முப்பரிமாணம் – விமர்சனம்

இயக்குனர் பாலாவின் உதவியாளர் அதிரூபன் இயக்கிய படம் என்ற முத்திரை தாங்கி வெளிவ ந்திருக்கிறது ‘முப்பரிமாணம்’.

நாயகன் சாந்தனுவும், நாயகி சிருஷ்டி டாங்கேவும் பொள்ளாச்சியில் சிறு வயதில் பக்கத்து பக்கத்து வீட்டில் ஒன்றாக வளர்ந்து வருகிறார்கள். சாந்தனுவின் அப்பா ஒரு போலீஸ்காரர். நாயகியின் அண்ணன் ரவி பிரகாஷ் ஒரு சாதி வெறியர்.

தனது சாதிக்காரப் பொண் சாதி மாறி திருமணம் செய்துகொண்டதால், காதல் ஜோடியை கொலை செய்கிறார் ரவி பிரகாஷ். சாந்தனுவின் அப்பா அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறார். இதனால், சாந்தனுவின் குடும்பத்துக்கும் சிருஷ்டியின் குடும்பத்துக்கும் பகை ஏற்படுகிறது.

சிருஷ்டியின் அப்பா தனது அரசியல் பலத்தை வைத்து சாந்தனுவின் அப்பாவுக்கு வேறு ஊருக்கு மாற்றல் வாங்கிக் கொடுக்கிறார். ரவி பிரகாஷையும் சிறையிலிருந்து வெளியே கொண்டு வருகிறார்.

தனியாகப் பிரிந்த நாயகனும், நாயகியும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். வேறு ஊருக்கு மாற்றலாகி சென்ற சாந்தனுவின் குடும்பம் சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொள்ளாச்சிக்கே வருகிறது. பிளஸ் டூ படிக்கும் சிருஷ்டியிடம் தனது நட்பை புதுப்பித்துக்கொள்ள சாந்தனு படாதபாடு படுகிறார். ஒரு கட்டத்தில் சாந்தனுவும், சிருஷ்டியும் காதலர்களாகிறார்கள்.

இந்நிலையில், பிளஸ் 2 படிப்பை முடித்த சிருஷ்டி, மருத்துவ படிப்புக்காக சென்னை செல்கிறார். சென்னைக்கு சென்றாலும் சாந்தனு, அடிக்கடி சிருஷ்டியை சந்தித்து காதலை வளர்த்து வருகிறார். ஒருகட்டத்தில் சிருஷ்டியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுகிறது. இதற்கு காரணமாக, சாந்தனுவிடம் தனது வீட்டில் தங்களது காதல் விவகாரம் தெரிந்துவிட்டதாகவும், இதனால், இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும் கூறுகிறார்.

அவர் மீது உள்ள அளவு கடந்த காதலால் சாந்தனு, அவரது உயிர் இழப்பை விரும்பாமல் காதலை மட்டும் விட்டுக்கொடுத்து விட்டு, தன்னை வருத்திக் கொள்கிறார். போதை பழக்கத்தின் மூலம் சிருஷ்டி டாங்கேவை மறக்க நினைக்கிறார். ஒரு கட்டத்தில் போதைக்கு முழுவதும் அடிமையாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெறுகிறார்.

சிகிச்சை பெற்று வெளியே வரும் நாளில், சிருஷ்டி டாங்கேவுக்கும், நடிகரான ஸ்கந்தா அசோக்குக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. அப்போது திடீரென்று அந்த திருமண விழாவுக்குள் புகுந்து, துப்பாக்கி முனையில் சிருஷ்டி டாங்கேவை கடத்திக்கொண்டு கேரளாவுக்கு செல்கிறார் சாந்தனு.

சாந்தனு மீது விருப்பமில்லாத சிருஷ்டி டாங்கேவை அவர் கடத்தி செல்ல காரணம் என்ன? சிருஷ்டி டாங்கே சாந்தனுவை வெறுக்க காரணம் என்ன? என்பதை பிற்பாதியில் விளக்கியிருக்கிறார்கள்.

சாந்தனு படத்தின் ஆரம்பத்தில் சாக்லேட் பாயாக வந்து கலகலப்பாகவும், பிற்பாதியில் மொட்டை போட்டு, வித்தியாசமான கெட்டப்புடன் வில்லத்தனமாகவும் நடித்து தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். சிருஷ்டி டாங்கேவுடான காதல் காட்சிகளில் தனக்கே உரித்தான ஸ்டைலில் நடித்து அசத்தியிருக்கிறார்.

சிருஷ்டி டாங்கேவுக்கு படத்தில் வலுவான கதாபாத்திரம். ஆனால், அந்த கதாபாத்திரத்தை உணராமல் படம் முழுக்க சிரித்துக்கொண்டே வந்து அந்த கதாபாத்திரத்தின் வலுவை தவிடு பொடியாக்கி இருக்கிறார். இதனால், இவரது கதாபாத்திரத்தை ரசிக்க முடியாமலேயே போய்விடுகிறது. இருப்பினும், கிளைமாக்ஸ் காட்சியில் செண்டிமென்ட்டாக நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறார்.

ஸ்கந்தா அசோக் படத்திலும் நடிகராகவே வந்து, தனது நடிப்பால் அவரது கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார். சாதி வெறி பிடித்தவராக வரும் ரவி பிரகாஷ் நடிப்பில் அசத்தியிருக்கிறார். படம் முழுக்க ஒரு வித்தியாசமான வில்லனாக இவரை பார்க்க முடிகிறது. தம்பி ராமையா, அப்புக்குட்டி, லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் காமெடிக்கென்று இருந்தாலும் இவர்களது காமெடி பெரிதாக எடுபடவில்லை.

இயக்குனர் அதிரூபன் படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு பால்ய வயது நட்பு, அதன்பிறகு ஏற்படும் இளம் வயது காதல், காதல் முறிவுக்கு பிறகு ஏற்படும் பிரச்சினை என முப்பரிமாணங்களில் இப்படத்தை கொடுத்திருக்கிறார். முதல் பாதி காதல், ஊடல் என படம் மெதுவாக சென்றாலும், பிற்பாதியில், நாயகியை கடத்தியதற்கான காரணங்களின் முடிச்சுகளை அவிழ்க்கும் இடங்களில் எல்லாம் படம் விறுவிறுப்படைகிறது. இருப்பினும், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். கிளைமாக்சில் தனது குரு பாலாவின் பாணியை கடைபிடித்து அனைவரையும் கண்கலங்க வைத்துவிடுகிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். திரையுலக பிரபலங்கள் அனைவரும் சேர்ந்து ஆடும் ‘பார்ட்டி சாங்’ பாடல் மட்டும் ரொம்பவும் ரசிக்கும்படி இருக்கிறது. பின்னணி இசையில் ஜி.வி.பிரகாஷ் தனது பாணியை பின்பற்றி பாராட்டு பெறுகிறார். ராசாமதியின் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

‘முப்பரிமாணம்’ – படக்குழுவினருக்கு பாடம்!