“நடிகர் பிரகாஷ் ராஜை கொல்ல திட்டமிட்டோம்”: கவுரி லங்கேஷ் கொலையாளிகள் வாக்குமூலம்!
பெங்களூருவை சேர்ந்த மூத்த பெண் பத்திரிகையாளரும், முற்போக்கு சிந்தனையாளரும், சங்கித்துவம் மற்றும் மோடி ஆட்சியை கடுமையாக விமர்சித்து வந்தவருமான கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி, அவரது வீட்டுவாசலில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இப்படுகொலை குறித்து விசாரணை மேற்கொண்ட கர்நாடக மாநில சிறப்பு புலனாய்வுப் பிரிவு (சிஐடி) அதிகாரிகள், இந்து யுவசேனா அமைப்பின் செயலாளர் கே.டி.நவீன் குமார், ஸ்ரீராம் சேனா அமைப்பை சேர்ந்த பரசுராம் வாக்மோர், அனில் காலே உள்ளிட்ட 6 சங்கித்துவ வெறியர்களை கைது செய்துள்ளனர். விசாரணையில், கவுரி லங்கேஷ் கொலையில் தங்களுக்கு தொடர்பு இருப்பதை இவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
மேலும், பாரதிய ஜனதா கட்சியை விமர்சிக்கும் எழுத்தாளரும் நடிகருமான கிரீஷ் கர்னாட், பேராசிரியர் கே.எஸ்.பகவான் ஆகியோரையும், சங்கித்துவ அமைப்புகளையும், நரேந்திர மோடியையும் விமர்சிக்கும் நடிகரும், கவுரி லங்கேஷின் நண்பருமான பிரகாஷ் ராஜையும் கொல்ல திட்டமிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இது குறித்து பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கோழைகளே, இவ்வளவு வெறுப்பு அரசியலை செய்துவிட்டு, நீங்கள் தப்பிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.