அக்கரன் – விமர்சனம்

நடிப்பு: எம்.எஸ்.பாஸ்கர், கபாலி விஸ்வந்த், நமோ நாராயணா, வெண்பா, ஆகாஷ் பிரேம்குமார், பிரியதர்ஷினி, கார்த்திக் சந்திரசேகர் மற்றும் பலர்

இயக்கம்: அருண் கே.பிரசாத்

ஒளிப்பதிவு: எம்.ஏ.ஆனந்த்

படத்தொகுப்பு: பி.மணிகண்டன்

இசை: எஸ்.ஆர்.ஹரி

தயாரிப்பு: ‘குன்றம் புரொடக்‌ஷன்ஸ்’ கேகேடி

தமிழ்நாடு வெளியீடு: தமிழ் சினிமாஸ் (தனபால் கணேஷ் & ஷிவானி செந்தில்)

பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்)

’அக்கரன்’ என்ற தமிழ்ச்சொல்லுக்கு ‘அழிவில்லாதவன்’ என்று அர்த்தமாம். இந்த ‘அக்கரன்’ படக்கதையில் யார் ’அழிவில்லாதவன்?’ பார்ப்போம்…

வீரபாண்டி (எம்.எஸ்.பாஸ்கர்), தாயில்லாப் பிள்ளைகளான தனது இரண்டு மகள்களான தேவி (வெண்பா) மற்றும் பிரியா (பிரியதர்ஷினி) உடன் மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் வசித்து வருகிறார். மூத்த மகள் தேவிக்கும் சென்னையைச் சேர்ந்த சிவாவுக்கும் (கபாலி விஸ்வந்த்) திருமணம் பேசி, பூ வைக்கும் சடங்கு முடிந்திருக்கும் நிலையில், திடீரென்று சிவா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்படுகிறார். தான் கைது செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்து எவரிடமும் சொல்ல மறுக்கிறார். சிவாவின் நடத்தையில் சந்தேகம் கொள்ளும் வீரபாண்டி, சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட, அப்பழுக்கற்ற ஒருவருக்குத் தான் என் மகளை மணம் முடித்துக் கொடுப்பேன் என்று சிவாவுடனான திருமணப் பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டு, புரோக்கர் மூலம் வேறு மாப்பிள்ளை பார்க்கிறார். அப்படி தன்னை பெண் பார்க்க வருபவர்களிடம், “எனக்கும் சிவா என்பவருக்கும் ஏற்கெனவே திருமணம் பேசியாகிவிட்டது. மணந்தால் அவரைத் தான் மணப்பேன்” என்று உறுதியாகச் சொல்லி, அவர்களை திருப்பி அனுப்பிவிடுகிறார் வெண்பா.

மூத்த மகள் பிரச்சனை இப்படி இருக்க, வீரபாண்டியின் இளைய மகள் பிரியா, பிளஸ்-2 படித்துக்கொண்டே டாக்டராகும் கனவில் நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வருகிறார். இதற்காக தனியாரின் கோச்சிங் செண்டரில் சேர்ந்து படித்து வருகிறார். அந்த நீட் கோச்சிங் செண்டர் ஒரு அரசியல் கட்சியின் இந்நாள் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான பரந்தாமனுக்கு (நமோ நாராயணா) சொந்தமானது. அவரது பினாமி மற்றும் கையாளாக செல்வமும் (கார்த்திக் சந்திரசேகர்), மைத்துனராக (மனைவியின் தம்பியாக) அர்ஜுனும் (ஆகாஷ் பிரேம்குமார்) இருக்கிறார்கள். இவர்கள் கோச்சிங் செண்டர் மாணவ மாணவிகளிடம் “தலா பத்து லட்சம் ரூபாய் கொடுத்தால், குறுக்கு வழியில் நீட் தேர்வில் பாஸ் பண்ண வைத்து, மெடிக்கல் சீட் கிடைக்க ஏற்பாடு செய்வோம்” என்று ஆசை வார்த்தை காட்டுகிறார்கள். இதில் உடன்பாடு இல்லாத பிரியா, இதை ரகசியமாக செல்போனில் படம் பிடிக்கிறார். ”இந்த முறைகேட்டை பகிரங்கப்படுத்தி உலகறியச் செய்வேன்” என்று சூளுரைக்கிறார். அன்று பிரியா கோச்சிங் செண்டரிலிருந்து வீடு திரும்பவில்ல்லை…

பிரியா மாயமானதை அறிந்து அப்பா வீரபாண்டி, அக்கா தேவி, அக்காவை மணக்கவிருக்கும் சிவா ஆகியோர் பதறுகிறார்கள். கோச்சிங் செண்டரில் விசாரிக்கிறார்கள். சரியான பதில் கிடைக்கவில்லை. எனவே புகார் கொடுக்க போலீஸ் நிலையத்துக்குப் போகிறார்கள். இதுபோன்ற சிச்சுவேசனில் ஏனைய படங்களில் வரும் போலீசாரைப் போலவே இதில் வரும் போலீசாரும் “யாரையாவது கூட்டிட்டு ஓடியிருப்பா. நல்லா விசாரிச்சுப் பாருங்க” என்கிற ரீதியில் அசால்டாக கூறுகிறார்கள். சிவாவின் முயற்சியில் ஒரு வழக்கறிஞரைப் பிடித்து, அவர் மூலம் போலீஸில் புகாரை பதிவு செய்ய வைக்கிறார்கள். எனினும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

வீரபாண்டி துக்கத்தில் தவிக்கிறார். தனது வாழ்க்கையே இருண்டு, பாழாகிப்போனதாய் உணருகிறார். உண்மையைக் கண்டுபிடிக்கவும், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கவும் தனக்குத் தெரிந்த சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் இறங்குகிறார். கோச்சிங் செண்டர் நிர்வாகத்தின் முக்கியத் தூண்களான எம்.பி.யின் மைத்துனர் அர்ஜுன், எம்.பி.யின் பினாமி செல்வம் ஆகியோரைக் கடத்தி, தனித் தனி அறைகளில் அடைத்து, பசை ஊற்றப்பட்ட நாற்காலிகளில் பலவந்தமாக உட்கார வைத்து, ”ஒவ்வொரு கைவிரலாகத் துண்டிப்பேன்” என்று எச்சரித்து, ஓரிரு விரல்களைத் துண்டித்து சித்திரவதை செய்து, உண்மையில் பிரியாவுக்கு என்ன நேர்ந்தது என்பதை வரவழைக்க முயற்சி செய்கிறார். நடந்தது என்ன என்பது குறித்து இருவரும் இருவேறு விதமாகச் சொல்கிறார்கள்.

உண்மையில் பிரியாவுக்கு என்ன நேர்ந்தது? அவர் மாயமாக யார் காரணம்? குற்றவாளியை வீரபாண்டி கண்டுபிடித்தாரா? தண்டித்தாரா? மேலும், மூத்த மகள் தேவியை மணக்கவிருக்கும் சிவா கைது செய்யப்பட்டது ஏன்?  என்பன போன்ற கேள்விகளுக்கு ‘ரத்தமும் சதையும்’ ஆகவும் கன்வின்சிங்காகவும் விடை அளிக்கிறது ‘அக்கரன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

ஏற்கெனவே குணச்சித்திர வேடங்களில் தனித்துவத்துடன் கலக்கி வரும் எம்.எஸ்.பாஸ்கர், இப்படத்தில் வீரபாண்டி என்ற முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வயதுக்கு வந்த இரண்டு மகள்களின் அன்பான தந்தையாகவும், வில்லன்களை தனி அறைகளில் அடைத்து வைத்து வதைக்கும் கொடூரராகவும் இருவேறு குணாதிசயங்களில், இருவேறு கெட்டப்களில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். அவரை மட்டுமே மனதில் வைத்து எழுதப்பட்ட இந்த கதாபாத்திரத்துக்கு தன் அருமையான நடிப்பால் நூறு சதவிகிதம் நியாயம் செய்திருக்கிறார். வயது முதிர்ந்த அவரால் வில்லன்களை இந்த அளவுக்கு வதைக்க முடியுமா? என்ற பார்வையாளர்களின் சந்தேகத்தை, கிளைமாக்ஸில் முகத்தைக் கழற்ற வைத்து, திருப்பத்தை ஏற்படுத்தி, தீர்த்து வைத்திருக்கிறார் புத்திசாலி இயக்குநர் அருண் கே.பிரசாத்.

எம்.எஸ்.பாஸ்கரின் மூத்த மகள் தேவியாக வெண்பா நடித்திருக்கிறார். அழகாக இருப்பதோடு, துல்லியமாகவும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தகுதி இருந்தும் அவர் ஏன் இன்னும் முன்னணி ஹீரோயினாக உயரவில்லை என்ற கேள்வி நம்முள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. அவரது தங்கை பிரியாவாக வரும் பிரியதர்ஷினி அளவாக நிறைவாக நடித்திருக்கிறார்.

வெண்பாவின் வருங்கால கணவர் சிவாவாக கபாலி விஸ்வந்த் நடித்திருக்கிறார். படத்தில் குறைவான காட்சிகளிலேயே வந்தபோதிலும், கிளைமாக்ஸில் திடுதிப்பென ஹீரோவாக உயர்ந்து வியப்பில் ஆழ்த்துகிறார்.

ஒரு கட்சியின் மாவட்ட செயலாளராக, முன்னாள் எம்.பி.யாக, நீட் கோச்சிங் செண்டர் உரிமையாளராக பரந்தாமன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நமோ நாராயாணா. ”அரசியல்வாதி வேடமா? கூப்பிடு நமோ நாராயணாவை” என்பது தற்கால தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதியாக இருப்பதால், இந்த படத்திலும் அவர் மனைவிக்கு பயந்த அரசியல்வாதியாக வந்து அசால்ட்டாக நடித்துவிட்டுப் போயிருக்கிறார். அவரது மைத்துனர் அர்ஜுனாக ஆகாஷ் பிரேம்குமாரும், பினாமி செல்வமாக கார்த்திக் சந்திரசேகரும் முதலில் கொடுமைப்படுத்தும் வில்லன்களாகவும், பின்னர் கொடுமைக்கு ஆளாகிறவர்களாகவும் குறைவின்றி நடித்திருக்கிறார்கள்.

இரண்டு வில்லன்களும் கடத்தப்பட்டு, வதைக்கப்படும் காட்சிகள் படத்தின் துவக்கத்திலேயே வந்துவிடுவதால், எவ்வித ஜோடனைகளும் இல்லாமல் எடுத்த எடுப்பிலேயே கதை சொல்லத் தொடங்கி விடுகிறார் இயக்குநர் அருண் கே.பிரசாத். கதை, திரைக்கதை, கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, காட்சியமைப்பு போன்ற பேப்பர் வேலைகள் அனைத்தும் முன்கூட்டியே நேர்த்தியாக செய்து முடிக்கப்பட்டிருப்பதால், படத்தை எவ்வித குழப்பமும், தடுமாற்றமும் இல்லாமல் சுவாரஸ்யமாக விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர். அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் மூலம் பார்வையாளர்களை எதிர்பார்ப்புடன் சீட்டின் நுனியில் அமர வைப்பதில் வெற்றி பெற்றுள்ளார். இனி வரும் காலங்களிலும் இது போன்ற தரமான ஆக்‌ஷன் திரில்லர்களை இந்த இயக்குநரிடமிருந்து எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையை இப்படம் ஏற்படுத்தியுள்ளது.

எம்.ஏ.ஆனந்தின் ஒளிப்பதிவும், எஸ்.ஆர்.ஹரியின் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளன.

’அக்கரன்’ – கண்டு களிக்கலாம்! யார் அழிவில்லாதவன் என்று தேடி கண்டுபிடிக்கலாம்!