குற்றம் 23 – விமர்சனம்

அரசியல் துறை, அதிகாரத் துறை, காவல் துறை, நீதித் துறை, ஊடகத் துறை, கார்ப்பரேட் தொழில் துறை, பெருவணிகத் துறை, கல்வித் துறை என “எங்கெங்கு காணினும் குற்றமடா” என்பது தான் நம் சமூகத்தின் இன்றைய யதார்த்தம். இந்நிலையில், மருத்துவத் துறையில் நிகழும் அதிபயங்கர குற்றங்களையும், அதன் விபரீத விளைவுகளையும் விறுவிறுப்பான த்ரில்லராக சொல்ல வந்திருக்கிறது ‘குற்றம் 23’.

சென்னையில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு பாவ மன்னிப்பு கேட்க வந்த பிரபல தொழிலதிபர் ஒருவரின் மனைவி காணாமல் போகிறார். அதே நேரத்தில் அப்பெண்ணுக்கு பாவ மன்னிப்பு வழங்கிய பாதிரியார் கொலை செய்யப்படுகிறார். பாதிரியார் இறப்பு குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கிறார் நாயகியான மகிமா நம்பியார். 2 நாட்களுக்குப் பின்னர், மாயமான பெண் கொலையுண்ட நிலையில், அவரது உடல் குப்பை கிடங்கில் கண்டெடுக்கப்படுகிறது.

இச்சம்பவங்கள் பற்றி விசாரிக்கும் பொறுப்பு காவல்துறை உதவி ஆணையரான நாயகன் அருண் விஜய்யிடம் ஒப்படைக்கப்படுகிறது. தீவிர விசாரணையில் இறங்கும் அருண் விஜய், மகிமா நம்பியாரிடம் தனது விசாரணையை தொடங்குகிறார். இதற்காக அருண் விஜய் அடிக்கடி மகிமாவை தொடர்பு கொள்வதால் மகிமாவின் பெற்றோர் எரிச்சல் அடைகிறார்கள்.

இந்த நேரத்தில் மகிமாவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி அருண் விஜய் கேட்க, மகிமாவின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து அருண் விஜய் – மகிமா இடையே காதல் மலர்கிறது. அப்போது, கொலை சம்பவம் குறித்த சில முக்கிய தகவல்களை அருண் விஜய்யிடம் மகிமா தெரிவிக்கிறார்.

இதனிடையே, குழந்தை இல்லாமல் தவிக்கும் அருண் விஜய்யின் அண்ணி அபிநயா கர்ப்பம் அடைகிறார். எதிர்பாராத வகையில் அவர் ஒருநாள் தூக்கில் பிணமாகத் தொங்குகிறார். இந்த வழக்கையும் விசாரிக்கும் அருண் விஜய், கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ந்து உயிரிழப்பது ஏன் என்பது பற்றிய முக்கிய தகவலை கண்டுபிடிக்கிறார். இந்த குற்றத்தின் பின்னணியில் இருப்பது யார்? அந்த குற்றவாளிகளை அருண் விஜய் எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பது படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.

நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் நாவலை மூலக்கதையாகக் கொண்டு பின்னப்பட்ட த்ரில்லான ஆக்‌ஷன் திரைக்கதை மூலம் இயக்குனர் அறிவழகன் மீண்டும் ஒரு முறை கவன ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் குழந்தை பிறப்பு குறித்த கிராபிக்ஸ் காட்சிகளுக்கு கைதட்டல்கள் அதிகம் விழுகின்றன. முதல் காட்சியிலேயே கதையை ஆரம்பித்த அறிவழகனின் நேர்த்தி அருமை. உயிரணுக்கள், கருத்தரிப்பு குறித்த விளக்கங்கள் நம்பும்படியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அறிவழகனின் மெனக்கெடல்களை பாராட்டலாம்.

தோற்றம், உடல் மொழி, பார்வை, கம்பீரம், நிதானம், தெளிவு என அத்தனையிலும் அருண் விஜய் கச்சிதம். குற்றப் பின்னணி உள்ள வழக்கை விசாரிக்கும் விதமும், எதிரிகளை எதிர்கொள்ளும் விதமும் தேர்ந்த நடிகனுக்கான அடையாளம். கமர்ஷியல் படம் என்றாலும் அதில் வரும் இயல்பான, எளிமையான அறிமுகம் நம்பத்தகுந்த வகையில் உள்ளது. காதல் காட்சிகளில் கண்ணியம் காட்டும் அருண் விஜய், சண்டைக் காட்சிகளில் நிமிர வைத்து, சபாஷ் போட வைக்கிறார்.

டூயட் பாடும் கதாநாயகியாக இல்லாமல், கதையை நகர்த்தும் நாயகியாக மஹிமா நம்பியார் வருகிறார். குழந்தைகளுடனான பிரியம், பிரச்சனையைக் கண்டு ஒதுங்குவது, பிறகு உண்மையை சொல்வது என கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். “போலீஸ் கிட்ட உண்மையை சொல்லாம மறைக்கலாம். ஆனா, பிடிச்சவங்க கிட்ட உண்மையை சொல்லணும்” என்று சொல்லும் மஹிமாவின் நடிப்பு சிறப்பு.

குழந்தை குறித்த ஏக்கத்தோடும், அதற்குப் பிறகான சோகத்தை சொல்ல முடியாமலும் தவிக்கும் கதாபாத்திரத்தில் அபிநயா நிறைவாக நடித்திருக்கிறார்.

தம்பி ராமையாவின் மைண்ட் வாய்ஸ் பாணியிலான வசனங்கள் ரசிக்கும்படியாக உள்ளன. சீரியல் நடிகையிடம் அருண் விஜய் பேசும்முன் தம்பி ராமையாவின் கமெண்ட், குறிப்பாக உணர்வெழுச்சியில் அருண் விஜய்யின் செயல்களுக்குப் பிறகு தம்பி ராமையா அதை சரிசெய்வதற்காக செய்யும் சமாளிப்புகளுக்கு திரையரங்கில் அப்ளாஸ் அள்ளுகிறது.

அமித் பார்கவ், விஜயகுமார், அர்விந்த் ஆகாஷ், வம்சி கிருஷ்ணா, கல்யாணி நடராஜன், சுஜா வாருணி ஆகியோர் பொருத்தமான தேர்வு.

பாஸ்கரனின் ஒளிப்பதிவு போலீஸ் விசாரணை, மருத்துவக் குற்றம் குறித்த அதிர்ச்சி வளையத்துக்குள் நம்மையும் இழுத்துச் செல்கிறது. இடைவேளையின்போது வரும் அந்த ஒற்றை ஷாட் அமேசிங். விஷால் சந்திரசேகர் பின்னணி இசை படத்துக்கு கூடுதல் பலம். தொடுவானம் பாடலில் மனதைக் கரைக்கிறார்.

‘குற்றம் 23’ – வெற்றிகரமான போலீஸ் ஸ்டோரி!