பண்டிகை – விமர்சனம்

மனித உயிரினத்தின் தொன்மையான தீமைகளில் ஒன்று சூதாட்டம். சிந்து சமவெளி அகழ்வாய்வில் சூதாட்டக் கட்டைகள் தோண்டி எடுக்கப்பட்டிருப்பதும், மகாபாரதத்தில் முக்கிய திருப்பத்தை சூதாட்டம் ஏற்படுத்துவதும் இதற்கு சான்று. அத்தகைய சூதாட்டம் காலத்துக்கேற்ற மாற்றங்களுடன், புதுப்புது வடிவங்களில் இன்றைய நவீன யுகத்திலும் வலம் வந்துகொண்டு தான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சூதாட்டத்தையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்ல வந்திருக்கிறது ‘பண்டிகை’.

குடும்பச் சூழல் மற்றும் கடுமையான நெருக்கடி காரணமாக சூதாட்டத்தை நம்பி பணத்தை இறக்குகிறார் சரவணன். அதில் தோல்வியை தழுவி பணத்தை இழக்கிறார். இதனால் அவரது கர்ப்பிணி மனைவி அவரை விட்டுப் பிரிகிறார். எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு நிர்கதியாய் நிற்கும் சரவணன், நாயகன் கிருஷ்ணாவின் பலத்தை நேரில் காண்கிறார். பணத்துக்காக இன்னொருவனை அடிக்கலாம் என்று ‘பண்டிகை’ ஆட்டத்தை அறிமுகம் செய்கிறார். பாஸ்போர்ட் எடுக்க பணமில்லாமல் தவிக்கும் கிருஷ்ணா அந்த ஆட்டத்தில் கலந்துகொள்கிறாரா? சூதாட்டம் யாரை வென்றெடுத்தது? இழந்ததை சரவணன் மீட்டாரா? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘பண்டிகை’.

நம்மில் பலர் அறியாத சூதாட்ட உலகில், அன்றாடம் நடக்கும் அதிர்ச்சி தரும் நிகழ்வுகளை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி இருக்கும் அறிமுக இயக்குநர் ஃபெரோஸுக்கு பாராட்டுக்கள். மிகுந்த அக்கறையுடன் களஆய்வு செய்து சேகரித்த தகவல்களால் அவர் அமைத்துள்ள வலுவான திரைக்கதை படத்தை தாங்கிப் பிடிக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட்டை மையமாக வைத்து நடத்தப்படும் சூதாட்டம், பலசாலிகளை மோதவிட்டு அதில் பந்தயம் கட்டி பணம் குவிக்கும் ‘ஃபைட்டிங் கிளப்’ சூதாட்டம் என்று திரைக்கதையை வித்தியாசமான கோணத்தில் நகர்த்தி, ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் இயக்குநர் ஃபெரோஸ்.

நாயகன் கிருஷ்ணா தனது வழக்கமான மிகை நடிப்பு பாணியிலிருந்து முற்றிலுமாக விலகி, கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான இயல்பான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் காட்சிகளில் ரசிகர்களை வசீகரிக்கிறார். அதிரடி சண்டைக் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். இதே பாணியில் தொடர்ந்து பயணித்தால் நட்சத்திர அந்தஸ்து அவருக்கு நிச்சயம் வசப்படும்.

நாயகி ஆனந்திக்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை. அவ்வப்போது வந்து போகிறார். அப்படி வந்து போகும் போதெல்லாம், தனது வசீகர புன்னகை சிந்தி, ரசிகர்களை ஆழ்மயக்கத்தில் ஆழ்த்திவிடுகிறார்.

வீடு, வாசல், சொத்து, சுகம் என அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்து நிர்க்கதியாய் நிற்கும் மிக முக்கிய கதாபாத்திரத்திரத்தில் சரவணன் அருமையாக நடித்திருக்கிறார். ‘பருத்தி வீரன்’ போல இந்த படத்திலும் நடிப்பால் அவர் நல்ல பெயர் எடுத்திருக்கிறார்.

தாதா கதாபாத்திரத்தில் வரும் மதுசூதனன் ராவ், கவுரவத் தோற்றத்தில் வரும் கருணாஸ், சூதாட்டப் பின்னணியில் இருக்கும் போலீசாக வரும் சண்முகராஜா, வித்தியாசமான கதாபாத்திரத்தில் வரும் நிதின் சத்யா, கிளைமாக்ஸில் மோதும் இரட்டையர்கள் என அனைவரும் சிறப்பான பங்களிப்பு செய்துள்ளனர்.

அதிரடி சண்டைக் காட்சிகளும், நறுக்குத் தெறித்தது போன்ற வசனங்களும் படத்துக்கு பலம். அரவிந்த் ஒளிப்பதிவு கச்சிதம். பாடல்கள் சுமார் ரகம் என்றாலும் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் ஆர்.எச்.விக்ரம்.

பண்டிகை – கொண்டாட்டம்!

Read previous post:
0
“ரஜினி – மோடி கூட்டணி தமிழக அரசியலையே மாற்றிவிடும்” என்கிறார் குருமூர்த்தி!

“நரேந்திர மோடியையும் ரஜினிகாந்தையும் சேர்த்துப் பார்க்கும் தருணம் சிறப்பாக இருக்கும். இது தமிழ்நாட்டு அரசியலின் முகத்தையே மாற்றிவிடும்” என்று கூறியுள்ளார், ஆர்.எஸ்.எஸ்ஸை சேர்ந்த ஆரியத்துவவாதியும், ‘துக்ளக்’ பத்திரிகையின்

Close