“இளவரசன் மரணம் தற்கொலையே”: வழக்கை ஊத்தி மூடியது உயர்நீதிமன்றம்!

தருமபுரி இளவரசன் மர்ம மரண வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. இளவரசன் தற்கொலை செய்துகொண்டதாக சிபிசிஐடி முன்வைத்த வாதத்தை ஏற்றுக் கொண்டு உயர்நீதிமன்றம் முதல் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் என்ற தாழ்த்தப்பட்ட சமூக இளைஞனும், செல்லன்கொட்டாயைச் சேர்ந்த திவ்யா என்ற வன்னியப் பெண்ணும் காதலித்து, கடந்த 2012 அக்டோபர் 8-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி அக்டோபர் 10-ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்துக்கு திவ்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த பிரச்சினை சாதிக் கலவரமாக மாறியது. இதில் நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டாம்பட்டி பகுதிகளில் வீடுகள் தாக்கப்பட்டன. குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் 296 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் இளவரசனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என திவ்யா தெரிவித்தார். இந்நிலையில் 2013 ஜூலை 4-ம் தேதி தருமபுரி அரசு கலைக் கல்லூரிக்கு பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில் இளவரசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இளவரசனின் மர்ம மரணம் குறித்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றக் கோரி இளவரசனின் தந்தை இளங்கோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) பொறுப்பு தலைமை நீதிபதி ரமேஷ், நீதிபதி ஆர். மகாதேவன் அடங்கிய முதல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இளவரசன் தற்கொலை செய்து கொண்டார் என வாதிட்டார். அப்போது நீதிபதிகளும், “இளவரசன் உடல் மூன்று முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. சிபிசிஐடி முன்வைக்கும் வாதங்கள் ஏற்கத் தக்கதாகவே இருக்கிறது. எனவே, இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது” என்று உத்தரவு பிறப்பித்தனர்.