விக்ராந்த் ரோணா – விமர்சனம்

நடிப்பு: கிச்சா சுதீப், நிரூப் பண்டாரி, நீதா அசோக், மதுசூதன் ராவ் மற்றும் பலர்

இயக்கம்: அனூப் பண்டாரி

ஒளிப்பதிவு: வில்லியம் டேவிட்

இசை: அஜனீஸ் லோகநாத்

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா

கமரோட்டு டவுனுக்கு வரும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கொல்லப்பட, அதை விசாரிக்கும் காவல்துறை உயர் அதிகாரியாக, தனது மகளுடன் அங்கு வருகிறார் விக்ராந்த் ரோணா (கிச்சா சுதீப்). வரும்போதே சில அமானுஷ்யமான, அசாதாரண நிகழ்வுகளை காண்கிறார்.

ஆச்சரியத்தோடு விசாரணையை தொடங்கி நடத்தும்போது, அங்கு 16 குழந்தைகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டிருப்பது தெரிய வருகிறது. காட்டுக்குள் இருக்கும் பேய்தான் இதை செய்ததாக ஊர் நம்புகிறது. உண்மையில் இக்கொலைகளைச் செய்தது யார்? எதற்காக இந்த கொலைகள்?  விக்ராந்த் ரோணா இவற்றை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது படத்தின் மீதிக்கதை.

அதேநேரம், கோயில் நகைகளைத் திருடிவிட்டு ஓடிய ஊர் பெரியவர் ஜனார்த்தனின் (மதுசூதன் ராவ்) மகன் சஞ்சு (நிரூப் பண்டாரி), 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்புவது, அவரது வீட்டுக்கு வரும் உறவினர் மகள் பன்னாவுடன் (நீதா அசோக்) சஞ்சுவுக்கு காதல், பிளாஷ்பேக்கில் நடக்கும் மோதல் என மற்றொரு டிராக்கில் ஒரு கதை செல்கிறது.

காவல்துறை உயர் அதிகாரி விக்ராந்த் ரோணாவாக கிச்சா சுதீப் நடித்திருக்கிறார். கையில் சுருட்டு, இடுப்பில் சொருகிய துப்பாக்கி, அசால்ட் பார்வை, சந்தேக வலைக்குள் ஒவ்வொருவரையும் கொண்டுவரும் விதம், மகளிடம் காட்டும் பாசம், காட்டுக்குள் தனியாக செல்லும் துணிச்சல், கிளைமாக்ஸ் மோதல் என தனது ஹீரோயிசத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.

வீராப்பு கொண்ட கோபக்கார பெரியவராக மதுசூதன் ராவ் மனதில் பதிகிறார். நீதா அசோக் இன்னொருவருக்கு நிச்சயிக்கப்பட்டு, நிரூப்பிடம் காதல் வயப்பட்டு கலங்கும் காட்சியில் தனித்துத் தெரிகிறார். ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒரு குத்தாட்டத்தோடு போய்விடுகிறார். அம்மாவாக வரும்பிரியா வி., விஸ்வநாத்தாக வரும் ரவிசங்கர் கவுடா உட்பட பலரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்கின்றனர்.

மிரட்டலான பழிவாங்கும் படத்தைக் கொடுக்க முயன்றுள்ள இயக்குநர் அனூப் பண்டாரி, அதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளார். வில்லியம் டேவிட்டின் 3D தொழில் நுட்ப ஒளிப்பதிவு படத்தின் பலம். அஜனீஸ் லோகநாத்தின் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.

’விக்ராந்த் ரோணா’ – ரசனைக்குரிய திகில்!

Read previous post:
0a1i
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மு.க.ஸ்டாலின்: “கொள்கை ரீதியான திமுக கூட்டணி தொடரும்!”

”தமிழகத்தில் திமுக கூட்டணி தொடரும். இது வெறும் தேர்தலுக்காக அமைந்த கூட்டணி அல்ல. கொள்கை ரீதியான கூட்டணி” என்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.

Close