புதுச்சேரி முதல்வர் ராஜினாமா: காங். ஆட்சி முடிவுக்கு வந்தது

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால், அங்கு ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டது. இதனால், எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தின. இதனையடுத்து, துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசையின் உத்தரவின்படி சட்டப்பேரவையில் இன்று (பிப். 22) காலை நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார்.

தீர்மானத்தை முன்மொழிந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முதல்வர் நாராயணசாமி உரையாற்றினார். அப்போது, அவர் ஒன்றிய அரசு மற்றும் முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கடுமையாக சாடினார்.

பாஜகவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற வகையில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவதாக விமர்சித்தார். முதல்வர் உரை முடிந்தவுடன் அவருடன் திமுக,  காங்கிரஸ்  உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால், சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானம் நிறைவேறவில்லை என சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

இதனையடுத்து, புதுச்சேரியில் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவந்த முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்த பிறகு, ஆளுநர் மாளிகையில் தமிழிசையை முதல்வர் நாராயணசாமி சந்தித்தார். அங்கு முதல்வர், அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் நாராயணசாமி அளித்தார்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் நாராயணசாமி  செய்தியாளர்களிடம் கூறுகையில், “துணைநிலை ஆளுநரிடம் எங்களுடைய ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக்கோரி கடிதத்தை கொடுத்துவிட்டு வந்துள்ளோம். இதன்பிறகு முடிவு செய்ய வேண்டியது துணைநிலை ஆளுநர் தான்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குத்தான் வாக்களிக்கும் உரிமை உண்டு என்ற எங்களின் கருத்தை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் நாங்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்.

ஆட்சி கலைப்பு செய்த பாஜகவுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த என்.ஆர்.காங்கிரஸ், அதிமுகவுக்கும் புதுச்சேரி மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்தார்.

 

Read previous post:
0a1e
தனுஷ் நடிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘’ஜகமே தந்திரம்’ – டீசர்

தனுஷின் 40-வது திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நெட்பிளிக்ஸில் வெளிவர இருக்கும் இப்படத்தின் டீசர்:-

Close