங்கவைக்கப்பட்டனர். அதையடுத்து, 100 மீட்டருக்குள் யாரும் நுழையாதவாறு அந்தப் பகுதியை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்காக, 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அத்துடன் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன.

கட்டடத்தை இடிப்பதற்காக செவ்வாய்க்கிழமை மாலை லாரியில் வெடிபொருள் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு, புதன்கிழமை காலை முதல் கட்டடத்துக்குள் துளையிடப்பட்ட இடங்களில் வெடிபொருள் நிரப்பப்பட்டது. இதற்காக, கட்டுமான நிறுவன ஊழியர்கள் தளங்கள் வாரியாக வெடிபொருளை நண்பகல் 12 மணிக்குள் நிரப்பினர்.

அதன்பிறகு, கட்டட தளங்களில் வெடிமருந்து வைக்கப்பட்ட இடங்களை வயர்கள் மூலம் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதையடுத்து, வெடிமருந்து இணைப்புகள் சரியாக இணைக்கப்பட்டுள்ளனவா என பலமுறை ஆய்வு செய்யப்பட்டது.

கட்டடம் முதலில் மதியம் 2 மணியளவில் வெடிக்க வைக்கப்படுவதாக இருந்த நிலையில், 5 முறை ஒத்திவைக்கப்பட்டு மாலை 5.30 மணியளவில் வெடிக்க வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், 2 மற்றும் 6 -ஆவது தளத்தில் வெடிபொருட்கள் நிரப்பும் பணி நடைபெற்றதால் மேலும் தாமதம் ஆனது.

அதன்பிறகு, சரியாக 6.50 மணியளவில் கவுன்ட்டவுன் தொடக்கப்பட்டது. பின்னர், ரிமோட் மூலம் வெடிபொருள்களை வெடிக்கச் செய்து 11 அடுக்குமாடி கட்டடம் முழுவதுமாக 3 விநாடிகளில் உள்நோக்கி இடிந்து தரைமட்டமானது.

கட்டடம் தரைமட்டமானதும் அந்த இடமே புகை மண்டலமாக காட்சி அளித்தது. அருகில் உள்ள கட்டடங்களுக்கு பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பாக வெடித்து தகர்க்கப்பட்டது. கட்டடம் இடிந்து விழுந்ததும் அந்த பகுதியில் இருந்து கடும் புகை மூட்டம் வெளியானது. 10 நிமிடங்களில் இந்த புகைமூட்டம் படிப்படியாக விலகியது.

இந்த கட்டட இடிப்புப் பணியின்போது காவல் துறை உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளின் அதிகாரிகளும் மிகுந்த அக்கறையுடனும் பொறுப்புடனும் நடந்துகொண்டார்கள். இது தொடர்பாக வாட்சப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உலாவரும் ஒரு ஆதங்கம்:-

“இப்ப இடிக்குறதுல காட்டுகிற அக்கறையில், கவனத்தில் ஒரு 5 சதவிகிதத்தை அனைத்து துறைகளின் அதிகாரிகளும் கட்டடம் கட்டும் முன்பும், கட்டும்போதும் காட்டியிருந்தால் என்னவெல்லாம் நிகழ்ந்திருக்காது…

1) அந்தக் கட்டிடம் கட்டப்பட்டிருக்காது.

2) கட்டியிருந்தால் இடிந்திருக்காது.

3) 61 பேர் செத்திருக்க மாட்டார்கள்

4) பணம் கொடுத்து வீடு வாங்கியவர்கள் நிம்மதியாக இருந்திருப்பார்கள்.

இப்போதோ இடிக்கப்பட்ட, இல்லாத வீட்டுக்கு  தவணையை மாசாமாசம் கட்டிப்புட்டு வாடகை வீட்டில் வசிக்கிறார்கள்.

ஒரு வேளை இது பூர்வஜென்ம கடனோ..?

போன ஜென்மத்துல ஃப்ளாட், பில்டர்ல்லாம் இருக்க வாய்ப்பில்லையே! எல்லாம் குடிசை தானே!!

பணம் கொடுத்தவனுக்கு ஒரே ஆறுதல், ‘நல்லவேளை, உயிர் போகாம போச்சே’ங்குறது மட்டும் தான்.”