‘கபாலி’ படம் பார்த்த முன்னணி ஊடகவியலாளர்கள் பாராட்டுகிறார்கள்!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கபாலி’ படம் பார்த்த முன்னணி ஊடகவியலாளர்களான ‘தீக்கதிர்’ ஆசிரியர் குமரேசன், ‘காட்சிப்பிழை’ ஆசிரியர் சுபகுணராஜன் ஆகியோரின் பதிவு:-

குமரேசன்: கபாலி படம் பார்த்துவிட்டேன். என் வழக்கப்படி படத்தைப் பார்த்த பிறகு பத்திரிகை விமர்சனங்களைப் படித்தேன்.

இது ரஜினி படமாகவும் இல்லை, இரஞ்சித் படமாகவும் இல்லை என்று பொதுவாகப் பலரும் எழுதியிருக்கிறார்கள்.

பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று முந்தைய பல படங்களில் ரஜினி அபத்த அட்வைஸ் பண்ணுவாரே, அது இதில் இல்லை. ஏதாவதொரு இடத்தில் ஆண்டவன் கட்டளைப்படி தான் செயல்படுவதாக அநாத்திக போதனை செய்வாரே, அதுவும் இல்லை. அரசியலைத் தூய்மைப்படுத்த இவர் வந்தால்தான் ஆச்சு என்பது போன்ற எதிர்பார்ப்பை விதைக்கும் வசனங்கள் இல்லை. இளமைக்காலத்துக் கதையில் கதாநாயகியோடு சேர்ந்து ஆடுவது போன்ற காட்சிகள் இல்லை.

ஆக, இது ரஜினி படமாக இல்லைதான் – அதாவது வழக்கமான ரஜினி படமாக இல்லைதான்.

முந்தைய இரண்டு இரஞ்சித் படங்கள் கதையோட்டத்தை மையப்படுத்தி நாயகர்கள் வருகிறார்கள். இதில், 500 கோடி ரூபாய்க்கு விற்பனை, முதல் நாளே 250 கோடி ரூபாய் வசூல் என்பன போன்ற மலைக்க வைக்கும் வர்த்தகச் சூழல்களை உறுதிப்படுத்தியிருக்கிற ரஜினியை மையப்படுத்திய கதையோட்டம். பொது சேவைக்காகவே அடியாள் கும்பல் நடத்துகிறவனாக (‘கேங்ஸ்டர்‘ என்பதற்கு அதுதானே அர்த்தம்?) கதாநாயகனைக் காட்டுகிற பாத்திரச் சித்தரிப்பு.

ஆக, இது வழக்கமான இரஞ்சித் படமாகவும் இல்லைதான்.

ஆனால், வயதாகிவிட்டதன் அறிகுறிகளையே சூப்பர் ஸ்டார் நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்கான தகுதியாக்கிக் கொண்ட வகையில் இது ரஜினி படம்தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நுட்பமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் ரஜினியைப் பார்ப்பது “மகிழ்ச்சி”.

இப்படியான வர்த்தக வெற்றிப் படத்தில், மலேசியாவிற்குப் பண்ணையடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள், அந்த நாட்டின் வளர்ச்சியில் தமிழ்த் தொழிலாளர்களின் பங்கு, வறுமை உள்ளிட்ட காரணங்களால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் போகும் இந்தக் குடும்பங்களின் குழந்தைகள் எளிதில் போதை மருந்து வியாபாரக் கும்பல்களின் விற்பனையாளர்களாக மாறிப்போகிற, படிப்படியாக அடியாட்களாக மாறிப்போகிற நிலைமை, ஆடைத் தேர்வு வழியாக அம்பேத்கர் வெளிப்படுத்திய ஒடுக்கப்பட்டோரது அரசியல் உறுதி அடையாளம்…

ஒரு மிகப்பெரிய வர்த்தக சினிமாவில் இந்த உட்பொருள்கள் கலந்து வருவது, ரசிகர் மன்றக் காட்சிகளைக் கடந்து, ஒரு மாற்றுச் சிந்தனை சிறுதுளிகளாகவேனும் தூறுவதற்கு இட்டுச் செல்லும்.

‘மெட்ராஸ்’ படம் வந்தபோது எனக்கு பேட்டியளித்த இரஞ்சித், வர்த்தக ரீதியான வெற்றிகளை நிலைநாட்டிக்கொள்ள விரும்புவதாகவும், அதன் மூலம் சமூக மாற்றத்திற்கான கருத்துகளை மேலும் உறுதிபட வெளிப்படுத்த முடியும் என நம்புவதாகவும் கூறியிருந்தார்.

இரஞ்சித்தின் இந்த ரஜினி படம் எனக்குப் பிடித்திருக்கிறது.

(இப்போதைக்கு இதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். விரிவான விமர்சனம் பின்னர்.)

# # #

சுபகுணராஜன்: கபாலி பார்த்து விட்டேன். ஆம், இரண்டாவது முறையாக.

வெள்ளிக்கிழமை பார்த்தபோது கொஞ்சம் பிடிபடவில்லை. இன்று தெளிவு கிடைத்தது. நிறைய கருத்து சுதந்திரமும் குறைவான பொருளாதார ஆதரவும் வழங்கப்பட்ட இயக்குனரின் நிறைவான படைப்பு.

மலேசியக் கதைக்களம் உண்மைக்கு வெகு நெருக்கமாக உருவாக்கப்பட்டிருப்பது ரஞ்சித் முத்திரை.

கடந்த காலத்திற்குள் நிகழ்கால ரஜினியாகவே பிரவேசிப்பதும் ராதிகா ஆப்தே மட்டுமே நினைவுமீழ் காட்சிகளில் இருப்பதும் கவித்துவம்.

சமரசம் பெரிதும் இல்லாமல் தனது வார்ப்பில் ரஜினியை உருவாக்கியிருக்கும் ரஞ்சித்…

ரஞ்சித்டா!!!