“பெண்கள் ‘நோ’ என்றால் ‘நோ’ தான், யுவர் ஆனர்!”

‘பிங்க்’ பாலிவுட் படத்தில் ஒரு காட்சி.

“நீ வெர்ஜினா?” என்று அமிதாப் நீதிமன்றத்தில் டாப்ஸியை பார்த்து கேட்க, நீதிபதி அதிர்ந்து, “இந்தக் கேள்வி தேவையா?” என்கிறார்.

“தேவை தான்” என்று அமிதாப் தொடர்ந்து கேட்க, “தனி அறையில் வேண்டுமானால் வாதத்தை வைத்துக் கொள்ளலாம்” என்கிறார் நீதிபதி.

“தேவையில்லை” என்று சொல்லும் டாப்ஸி, “நான் வெர்ஜின் இல்லை” என்கிறார்.

தொடர்ந்து நடக்கும் வாதத்தில், “என் 19 வயதில், நானும் என் பாய்ஃப்ரெண்டும் உறவு கொண்டோம். அதற்குப் பிறகும் சிலருடன் தொடர்பில் இருந்தேன். ஆனால், அன்றைக்கு ராஜ்வீர் அப்படி நடந்து கொள்வான் என்பது தெரியவில்லை. அதில் எனக்கு விருப்பமும் இருக்கவில்லை’ என்கிறார் டாப்ஸி.

“நீங்கள் என்ன செய்தீர்கள்?” – அமிதாப்.

“தடுத்தேன்.” – டாப்ஸி.

“பிறகு?”

“வேண்டாம் என்றேன்.”

“எப்படி?”

“நோ என்று சொன்னேன்.”

“கொஞ்சம் உரக்கச் சொல்ல முடியுமா?”

“நோ என்று கத்தினேன்.”

இப்போது அமிதாப் நீதிபதியிடம் திரும்புகிறார். “தட்ஸ் ஆல் யுவர் ஆனர். இவர் நோ என்றிருக்கிறார். அதற்குப் பிறகும் பலவந்தப்படுத்தப்பட்டிருக்கிறார். பெண்கள் நோ என்றால் நோ தான் யுவர் ஆனர். அவள் மாடர்னாக உடை அணிந்திருக்கிறாள், குடிப்பாள், ஆண்களோடு சிரித்துப் பேசுவாள், ஆண்களைத் தொட்டுப் பேசுவாள், தனியாக வசிக்கிறாள், நேரம் கழித்து அறைக்கு வருகிறாள். இது எதையும் நாம் பார்க்கத் தேவையில்லை. அவள் நமது தோழியாக இருக்கலாம், உடன் பணிபுரிபவளாக இருக்கலாம். மனைவியாக இருக்கலாம். அவள் ‘நோ’ என்றால் ‘நோ’தான் யுவர் ஆனர். அதற்கு வேறு எந்த அர்த்தமும் இல்லை” என்கிறார்.

இந்த படத்தை பார்க்கவில்லை என்றால் உடனே பாருங்கள் . சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன பிறகும் சுதந்திரம் அடையாத ஒரே விசயம் பெண்ணின் உரிமைகள் மற்றும் அவளுக்கு இச்சமூகம் அளித்திருக்கும் சுதந்திரங்கள்.

ராம்குமார் தான் சுவாதியை கொன்றானா? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் ஒருதலை காதல் என்கிற ஒரு வாக்கியம் தற்போது அதிகமாக பயன்படுத்தப்படுவதை கவனித்து இருக்கிறீர்களா?

அந்த ஒற்றை வாக்கியத்தை வைத்துக்கொண்டு நம்மால் சுலபமாக பல கொடூரங்களை மிக இயல்பாக கடந்து செல்ல முடிகிறது. அந்த அளவிற்கு நம்முடைய மனதின் தோல் தடித்துப் போய்விட்டது.

2 நாட்களுக்கு முன்பு டில்லியில் ஒரு இளம்பெண்ணை ஒருவன் 31 முறை பொதுஇடத்தில் வைத்து கத்தியால் குத்திக் கொன்றான். எல்லாரும் வழக்கம் போல வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள்.

இங்கே நீதிமன்றத்தில் அதை பற்றிய பேச்சு வந்தது. ஒருவன் சர்வ சாதாரணமாக “அவளுக்கும், அந்த பையனுக்கும் இடையில எதோ இஸ்யூஸ் இருக்கும். அதான் .” என்று கூறினான்.

இஸ்யூஸ் எழுவதற்கு இது என்ன சிவில் வழக்கா? ஒரு பெண்ணின் வாழக்கை அல்லவா இது?

நான் கேட்கிறேன், ஏன் இக்கொலைகளை ஆணவக் கொலைகளாக அறிவிக்கக் கூடாது?

மனைவியே ஆனாலும் அவளின் விருப்பமின்றி அவளை நெருங்கக் கூடாது என்று சட்டமே உள்ளது . ஆனால் எதார்த்தம்?

கோ எட் என்று கூறி, ஆணையும் பெண்ணையும் இயல்பாக கூட பேச விடாமல் செய்வது. மருந்துக்குக்கூட நன்னெறிகளை போதிக்காமல் இருக்கும் கல்லூரிகளில் இருந்து வெளியே வருவோரில் நிறைய பேர் ஒருவித மனநோயோடுதான் அலைவார்கள்.

“நான் உன்னை லவ் பண்றேன். நீ என்னை கட்டாயம் லவ் பண்ணியே தீரணும். என்னை தவிர வேற யாரையாச்சும் லவ் பண்ணுனேனா, உன்னைய கொலை பண்ணிருவேன்.”

1980-90 களில் வந்த படங்களில் வில்லன்கள் பேசிய மேலே கூறிய வசனத்தை இப்போது ஹீரோக்கள் பேச ஆரம்பித்து விட்டதை எப்படி எடுத்துக் கொள்வது?

ஒரு பெண்ணிற்கென்று ஆசைகள், கனவுகள், இலட்சியங்கள், கொள்கைகள் எல்லாமே ஆணை போலவே உண்டு . அதில் தலையிடும் உரிமை நம்மில் யாருக்கும் இல்லை.

முதலில் இக்கொலைகளை ஆணவக் கொலைகள் என்று அழைக்கப் பழகுவோம். ஒருதலை காதல் என்று சப்பைக் கட்டு கட்டி மறக்கும் நிலை இனியாவது மாற வேண்டும் .

மீண்டும் சொல்கிறேன் . ஒரு பெண் முடியாது என்று உங்களை பார்த்து இனி சொன்னால் அதற்கு அர்த்தம் ஒன்றே:

“முடியாது.”

RASA DHURIYAN

FILM DIRECTOR, JOURNALIST, ADVOCATE