”உங்கள் மரணம் எப்படி நேரப் போகிறது என்கிற விஷயம் தெரிய வந்திருக்கிறது!” – (பகுதி 3)
(பகுதி 2-ன் தொடர்ச்சி)
காலநிலை மாற்றம் வருடம்தோறும் நிஜமாகி வருவதை ஒவ்வொரு நாட்டிலிருந்தும் கிடைக்கும் தரவுகளை வைத்து ஐநாவின் உலக நாட்டு அரசுகள் குழு (IPCC) அறிக்கைகளாக வெளியிட்டு வந்திருக்கிறது.
இன்று நமக்கு இருக்கும் தயக்கம் 1990களில் உலக நாட்டு அரசுகளுக்கும் இருந்தது. அதீத கற்பனை போல் காலநிலை மாற்றம் அப்போது தெரிந்தது. மழை பொய்ப்பு, பஞ்சம், மக்கள் போராட்டங்கள் போன்ற விஷயங்களை தொடர்ந்து கண்காணித்து வந்ததன் விளைவாக நாடுகளும் அதன் அரசுகளும் காலநிலை மாற்றத்தை உணரத் தொடங்கின. ஒரு வழியாக 2015ம் ஆண்டு பாரிஸ் நகரத்தில் விடிய விடிய நடத்தப்பட்ட உலக நாட்டு அரசுகளின் குழு மாநாட்டில் உடன்பாடு எட்டப்பட்டது.
கார்பன் வெளியேற்றத்துக்கு காரணமாக இருக்கும் உற்பத்தி நடவடிக்கைகளை குறைக்கத் தொடங்கி ஒரு கட்டத்தில் நிறுத்துவதென நாடுகள் ஒப்புக் கொண்டன.
2030ம் ஆண்டில் உலகின் மொத்த வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸ்ஸுக்கு உயரும். 2016ம் ஆண்டிலேயே உலக வெப்பம் 0.8 டிகிரி செல்சியஸ்ஸுக்கு உயர்ந்திருந்தது. தற்போது நாம் 1.2 டிகிரி செல்சியஸ்ஸை எட்டி விட்டோம். இன்னும் சரியாக பதினொரு வருடங்கள்தான். 0..3 டிகிரி செல்சியஸ்ஸில் வெப்பத்தை நிறுத்தி குறைக்கத் தொடங்கினால் மட்டுமே காலநிலை மாற்றத்தை சரி செய்வதற்கான காலம் கிட்டும். இல்லையெனில் நிலைமை கையை மிஞ்சும்.
கார்பன் வெளியேற்றத்துக்கு அடிப்படை காரணமாக இருப்பது புதைபடிம எரிபொருட்களும் அதை சார்ந்த வாழ்க்கைமுறையும் ஆகும். பெட்ரோல், நிலக்கரி, ஹைட்ரோகார்பன், மீதேன், ஷேல் வாயு என பூமிக்கு அடியிலிருந்து எடுத்து பயன்படுத்தப்படும் அனைத்து எரிபொருட்களுமே புதைபடிம எரிபொருட்கள்தாம்.
நீராவி எஞ்சினே தொழிற்புரட்சிக்கு ஆரம்பமென கொண்டால், தொழிற்புரட்சி தொடங்கி மனிதகுலம் பின்பற்றி வரும் வாழ்க்கைமுறை, பொருளாதாரம், வளர்ச்சி பற்றிய புரிதல், மனநிலைகள் என அனைத்தையும் நாம் உடனடியாக மாற்ற வேண்டியிருக்கிறது.
காலநிலை மாற்றத்துக்கான உலக நாட்டு அரசுகளின் மாநாட்டில் எட்டிய உடன்பாடு மிக மிக மெதுவாகவே நடந்து கொண்டிருக்கிறது. நத்தையின் வேகம்!
‘எங்களின் வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என க்ரெடா தன்பெர்க் என்னும் பதின்வயது பெண்ணின் தலைமையில் உலகம் முழுக்க குழந்தைகள் அரசுகளை எதிர்த்து போராடி வருகின்றனர்.
கிளையின் நுனியில் அமர்ந்து கொண்டு கிளைவெட்டிக் கொண்டிருக்கிறோம் நாம்.நம் குழந்தைகளை புதைக்க குழி தோண்டி கொண்டிருக்கிறோம். அதுவும் கடந்த சில வருடங்களில் மிக வேகமாகவே தோண்டிக் கொண்டிருக்கிறோம்.
ஹைட்ரோகார்பன், கூடங்குளம், ஷேல் எரிவாயு, பெட்ரோலிய மண்டலங்கள் என எல்லா நாசகார திட்டங்களும் தமிழகத்துக்கே விடிகிறது. இவற்றை வெறும் மக்களின் கருத்து கேட்புக்கு விட்டு முடிவெடுப்பதை விட, அரசின் கொள்கையளவிலேயே காலநிலைக்கு எதிரான திட்டங்கள் இவை என்ற புரிதல் இருந்திருக்க வேண்டும். அதை இன்னுமே கூட அடைந்திடாத இடத்திலேயே நாம் இருக்கிறோம்.
காலநிலை மாற்றம் பெரும்புயலாகவோ கடும்வறட்சியாகவோ உயிர் பறிக்கும் வெயிலாகவோ மட்டும் இருக்கப் போவதில்லை. இதுவரை நாம் கொண்டிருக்கும் சமூகப் பிரச்சினைகள் எல்லாமும் இனி காலநிலை மாற்றத்தையும் சூடிக் கொண்டு வரப் போகின்றன. காலநிலை மாற்றத்தை அடையும் போது ஒரு சமூகப் பிரச்சினையின் வீரியம் பன்மடங்காகிறது.
உதாரணமாக முகமது புவாசிசி என்பவரை தெரியுமா? துனிசிய நாட்டை சேர்ந்தவர். 20 வயதானவர். தெருவோரக் கடை வைத்திருந்தார்.
ஒருநாள் காலை வழக்கம்போல் கடைக்கு சென்றிருக்கிறார். சில காவல்துறை அதிகாரிகள் முகமத்தின் கடையை அகற்ற சொல்லியிருக்கின்றனர். கடையே தனக்கு வாழ்வாதாரம் என சொல்லியிருக்கிறார் முகமது. அனுமதியின்றி கடை வைத்திருப்பதாக சொல்லி, கடையில் இருக்கும் பொருட்களை வீசி எறிகின்றனர். காவல்துறை அதிகாரி முகமத்தை அடிக்கிறார். அவர் முகத்தில் துப்புகிறார். கடையை அடித்து நொறுக்குகின்றனர்.
வெறும் 20 வயதே ஆன இளைஞன். நேர்ந்த அவமானமும் இருண்ட எதிர்காலமும் அவன் மனதை அலைக்கழித்தது. கவர்னர் அலுவலகத்துக்கு புகார் கொடுக்க செல்கிறான். கவர்னர் முகம்மதை சந்திக்க அனுமதி தரவில்லை. ‘நீங்கள் என்னை பார்க்கவில்லை என்றால் நான் தீக்குளிப்பேன்’ என்கிறான் முகம்மத். கவர்னர் சார்ந்திருக்கும் அரசு இயந்திரம் துருப்பிடித்து பல்லிளித்திருக்கிறது. அந்த இளைஞனுக்கு வேறு வழி தெரியவில்லை.
அருகே இருந்த எரிபொருள் நிலையத்துக்கு சென்று பெட்ரோல் வாங்கி வருகிறான். நடுரோட்டில் நிற்கிறான். ‘வேற எப்படித்தான் நான் வாழ்க்கை நடத்தணும்னு நினைக்கறீங்க’ என கத்துகிறான். பிறகு பெட்ரோலை ஊற்றி தன்னை கொளுத்திக் கொள்கிறான்.
2010ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் முகம்மது பற்ற வைத்த பொறிதான் அரபு வசந்த புரட்சிக்கு வித்திட்டது.
அரபு வசந்த புரட்சி 2011ம் ஆண்டில் எகிப்தையும் பற்றியது. போராடிய மக்கள் அதிபர் ஹோஸ்னி முபார்க் பதவி விலக கோரினர். நியாயமான ஊதியம் வேண்டினர்.
அதே வருடத்தின் மார்ச் மாதத்தில் சிரிய நாட்டின் தெரா என்ற கிராமத்தில் பள்ளிக்கூடம் முடிந்து மாணவர்கள் கால்பந்து விளையாடுகின்றனர். பிறகு, அமர்ந்து தங்களுக்குள் ஜோக்கடித்து பேசி உரையாடிக் கொண்டிருக்கின்றனர். தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் எகிப்து புரட்சி பற்றிய செய்தி. சட்டென ஒரு யோசனை தோன்றுகிறது.
இரவு ஆனதும் பள்ளிக்கூட சுவரில் கோஷங்கள் எழுதுகின்றனர். பதினைந்து வயதான பஷீர் அபசெத் என்பவர் ‘அடுத்தது நீதான் டாக்டர்’ என சுவரில் எழுதுகிறான். சிரிய நாட்டின் அதிபரான அசாத் டாக்டருக்கு படித்தவர். அடுத்த நாட்களில் அந்த இளைஞர்களை அரசு தேடி சிறையிலடைத்து சித்ரவதை செய்தது. மக்கள் வெகுண்டெழுந்தனர்.
சிரிய உள்நாட்டு போருக்கான ஆரம்பம் அங்கிருந்துதான் தொடங்கியது.
சில தனி சம்பவங்களால்தான் சமீபத்திய பெரும் போராட்டங்களும் போர்களும் நடந்தன என்றால் நம்ப முடிகிறதா?
எப்போதும் எந்த போருக்கும் போராட்டத்துக்கும் தனிச் சம்பவம் காரணமாக இருக்க முடியாது. சமூகத்தில் இருக்கும் அழுத்தத்தை வெடிக்க வைப்பதற்கான ஊக்கியாக வேண்டுமானால் தனிச் சம்பவம் இருக்கலாம். அது போல இந்த மூன்று நாடுகளிலும் ஒரு முக்கியமான அழுத்தம் பீடித்திருந்தது. காலநிலை மாற்றத்தின் விளைவுகள்!
2005, 2007, 2009 ஆகிய ஆண்டுகளில் துனிசியாவை கடும் பஞ்சங்கள் தாக்கின. தவறான பொருளாதார கொள்கையால் குறைந்த வேலைவாய்ப்பு துனிசியாவின் போராட்டங்களுக்கு முக்கிய காரணம் என்றாலும் பருவமழை பொய்த்து பிற நகரங்களுக்கும் டவுன்களுக்கும் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்த பெருமளவு மக்கள், அப்போராட்டங்கள் தொடர்ந்து நீடிப்பதற்கு காரணமாக இருந்தனர். போராட்டங்களுக்கு ஆரம்பமாக இருந்த புவாசிசியும் ஒரு பஞ்சகாலத்தின்போது அருகே இருந்த டவுனுக்கு வருமானம் ஈட்ட வந்த ஒருவர்தான்.
2010ம் ஆண்டில் சீனாவிலும் ரஷ்யாவிலும் பருவமழை பொய்த்தது. அங்கு விளைய வேண்டிய கோதுமைப் பயிர் விளைச்சல் கடுமையான சரிவை சந்தித்தது. அந்த நாடுகளில் கோதுமை விளைச்சல் சரிவு, உலக நாடுகளை பாதித்தது. தனக்கான உணவை, கோதுமையை இரண்டு நாடுகளில் இருந்துதான் எகிப்து இறக்குமதி செய்து கொண்டிருந்தது. ரஷ்யாவிலும் சீனாவிலும் பொய்த்த மழை எகிப்தை கடுமையாக பாதித்தது.
2006ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு வரை கடுமையான பஞ்சம் சிரியாவை தாக்கியது. விளைச்சல் பொய்த்தது. விவசாயத்தை பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கைவிட்டனர். அருகே இருக்கும் நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர். அத்தனை பெரிய மக்கள் திரள் திடுமென நகரங்களுக்கு வந்ததும் அவர்களுக்கான வேலைகள் கேள்விக்குறியாயின. ஏற்கனவே வேலைகளில் இருந்தோருக்கு வேலைகள் பறிபோயின. விலைவாசி உயர்ந்தது. வறுமை பீடித்தது. சமூகத்தில் நிலையாமை உருவானது. அரசின் மீது கோபம் திரும்பியது. இன்று வல்லரசு நாடுகளின் போராக அது மாறியிருக்கிறது.
2019ம் ஆண்டின் ஜுன் மாதத்தில் ஐ நா சபையின் மனித உரிமை கவுன்சில் காலநிலை மாற்றத்தை பற்றிய ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தது. நம்பிக்கை கொடுக்கும் வகையில் அது இல்லை.
‘காலநிலை மாற்றம் அழிவின் எல்லைக்கு ஏழைகளை அழைத்துச் செல்லும்’ என அந்த அறிக்கை தொடங்குகிறது.
உணவுக்கு பஞ்சம், கட்டாய இடப்பெயர்ச்சி, நோய்கள், மரணம் போன்றவை காலநிலை மாற்றத்தால் நேரவிருக்கின்றன. 1.5 டிகிரி செல்சியஸ்ஸுக்குள் வெப்பத்தை கட்டுப்படுத்தினாலுமே உலகின் 50 லட்சம் மக்கள் தண்ணீர் பிரச்சினையில் உழலுவார்கள். உணவு கிடைக்காது. வேலைகள் இருக்காது. உடல்நிலை கெடும். 400 கோடி மக்கள் அனல்காற்றை சந்திப்பார்கள்.
முக்கியமாக அரசுகளின் சோம்பலை மனித உரிமை கவுன்சிலின் அறிக்கை கடுமையாக கண்டிக்கிறது. வெற்று அவநம்பிக்கை பேச்சுகளால் தீர்வு கிடைக்கப்போவதில்லை என்கிறது. சர்வதேச வணிகத்துக்காக வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் தேவையான பாதுகாப்புகளை கொடுத்துவிட்டு, காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படும் மக்களை அநாதரவாக தவிக்க விட்டு சாகக் கொடுக்கும் அரசுகளின் போக்கை வெளிப்படையாக விமர்சிக்கிறது அறிக்கை.
எல்லாவற்றுக்கும் தீர்வாக அறிக்கை சொல்லும் விஷயம் ஒன்றுதான்.
தொழிற்புரட்சி ஏற்பட்ட காலத்திலிருந்த இயற்கை வளங்களை சுரண்டித்தான் வளர்ச்சி எட்டப்பட்டது. முக்கியமாக புதைபடிம எரிபொருள்களே அந்த வளர்ச்சிக்கான ஆற்றலாக இருந்தது. உலகின் வேலைகளில் பெரும்பாலானவை கரியமில வெளியீட்டை நேரடியாகவோ மறைமுகமாகவோ சார்ந்தே இருந்திருக்கின்றன. காலநிலை மாற்றத்துக்கான தீர்வு உலக பொருளாதார வடிவங்களில் மிக ஆழமான மாற்றத்தை கொண்டு வருவதில்தான் இருக்கிறது. தொழிலாளர் பாதுகாப்பு, வாழ்நிலைக்கான பாதுகாப்பு, வேலைகள் உருவாக்கம் ஆகியவை அத்தீர்வுக்கான முன்னெடுப்புகள்.
காவிரி மறுக்கப்பட்டு, தாமிரபரணி பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டு, புதைபடிம எரிபொருட்களுக்கான வேட்டைக் காடாக தஞ்சை மாற்றப்படும்போது விவசாயம் பொய்க்கும். வேலைகளை பறிபோகும். மக்களின் வாழ்க்கைகள் தொலையும்.
அந்த நேரத்தில் மிக இயல்பாக கோபத்தின் விளிம்புகளே மக்களின் புகலிடங்களாக இருக்கும்.
இந்தியாவின் கடைக்கோடியில் இடம்பெற்று முப்பக்கமும் கடல்கள் சூழ்ந்திருக்கும் மாநிலத்தில் காலநிலை மாற்றம் நேரடியாக நேரும் அதே நேரத்தில் சமூக விளைவுகளாகவும் பரிணமிக்கும் சூழலும் வலுவாகவே இருக்கிறது.
தமிழகத்துக்கும் அதன் அரசியல் பேசுவோருக்கும் இருக்கும் கால நிலைமாற்றம் அளிக்கும் வேலைகள் மூன்று. கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் மேற்கொள்வதை கட்டாயப்படுத்துவதும் முதல் வேலை. காலநிலை மாற்றம் உருவாக்கப் போகும் சூழலியல் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான தயாரிப்புகளை முன்னெடுப்பது இரண்டாம் வேலை. காலநிலை மாற்றம் கொடுக்கவிருக்கும் சமூக விளைவுகளுக்கு தயாராவது மூன்றாவது வேலை.
இயற்கைக்கு நாடு கிடையாது. எல்லைகள் கிடையாது. மொழியோ இனமோ சாதியோ கிடையாது. உலகம் மொத்தத்துக்கும் ஒரே இயற்கைதான். எந்த மூலையில் பாதிப்பு ஏற்பட்டாலும் உலகின் மறுமூலையில் அது பிரதிபலிக்கும்.
முதன்முறையாக வேறொரு நாட்டில் நடக்கும் பிரச்சினையின் காரணம் நம்மையும் அவர்களுடன் கொண்டு சென்று இணைக்கிறது. துனிசியாவில் முகமது புவாசிசி எரிந்ததற்கும் தஞ்சாவூரில் ஆனந்த்பாபு கொல்லப்பட்டதம் காரணம் அடிப்படையில் ஒன்றுதான். சிரியாவாகவோ மாலத்தீவாகவோ தமிழகம் மாறுவதற்கு இருக்கப் போகும் காரணமும் ஒன்றேதான்.
இதுவரை எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகளுக்கு இரண்டு வகையான விளைவுகள் இருந்திருக்கின்றன. சமூக விளைவு, பொருளாதார விளைவு. இனி எடுக்கப்பட போகும் அரசியல் முடிவுகளுக்கான விளைவுகள் மூன்றாக இருக்கப் போகிறது. சமூக விளைவு, பொருளாதார விளைவு, காலநிலை விளைவு.
எதிர்காலம் கருதியும் நேர்மையான தீர்வுகளுக்காகவும் தமிழினத்தின் நீட்சிக்காகவும் காலநிலை மாற்றத்தை பற்றிய புரிதல் அரசியலிலும் அரசமைப்பிலும் இடம்பெற வேண்டியது காலக்கட்டாயம்.
இன்னுமே அரசும் அரசியல் கட்சிகளும் காலநிலை மாற்றத்தை தங்களின் கொள்கைகளிலும் திட்ட அளவிலும் கொள்ளவில்லை எனில் கடல் தமிழகத்தை கொள்ளும் காலம் வந்துவிடும். ஏதோவொரு காலத்தில் நாமல்லாத ஓருயிர் பூமியை தோண்டி பார்க்கும் போது காலநிலையை கூட கணிக்கத் தவறிய அறிவற்ற கூட்டமாக தமிழினம் புரிந்து கொள்ளப்படும்.
(முற்றும்)
ராஜசங்கீதன்
Courtesy: Poovulagu.org