3 மாணவிகளை கொன்ற எஸ்விஎஸ் கல்லூரியின் அராஜக கதை!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பங்காரம் மற்றும் இந்திலி ஆகிய இரு கிராமங்களின் எல்லையில் மட்டும் ஏழு தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் SVS யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி.

இந்த கல்லூரியின் நிறுவனர் டாக்டர் சுப்ரமணியன் தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ மன்றத்தின் உறுப்பினராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி வாசுகி சுப்ரமணியன் கல்லூரியின் தாளாளராக இருக்கின்றார்.

வாசுகியின் அனுமதி இல்லாமல் வெளியாட்கள் யாரும் உள்ளே சென்றுவிட்டால் மீண்டு வருவது கடினம்தான். அந்த அளவிற்கு தனக்கென்று ஒரு தனி சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் இவரும் ஒரு ஜெயலலிதா தான்.

கல்லூரியின் கட்டமைப்பு மற்றும் அனுமதியின் யோக்கியதை:

8 ஏக்கர் நிலப்பரப்பில் மூன்று மாடி கட்டிடங்களைக் கொண்டு இயங்குகிறது கல்லூரி. அதுவும் இரண்டு மாடி, சென்ற ஆண்டுதான் கட்டி முடிக்கப்பட்டது. நீண்ட வணிக வளாகங்களை கட்டி வாடகைக்கு விடுவது போல் தான் அதன் கட்டமைப்பே உள்ளது.

கல்லூரிக்கு தேசிய எலக்ட்ரோ ஹோமியோபதி அனுமதியும், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தின் அனுமதியும் பெற்று 2008-ல் துவங்கப்பட்டது. அப்பொழுது மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி ராமதாசும், தமிழக சுகாதார துறை அமைச்சராக தி.மு.க.வின் MRK பன்னீர்செல்வமும் இருந்துள்ளனர். இந்த கல்லூரியை திறந்து வைத்தவரும் MRK தான்.

2012-ம் ஆண்டு அக்கல்லூரி நிர்வாகம் ஹோமியோபதி படிப்புகளை நடத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கவில்லை என்ற காரணத்தால் ஹோமியோபதி படிப்புகளை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பிறகு 2014-ம் ஆண்டு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் அனுமதி பெற்று ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை துவங்கப்பட்டது. அப்பொழுது தமிழக சுகாதார துறை அமைச்சர் அ.தி.மு.க.-ன் விஜயபாஸ்கர்.

மொத்தத்தில் SVS என்ற பெயரில் எலக்ட்ரோபதி, இயற்கை மற்றும் யோகா, ஹோமியோபதி ஆகிய மூன்று வகையான படிப்புகளும் ஒரே கல்லூரியில் தான் இயங்கி வந்துள்ளன.

இந்த லட்சணத்தில் கட்டுமான சம்பந்தப்பட்ட எந்த துறையிடமும் இக்கல்லூரி நிர்வாகம் அனுமதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தீயணைப்பு, பொதுப்பணித் துறையிடமும் அனுமதி பெறவில்லை. மேற்கண்ட மூன்றில் எவற்றேனும் ஒன்றில் அனுமதி பெறவில்லை என்றாலே கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியும் என்ற நிலை இருந்தும் செய்யவில்லை. ஏன்? பல்கலைக்கழக நிர்வாகம் முதல் ஓட்டுப்பொறுக்கிகள், அதிகாரிகள் என அத்துணை பேரும் வாசுகி சுப்ரமணியனுக்கு வால் பிடித்துள்ளனர்.

எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல், ஆசிரியர்கள், ஆய்வகங்கள் என எதுவுமே இல்லாமல் ஒரு மருத்துவக் கல்லூரியை நடத்த அனுமதிக்க முடியுமென்றால் இந்த அரசின் யோக்கியதையை பாருங்கள்.

இந்தியாவின் உயர்படிப்புகளில் ஒன்றாக கருதப்படும் மருத்துவக் கல்லூரிக்கே இந்த நிலைமை தான் என்றால் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டிருக்கும், இதற்கு எத்தனை கோடி கைமாறி இருக்கும் என்று நினைக்கவே தலை சுற்றுகிறது.

மாணவ-மாணவிகளின் தற்கொலையும் அதன் பின்னணியும்:

2008-ம் ஆண்டு இக்கல்லூரி துவங்கப்பட்டதில் இருந்து இன்று வரை ஒரு மருத்துவரை கூட இக்கல்லூரி நிர்வாகம் உருவாக்கியதே இல்லை. ஆனால் ஒரேயொரு கட்டடத்தில் துவங்கப்பட்ட இது இன்று மூன்று மாடி கட்டிடங்களாக எழுந்து நிற்கிறது எவ்வாறு என்றால் மாணவர்களை மிரட்டி கட்டணம் வசூலிப்பது, தலித் மாணவர்களின் உதவித் தொகைகளை தானே சுருட்டிக்கொள்வது, அபராதம் என்ற பெயரில் மாணவர்களிடம் இருந்து அடாவடியாக பணம் கொள்ளையடிப்பது என்ற அராஜக முறையில் தான் கட்டியுள்ளனர். அந்தக் கட்டிடத்தை கட்டுவதற்கான அனைத்து வேலைகளையும் மாணவர்கள் தான் செய்துள்ளனர். அருகில் உள்ள கிராம மக்களைக்கூட வேலைக்கு கூப்பிட்டது இல்லை.

சின்னசேலம், கள்ளக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்களை கல்லூரியில் சேர்த்துக் கொள்வதே இல்லை. காரணம் மாணவர்கள் மீதான அடக்குமுறை, கட்டணக்கொள்ளை உள்ளிட்ட மோசடிகள் உள்ளூரில் உள்ளவர்களுக்கு தெரிந்தால் தனக்கு எதிராக மாறிவிடுவார்கள் என்பதை நன்கு அறிந்து திட்டமிட்டு செயல்பட்டு வந்துள்ளார் வாசுகி சுப்ரமணியன்.

வாசுகியின் கொடுமைகள் அதிகரிக்கவே 2012-ல் கல்லூரியை விட்டு மாணவர்கள் விலக விரும்புவதாக கூறி சான்றிதழை கேட்டுள்ளனர். ஆனால் அவர்களிடம் ஐந்தரை வருடத்திற்கான முழு பணத்தையும் கட்டினால் தான் டி.சி தருவேன் என்று மிரட்டி இருக்கிறார் வாசுகி சுப்ரமணியன்.

இந்த அயோக்கியத்தனத்திற்கு எதிராக மாணவர்கள் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள். இருப்பினும்கூட நீதிமன்றத்தால் அவர்களின் அராஜகத்தை ஒன்றும் செய்துவிட முடியவில்லை. பல துறைகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இறுதியாக 2014-ம் ஆண்டு ஒரு ரிட் மனு 22 மாணவர்களின் சார்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில், கல்லூரியில் அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது; அவை இயங்குவதற்கு தகுதியானவை தான் என்ற ஒரு தீர்ப்பை ஆகஸ்ட் 2015 அன்று வழங்கியது நீதிமன்றம்.

நீதிமன்றம் இப்படி ஒரு மோசமான தீர்ப்பு வழங்கியதை சற்றும் எதிர்பாராத மாணவர்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இந்த அரசமைப்பில் நீதி கிடைக்கப்போவதில்லை என்றுதான் 07-09-2015 அன்று மாவட்ட ஆட்சியரகம் முன்பு ஆர்ப்பாட்டமும், 14-09-2015 அன்று 8 மாணவர்கள் தீக்குளிப்பு போராட்டமும் நடத்தியதோடு 05-10-2015 அன்று மாவட்ட ஆட்சியரகம் முன்பு எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கும் முயன்றுள்ளனர். (இது குறித்து விரிவான கட்டுரை 09-10-2015 அன்று “SVS மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தற்கொலை முயற்சி” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.) இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்பொழுது கல்லூரியில் புதிய கட்டிடம் கட்டும் பணியை SKS கன்ஸ்ரக்ஷன் மூலம் தொடங்கியுள்ளார். அதற்கும் மாணவர்களிடம் வசூலிக்க வேண்டும். அதே அடக்குமுறை, கட்டணக் கொள்ளை, மிரட்டல் என பல வகையில் மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்ந்துகொண்டிருந்த நிலையில், மாணவிகள் சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகியோர் கல்லூரிக்கு எதிரே உள்ள கிணற்றில் சடலங்களாக மீட்கப்படுள்ளனர்..

10 அடி நீளம், 7 அடி அகலம், 75 அடி ஆழம் கொண்ட கிணற்றில் வெறும் ஐந்து அடி மட்டுமே தண்ணீர் இல்லை. இந்த கிணற்றில் விழுந்து சாவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள் விவசாயிகள். மேலும் மாணவிகள் உடலை கைப்பற்றும்பொழுது மாணவிகளுக்கு கையில் சிராய்ப்பும், தலையில் காயமும் இருந்தது என்கிறார் கிணற்றின் உரிமையாளர் பரமசிவம்.

இந்த உயிர்பலிக்கு பிறகு கல்லூரிக்கு சீல் வைத்துள்ளனர். வாசுகி சுப்ரமணியன், அவரது மகன் மற்றும் கல்லூரி ஊழியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

யார் இந்த வாசுகி சுப்ரமணியன்?

சங்கராபுரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள குக்கிராமம் செல்லம்பட்டு. ஜெயராமன் – காந்தி தம்பதியினருக்கு முதல் மகளாக பிறந்தவர் வாசுகி. கரு நாயக்கர் பிரிவை சார்ந்தவர். ஜெயராமன் அரசு ஒப்பந்ததாரராக இருந்துள்ளார். 1990 களில் கிராமத்தில் இருந்த வீடு, சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிட்டு கள்ளக்குறிச்சிக்கு வந்துவிட்டனர். அங்கு சொந்தமாக ஒரு லாட்ஜ் நடத்தி வந்துள்ளார். லேப் டெக்னீசியன் படிப்பு முடித்துள்ள வாசுகி தனியாக ஒரு ரத்த பரிசோதனை நிலையத்தை நடத்தி வந்தார். அப்பொழுது தான் செல்லம்பட்டின் அருகில் உள்ள பால்ராம்பட்டு கிராமத்தை சார்ந்த டாக்டர்.சுப்ரமணியன் கள்ளக்குறிச்சியில் ஒரு கிளினிக்கை நடத்தி வந்தார். இவர் ஆதிதிராவிடர் பிரிவை சார்ந்தவர். பெரிய அளவில் சொத்துக்கள் இல்லை. சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் தான். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு, தனது தந்தை நடத்தி வந்த லாட்ஜை விற்று அந்த பணத்தை கொண்டு தான் 1996-ம் ஆண்டு தற்பொழுது கல்லூரி உள்ள இடத்தை தெய்வசிகாமணியிடம் இருந்து வாங்கினார். அதற்கு முன்பு பரமசிவம் என்பவர் (தற்பொழுது மாணவிகள் இறந்து கிடந்த கிணற்றின் உரிமையாளர்) குத்தகைக்கு 3 ஏக்கரில் மரவள்ளியை போட்டிருந்தார். அதனை அறுவடை செய்ததும் நிலத்தை ரிஜிஸ்டர் செய்து கொள் என்று தெய்வசிகாமணி வாசுகிசுப்ரமணியனிடம் கூறியிருக்கிறார். அதனை ஏற்றுக்கொண்ட வாசுகி முன்பணமாக 1 லட்சத்தை தெய்வசிகாமணியிடம் கொடுக்கவே, பதிவு செய்யாமலே நம்பிக்கை அடிப்படையில் பத்திரத்தை வாசுகியிடம் ஒப்படைத்துள்ளார் நிலஉரிமையாளர். விளைவு, ஒரு வாரத்தில் மரவள்ளியை பாதி பயிரிலேயே JCB மூலம் பிடுங்கி எறிந்துள்ளார் வாசுகி சுப்ரமணியன். இதனை கேட்ட தெய்வசிகாமணியை பணம் தர முடியாது என்று மிரட்டியுள்ளார்.

ஆக, கல்லூரிக்கான அனுமதி மட்டுமல்ல, இடத்தையும் போர்ஜரி செய்துதான் வாங்கியுள்ளார் வாசுகி சுப்ரமணியன். அது மட்டுமல்லாமல் கல்லூரிக்கு அருகில் ஒரு ஓடை உள்ளது. அதனை தூர்த்துதான் நுழைவு வாயில் கட்டியுள்ளார். கல்லூரிக்கு உள்ளே 1.45 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. அதனையும் ஆக்கிரமித்து இருக்கிறார்.

பங்காரம் கிராமத்தை சார்ந்த கொளஞ்சி என்பவர் வயலுக்கு செல்வதற்கு கல்லூரி வழியாக சென்றதால் 2 நாட்கள் கல்லூரியில் வேலை செய்ய வைத்து துன்புறுத்தியிருக்கிறார்.

அதே பங்காரத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஓடைக்கு விறகு பொறுக்க கல்லூரி வழியாக சென்றதால், அப்பெண்ணை பிடித்து, “இனிமேல் இவ்வழியாக வந்தால் மரண ஊசி போட்டு கொன்று விடுவேன்” என்று மிரட்டியுள்ளார். இவ்வளவு படுபாதக செயலையும் செய்துள்ளார் வாசுகி சுப்ரமணியன்.

அதுமட்டுமல்லாமல், கல்லூரிக்கு விற்ற நிலம் போக மீதி நிலத்தை சென்னையில் உள்ள எம்.ஜி.ஆரின் குடும்ப டாக்டர். முத்துசாமி அவர்களுக்கு விற்றுள்ளார் தெய்வசிகாமணி. அந்த நிலத்தின் வழியாக 2012-ம் ஆண்டு ரவுடிகளை வைத்து அடாவடியாக கல்லூரிக்கு பாதை போட்டுள்ளார் வாசுகி.

இதே முத்துசாமி மீது இரண்டு முறை பொய் வழக்கு போட்டு மிரட்டியுள்ளார். வழக்கு எண்:428/2007, 482/2010 இவை இரண்டும் பொய் வழக்கு என்று கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

டாக்டர் முத்துசாமி நிலத்தின் வழியாக பாதை அமைப்பதற்கு முற்றிலும் உதவியது அப்போதைய RDOவாக இருந்த உமாபதி என்பவர் தான். ஏரி மண்ணை சட்டவிரோதமாக கொண்டுவந்து பாதையை போட்டனர். அதன்பிறகு வந்த கள்ளக்குறிச்சி RDO குணசேகர் கல்லூரிக்கு அடியாள் போல் நடந்துகொண்டார் என்று கூறுகின்றனர் கிராம மக்கள்.

டாக்டர் முத்துசாமியின் நிலத்தில் பாதை அமைத்தது தவறு என்று கூறி அதனை அப்புறப்படுத்த கூறிய தாசில்தாரை தனது கூலிப்படையை ஏவிவிட்டு, RDO குணசேகர் முன்னிலையிலேயே மிரட்டியுள்ளார் வாசுகி சுப்ரமணியன்.

முத்துசாமிக்கு ஆதரவாக சென்ற சின்னக்கண்ணு, பக்கத்து நிலத்துகாரர். அவர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி பொய் வழக்கு கொடுக்கச் சொல்லி மாணவ – மாணவிகளை மிரட்டி, 65 வயதான சின்னக்கண்ணு மீது வழக்கு போட வைத்து, ஒரு பாசிஸ்டின் மனநிலைக்கே சென்றுள்ளார் வாசுகி சுப்ரமணியன். அப்போதைய சின்னசேலம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், SI அண்ணாதுரை கல்லூரிக்கு சாதகமாக வழக்கு எண்: 8/2012 . பிரிவு: 147, 294(B), 323, 506(I) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டுள்ளார். இதனை கேட்க சென்ற இந்திலி ஊராட்சி மன்ற தலைவர் ஆச்சலா, சின்னகண்ணுவின் மகன் ஆகியோரையும் வழக்கில் சேர்த்து ரிமாண்ட் செய்துள்ளார். அதன்பிறகு கல்லூரியோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் இன்ஸ்பெக்டர் செல்வராஜ்.

2008-ல் கள்ளக்குறிச்சியில் DSP-யாக பணியாற்றிய ஜெயபாலன் ஓய்வு பெற சட்டவிரோதமான முறையில் உதவியதாகவும், தற்பொழுது கள்ளக்குறிச்சி உளவுப்பிரிவில் பணியாற்றும் குணசேகருக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் நீண்டகால தொடர்பு இருந்து வருவதாகவும் கூறுகின்றனர்.

2010-ம் ஆண்டில் இருந்து கள்ளக்குறிச்சியில் பணியாற்றிய RDO-க்கள் கதிரவன், இன்வசன்ட் திவ்யா, அப்போதைய சப் கலெக்டர் விவேகானந்தன், மாலதி ஆகிய அனைவருமே இந்த கல்லூரியின் சட்டவிரோத நடவடிக்கைகள் அத்துணைக்கும் துணை போயுள்ளனர்.

வாசுகி சுப்ரமணியன் என்பவர் தனி ஆளாக நின்று இவ்வளவு மோசடிகளையும் செய்யவில்லை. இந்த கிரிமினலின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் துணை நின்றது இந்த அரசின் ஒவ்வொரு உறுப்புகளும் தான். ஆழமாக சிந்தித்து பார்த்தால் தனக்கென்று வரையறுக்கப்பட்ட பணிகளை செய்யாமல் தவறியதோடு மட்டுமல்லாமல் மக்களுக்கு எதிரான குற்றக் கும்பலாக ( Mafia Gang) மாறியுள்ளது அரசு. கிரிமினல்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல் அதற்க்கெதிராக போராடக்கூடியவர்களையும் ஒடுக்குகிறது.

வாசுகி சுப்ரமணியன் என்ற கிரிமினலை, துணை நின்ற அதிகாரிகளை கைது செய்யக் கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள், மக்கள் அதிகாரம், விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்பினரையும் கைது செய்தது.

ஆனால், அறிஞர்கள் கூறுவது என்னவென்றால், சில அதிகாரிகள் தான் தவறு செய்கிறார்கள்; .மற்றபடி அரசின் மீது குற்றம் சொல்ல முடியாது என்கிறார்கள். இல்லையேல், CBI விசாரணை கோருவது அல்லது நீதிமன்ற விசாரணை கோருகிறார்கள்.

நாடறிந்த பரபரப்பான வழக்குகளில் நீதிமன்றங்களின் தீர்ப்பு எவ்வாறு வந்துள்ளது என்பது நமக்கு தெரியும். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயா விடுவிக்கப்பட்டதும், குஜராத் முஸ்லீம் படுகொலையின் சூத்ரதாரிகளான நரேந்திர மோடி, அமித் ஷா  போன்றோர் கொலைக் குற்ற வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டதையும் என்னவென்று சொல்வது?

CBI விசாரணை நடத்திய வழக்கில் சத்யம் கம்ப்யூட்டர் ராமலிங்க ராஜு போன்ற கார்பரேட் கிரிமினல்கள் இன்று உல்லாசமாக சுற்றித் திரிகிறார்கள். இவ்வளவு நடந்த பிறகும் இந்த கட்டமைப்பை நம்ப வேண்டுமா?

தற்பொழுது 3 மாணவிகள் மரணத்திற்கும் CBI விசாரணை தான் கோருகின்றனர். வேண்டுமானால், வாசுகி சுப்ரமணியன் இன்னும் செய்யாத தவறு என்ன என்பதை கண்டுபிடிக்க CBI விசாரணையை கேட்கலாம். அதிகாரிகள், MLA, MP, அமைச்சர் போன்ற கிரிமினல்களின் ஆதரவோடு அவ்வளவு அயோக்கியதனங்களையும் செய்திருக்கிறார் வாசுகி சுப்ரமணியன்.

மேலும் அழுகி நாறிப்போன இந்த சட்டத்திற்கு வெளியேயும் ஒரு மாபியா கும்பலை இயக்கி வருகிறார். அவர் தான் மாடூரை சேர்ந்த பெருமாள் மகன் வெங்கடேசன். இந்த பெரு.வெங்கடேசன் முன்னர் விடுதலை சிறுத்தை கட்சியில் இருந்து வெளியேறி 2004-ம் ஆண்டு “ஆதிதிராவிடர் புரட்சி கழகம் “ என்றவொரு லெட்டர் பேடு தலித் அமைப்பை தொடங்கி தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார். அரசியல் மாபியாக்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்வது தான் இவருடைய தொழில். டாக்டர் முத்துசாமிக்கும் வாசுகி சுப்ரமணியத்துக்கும் ஏற்பட்ட நிலத்தகராறில் கட்டைப்பஞ்சாயத்து செய்தவர் இவர் தான். பிறகு வாசுகி சுப்ரமணியனின் அல்லக்கையாக மாறி கல்லூரியே கதி என கிடந்தார்.

மாணவர்களை மிரட்டுவது, திட்டுவது, பெற்றோர்களை மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் இவர் தான் செய்து வந்தார். இந்த வெங்கடேசன் “மன்னார்குடி மாபியா” கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக கூறுகின்றனர் பிரபல வழக்கறிஞர்கள். இந்த மன்னார்குடி மாபியாவின் ஆதரவில் தான் இத்தனை காலமும் ஆட்டம் போட்டுள்ளார்.

அடுத்ததாக, விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வன்னியரசு இந்த கல்லூரிக்கு நெருக்கமானவர் என்றும், சென்னை அரும்பாக்கத்தில் மாணவர்கள் சேர்க்கையின் போது கல்லூரியில் சேர வேண்டாம் என்று பாதிக்கப்பட்ட மாணவர்களாகிய நாங்கள் பிரச்சாரம் செய்தபோது எங்களை மிரட்டியது வன்னியரசு தான் என்றும் உறுதியாக கூறுகின்றனர் அந்த மாணவர்கள்.

இதனை உறுதிபடுத்தும் விதமாக சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகிய மாணவிகள் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை முன்பு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும்பொழுது மாணவர்களை கலைப்பது, பெற்றோரிடம் சமாதானம் பேசி பிரேத பரிசோதனை செய்ய வைத்தது உள்ளிட்ட வேலைகளை கச்சிதமாக செய்து கல்லூரியின் விசுவாசி தான் என்பதை உறுதிபடுத்தினார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலர் பாமரன். இவரின் இந்த அயோக்கியதனத்தை கண்டு மருத்துவமனையிலேயே மாணவர்கள் அனைவரும் காரி உமிழ்ந்தனர்.

பொதுவாக, தலித் அமைப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலர்கள் என்று சொல்வதே அப்பட்டமான ஏமாற்று. SVS கல்லூரியால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலரும் தலித்துகள் தான். பெரும்பாலும் இது போன்ற மோசடி கல்லூரிகளுக்கு ஆள் பிடித்து கொடுப்பதே இவர்கள் தான். ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சென்று தலித் மாணவர்களின் பட்டியலை வாங்கிக்கொண்டு முதலில் மாணவர்களிடம் பேசுவது, அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்களின் வீடுகளுக்கு சென்று பெற்றோரிடம் பேசி மனதை மாற்றுவது என்று தலித் மக்களை, மாணவர்களை பலிகடா ஆக்குகிறார்கள். குறிப்பாக தலித் மாணவர்களை மட்டும் குறி வைப்பதற்கு ஒரு நோக்கம் உள்ளது. தலித் மாணவர்களுக்கென்று ஒதுக்கக்கூடிய உதவித் தொகை, அரசின் சலுகை, வங்கி கடன் போன்றவற்றை மாணவர்களின் பெயரால் தானே மொத்தத்தையும் சுருட்டிக் கொள்வதற்கு தான். இதுதான் svs கல்லூரியிலும் நடந்துள்ளது. இவற்றை எல்லாம் தெரிந்தே தான் தலித் அமைப்புகள் செய்கின்றன. சாதியை கடந்து வர்க்கம் என்ற அடிப்படையில் ஆளும் வர்க்க கும்பலுக்கு சேவை செய்து வருகிறார்கள் என்பதை SVS கல்லூரியின் சம்பவங்களில் இருந்தே புரிந்து கொள்ள வேண்டும்.

மூன்று மாணவிகளின் உடலையும் உடனடியாக பிரேத பரிசோதனை செய்து பிரச்னையை சுமூகமாக முடித்துவிட வேண்டும் என்று அரசு காட்டிய தீவிரம், பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தது, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் தலைமையில் போராடிய மாணவர்களை அப்புறப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் என அனைத்தும் இந்த அரசு தான் செய்த தவறுகளில் இருந்து தப்பித்துக் கொள்வது என்பது மட்டுமல்லாமல் வாசுகி சுப்ரமணியன் உள்ளிட்ட கிரிமினல் கும்பலை, கல்விக் கொள்ளையர்களை முற்றிலும் பாதுகாக்கவே விரும்புகிறது என்பது தெளிவாக தெரிகிறது. இதன் பின்னணியில் இதனை புரிந்து கொண்டால் மாணவிகள் மரணம் தற்கொலையல்ல, கொலை தான் என்பது விளங்கும்.

ஆக, SVS கல்லூரியை பொறுத்தவரை கூட்டு சதி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட எல்லா அயோக்கியதனங்களையும் அரங்கேற்றியுள்ளனர். இது SVS கல்லூரி மட்டும் தான் என்றில்லாமல், நாடு முழுவதும் தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மீதான அடக்குமுறை, கட்டணக் கொள்ளை, மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகள் என அனைத்தும் பகிரங்கமாகவே நிகழ்த்தப்பட்டு வருகிறது.

இதனை மாற்ற முடியாது என்று கூறி வேடிக்கை பார்ப்பது, காரியவாதமாக , பிழைப்புவாதிகளாக ஒதுங்கிக்கொள்ள நினைப்பது அவமானம். மனித சமூகத்திற்கு எதிராக ஒரு சிறு கும்பலால் தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிர்வினையாற்றுவதே சரியானது.

இந்த கிரிமினல் கும்பல்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றால் அழுகி நாறிப்போன இந்த அரசுக் கட்டமைப்பில் சாத்தியமில்லை. இதனை தூக்கி எறிந்துவிட்டு நாமே அதிகாரத்தை கையில் எடுப்போம்! குற்றவாளிகளை தெருவில் வைத்து தண்டிப்போம்!!

 வினவு செய்தியாளர்கள்.

நன்றி: வினவு டாட்காம்