“ஓவர்நைட்டில் எனக்கு ஸ்டார் அந்தஸ்து!” – ‘நீயா நானா’ நமீதா

‘சொல்லுங்க நீங்க யாரு… இதுக்கு முன்னாடி பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?’’ என்று கேட்டதும்…. கலகலவென சிரிக்கிறார் நமீதா. சமீபத்தில் ‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான்…’ என பாய்ஸ் கேர்ள்ஸுக்கு இடையே நடந்த காரசார விவாதத்தில் உருவான ஸ்டார்..!

’’அச்சச்சோ பில்ட்-அப்லாம் வேண்டாம். நான் எப்பவும் சாதாரண பொண்ணுதான். மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்கில், சமூக மேம்பாடு படிச்சுட்டு இருக்கேன். ஒரு பொண்ணா எப்பவும் என் பார்வையை, உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாதுனு இயங்குவேன். அப்படித்தான் அந்த ஷோவிலும் நடந்துக்கிட்டேன். அது பலருக்கு அதிர்ச்சியா இருந்துருக்கு. ஆனா, இனிமே எல்லாம் இப்படித்தான்!’’

அந்த ஷோவில் என்ன நடந்துச்சு… முழுசா சொல்லுங்க?

’’என் ப்ரோ மாலினி ஜீவரத்தினம், ஷோவுக்கு முதல் நாள்தான் ’நீயா நானா’வில் கலந்துக்கணும்னு வரச் சொன்னாங்க. அதனால அவசரமா கிளம்பிப் போனேன். அங்கு போனதுல இருந்தே என்னை எல்லாரும் ஒரு மாதிரிதான் பார்த்துட்டு இருந்தாங்க. என் ஹேர் ஸ்டைல், டிரெஸ்லாம் சிலருக்கு உறுத்திருக்கலாம் போல. நான் நடுவுல உட்கார்ந்திருந்தேன். அதனால எதிர்ல யார் பேசினாலும் கவனிக்க வேண்டியிருந்தது. நிகழ்ச்சி ஆரம்பிச்சதுல இருந்தே கடுப்பாக இருந்துச்சு. பாய்ஸுக்கு என்ன பாட்டு வேணும்னு கேட்டதுக்கு ’இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சி போச்சுடா’னு சொல்றதுல இருந்து,  பெண்கள் மீது வார்த்தை தாக்குதல் மேற்கொள்ளும் பாடல்களையே சொல்லிட்டு இருந்தாங்க. ’கிளப்புள மப்புல…’ பாட்டை யார் பாடினாலும் எனக்குப் பிடிக்காது.

ஒருவர் அந்தப் பாட்டை ஃபீல் பண்ணி பாடினார். அதுதான் கோபத்தை தூண்டி விட்ருச்சு.  அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும். ’பெண்கள் ஏன் காஞ்சிப்பட்டை கட்டாமல் கர்ச்சீப் கட்டுகிறார்கள்’னு ஒரு வரி. நான் கேக்குறேன்… அந்தப் பாட்டை பாடி ஆடுன ஹிப்ஹாப் ஆதி என்ன வேட்டி கட்டிட்டா ஆடுனார்?  தமிழ்நாட்டுல கிட்டதட்ட 90 சதவிகித யங்ஸ்டர்ஸ் எங்கே வேட்டி கட்டுறாங்க? ஷார்ட்ஸ் போட்டுட்டுதான் சுத்துறாங்க. அதைப் பத்திலாம் ஏன் யாரும் சமூக அக்கறையோட கேள்வி கேட்கலை. இந்தக் கோபத்தைதான் அன்னைக்கு ஷோவில் காமிச்சேன்!”

வேட்டி, சேலை விஷயத்தில் நீங்க சொல்றது சரி. ஆனா, ஆண்கள் மது அருந்தினால் பெண்களும் அருந்தணுங்றது கட்டாயமா?

’’ஆண்கள் குடிக்கிறதால நானும் குடிப்பேன்னு சொல்லலை. ஆண்கள் சோறு சாப்பிடுறாங்க… அதனாலதான் பெண்களும் சோறு சாப்பிடுறாங்கனு சொல்ற மாதிரி எதையும் பொதுப்படையா பார்க்க முடியாதுதான். ஆனா, பெண்களுக்கும் ஆண்களுக்கு இருக்கும் அதே வலி, வேதனை உணர்வுகளுடன் இருக்கும் உடல் அமைப்புதான். அவங்களும்  மனுஷிதான். ஒரு பெண்ணுக்குத் தோணும்போது குடிக்கலாம்ங்றதுல எந்தத் தப்பும் இல்லைங்றதுதான் என் பார்வை. அதே சமயம் அது ஒவ்வொருவர் தனிநபர் விருப்பு, வெறுப்பு சார்ந்தது. ஒரு பெண்ணை மது குடிக்க கட்டாயப்படுத்துறது எவ்வளவு தப்போ, அதே அளவு தப்புதான் மது அருந்தும் ஒரு பெண்ணை விமர்சிப்பதும்.

மது குடிப்பதும், புகை பிடிப்பதும் உடல் நிலைக்குக் கேடுனு எனக்குத் தெரியும். நான் அதைச் செய்ய மாட்டேன். ஆனா, அதே சமயம் ஆண்கள் மது அருந்தினால் அது சமூக வெளியில் ஏற்றுக் கொள்ளப்படுவதும் பெண்கள் குடிப்பதைப் பற்றி பேசினாலே ’குய்யோ முய்யோ’னு கத்துறதும் சமூகத்தின் இறுகிய ஆணாதிக்கச் சிந்தனையைதான் வெளிப்படுத்துது. அது மட்டுமில்லாமல், இங்கே ஒரு ஆணும் பெண்ணும் காதலித்தால் பெண்களுக்கு கல்வி நிலையங்களின் ஆதரவு இருக்குனு அபத்தமா பேசினாங்க. அதுதான் எனக்கும் புரியலை. இது எவ்வளவு பெரிய பொய்? பெண்களுக்கு எப்போ எந்த கல்வி நிலையத்தின் ஆதரவு கிடைச்சிருக்கு. கல்வி நிலையங்களில் பெண்கள் எதிர்கொள்கிற அடக்குமுறை அவளோட தோழிக்கே தெரியாது. பொதுவெளியில் பெண்களுக்கு எல்லாரும் ஆதரவாக இருப்பாங்கனு நம்புறது மூடநம்பிக்கை. என் விஷயத்துலயே என்னலாம் நடந்துச்சுனு பார்த்தீங்கள்ல!’’

ஆமா… மீம்ஸ், கமெண்ட்னு வரம்பு மீறி விமர்சிச்சாங்களே… அதையெல்லாம் எப்படி எடுத்துக்கிட்டீங்க?

’’அதெல்லாம் எதிர்பார்க்கலை. ஆனா, கண்டுக்கலை. பல மீம்கள் மிக மோசமா இருந்துச்சு.  சில ஃபேஸ்புக் பேஜ், வீடியோக்களை என் அக்கா புகார் கொடுத்து எடுக்க வைச்சாங்க. பல பின்னூட்டங்களில் என்னை நான்கு பேர் சேர்ந்து வலுக்கட்டாய உடலுறவு கொள்ளணும்னுலாம் எழுதியிருந்தாங்க. அவங்களை நினைச்சு பரிதாபமாத்தான் இருந்துச்சு. ஒரு பொண்ணை பழி வாங்க பாலியல் வன்புணர்வு பண்ணணும்னு நினைக்கிற உளவியலில் இருந்து பெண்கள் உடல் மீதான அடக்குமுறை தொடங்குது. உடலுறவைப் பற்றிய சரியான புரிதல் இல்லாதவங்ககிட்ட என்ன பேசி என்ன ஆகப் போகுதுனுதான் தோணுது. ஒரு நடிகைக்கு விருது தரப்படும்போது, அவரது நடிப்பைப் பற்றி விமர்சிக்காமல், அவரது அழகை விமர்சிப்பவர்கள் பலர். அதன் மூலம் அவர்களின் மன வக்கிரத்தையே நாம் புரிந்து கொள்ள முடியும். என்னைப் பத்தின பின்னூட்டங்களும் மீம்ஸ்களும் அவங்களைப் பத்தி நிறைய உணர்த்தியிருக்கு. நேர்ல பேசுறப்போ கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாம, ஒரு கம்ப்யூட்டர் பின்னாடி ஒளிஞ்சுக்கிட்டு வக்கிரமா பேசுறவங்ககிட்ட நான் ஏன் மல்லுக்கட்டணும். இவங்களுக்கு நடுவுல சில நல்ல மீம்ஸ்களும் பாராட்டுகளும் எனக்குக் கிடைச்சது. அதுதான் பெரிய சந்தோஷம்!’’

அம்மா, அப்பா, உறவினர்கள், நண்பர்களின் ரியாக் ஷன் என்ன?

’’அம்மா, அப்பா, இருவரின் நண்பர்களும் ‘நல்லா நறுக்குனு கேட்டம்மா’னு பாராட்டினாங்க. ‘ஒரு பையன் மாதிரி வளர்த்துட்டோம்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, ஒடுக்கும் சமூகத்துக்கு எதிரா நீ கேள்வி கேட்டப்ப, உன்னை சரியாதான் வளர்த்திருக்கேன் தோணுது’னு பூரிப்பா சொன்னார். மத்தபடி ஃப்ரெண்ட்ஸ்லாம் வாழ்த்தினாங்க. அவங்களுக்கு நான் இப்படி பேசுறதுலாம் புதுசு இல்லை. நான் எப்பவும் அவங்ககிட்ட பேசுறதை டி.வில பேசியிருக்கேன்… அவ்வளவுதான். ஆனா, நிகழ்ச்சி ஒளிபரப்பானதுல இருந்து குவியும் வாழ்த்துக்கள், திட்டுக்களால் ஓவர்நைட்டில் எனக்கு ஸ்டார் அந்தஸ்து கொடுத்துட்டாங்க. எங்கெல்லாமோ இருந்து வேலைக்கான அழைப்பு வருது. தேங்க்ஸ் ஃப்ரெண்ட்ஸ்!”’

ரமணி மோகனகிருஷ்ணன்

(மாணவப் பத்திரிகையாளர்)

நன்றி – விகடன்

Read previous post:
01
3 மாணவிகளை கொன்ற எஸ்விஎஸ் கல்லூரியின் அராஜக கதை!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பங்காரம் மற்றும் இந்திலி ஆகிய இரு கிராமங்களின் எல்லையில் மட்டும் ஏழு தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளன.

Close