நடிகை சுஜிபாலா திடீர் திருமணம்: ஊட்டி இளைஞரை மணந்தார்!

குமரி மாவட்டம் எட்டாமடை பகுதியை சேர்ந்தவர் சுஜிபாலா. தற்போது நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தில் வசிக்கிறார். அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதைத் தொடர்ந்து ‘அய்யாவழி’, ‘கிச்சா வயது 16’, ‘முத்துக்கு முத்தாக’, ‘சந்திரமுகி’, ‘கோரிபாளையம்’ போன்ற பல திரைப்படங்களில் சுஜிபாலா நடித்தார். தொலைக்காட்சியிலும் பல நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடித்து வந்தார்.

அவர் ‘உண்மை’ என்ற படத்தில் நடித்தபோது, அவரை அப்படத்தின் இயக்குனர் ரவிக்குமார் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். அதற்கு சுஜிபாலாவின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில், சுஜிபாலா அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டார்.

ரவிக்குமாரை திருமண செய்துகொள்ள விருப்பம் இல்லாததால் தற்கொலைக்கு முயன்றதாக சுஜிபாலா தரப்பில் கூறப்பட்டது. ஆனால், சுஜிபாலாவுக்கும் தனக்கும் ஏற்கெனவே திருமணம் நடந்துவிட்டதாக கூறிய ரவிக்குமார், அதற்கான ஆதாரம் என்று சில புகைப்படங்களை வெளியிட்டார்.

0a1k

ரவிக்குமார் – சுஜிபாலா திருமண சர்ச்சை அப்போது ஊடகங்களில் மிகப் பெரிய அளவில் பரபரப்பாகப் பேசப்பட்டது. பின்னர் அடங்கிப்போனது.

இன்று ஊட்டியைச் சேர்ந்த பிரனேஷ் என்பவருக்கும், சுஜிபாலாவுக்கும் நாகர்கோவில் வெட்டூர்ணி மடத்தில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் திருமணம் நடைபெற்றது. மணமகன் பிரனேஷ், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவிட்டு, கத்தார் நாட்டில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இன்றைய திருமணத்தின்போது சுஜிபாலா கிறிஸ்தவ முறைப்படி வெள்ளை நிற திருமண ஆடை அணிந்திருந்தார். மணமகன் பிரனேஷ் கோட் – சூட் அணிந்திருந்தார். பங்கு தந்தை லியோன் கென்சன் இவர்களது திருமணத்தை நடத்தி வைத்தார். சுஜிபாலாவின் கழுத்தில் பிரனேஷ் தாலி கட்டியதும் திருமணத்தில் பங்கேற்ற உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினார்கள்.