“சுவாதியை கொன்றது 2 பேர்?”: வழக்கறிஞர் பரபரப்பு தகவல்!

சுவாதி கொலையில் ராம்குமார் குற்றவாளி என்று போலீஸ் கூறிவரும் நிலையில், சுவாதி கொலையில் 2 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் ஒருவர் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கடந்த 24ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக  ராம்குமார் என்ற இளைஞரை, நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தில் கைது செய்தது போலீஸ்.

ராம்குமாருக்காக வாதாட 17 பேர் கொண்ட வழக்கறிஞர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், போலீசார் ஊடகங்கள் வாயிலாக கசியவிடும் தகவல்களை மறுப்பதோடு, சுவாதி கொலை தொடர்பாக புதுப்புது தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

ராம்குமாருக்கு ஆதரவான ஒரு வழக்கறிஞர் அளித்த பேட்டி ஒன்றில், சுவாதியை இரண்டு பேர் சேர்ந்து கொன்றதாக திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். தனக்கு ரிச்சி ஸ்ட்ரீட்டில் இருந்து ஒருவர் போன் செய்ததாகவும், அவர் சுவாதி கொலையை நேரில் பார்த்ததாக கூறியதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 24ஆம் தேதி சுவாதி ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தார் என்றும், அப்போது வந்த ஒருவர் சுவாதியின் தலைமுடியை பிடித்து அவரை நிமிர்த்திப் பிடித்ததாகவும், மற்றொருவர் சுவாதியை வெட்டியதாகவும் கூறியுள்ளார் அந்த வழக்கறிஞர்.

இதற்கிடையே, ராம்குமாரை மீண்டும் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது காவல்துறை. ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராம்ராஜ் கூறுகையில், “புழல் சிறையில், விசாரணை கைதிகளுக்கான பிளாக்கில் அடைக்கப்பட்டிருக்கும்  ராம்குமாரை, தனியாக அடைத்து வைக்குமாறு கோரிக்கை வைத்தோம். அதற்கு சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. ராம்குமாருடன் இரண்டு கைதிகள் தங்கியுள்ளனர். உண்மையில் அவர்கள் கைதிகள் அல்ல. கைதிகள் என்ற போர்வையில் இரண்டு போலீசார் தங்கியுள்ளனர். யாருடனும் ராம்குமார் விரிவாகப் பேசிவிடக் கூடாது என்பதற்காக, தங்கள் பிடிக்குள்ளேயே அவரை வைத்திருக்கிறது போலீஸ். இது வழக்கின் மீதான சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.

“ராம்குமாரை சந்திக்கச் செல்பவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர். சிறைக்குள் அவரைச் சுற்றியுள்ள போலீஸாரால் மனரீதியான அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டு வருகிறார். ஏற்கெனவே மூன்று நாட்கள் போலீஸ் காவல் முடிந்து, ராம்குமார் புழல் சிறைக்கு அனுப்பப்பட்டு விட்டார். கஸ்டடியில் இருந்த மூன்று நாட்களும் அவரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.

”நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, நடித்துக் காட்ட வைத்து, வீடியோ பதிவு எடுக்க போலீஸார் முயற்சி செய்தனர். அப்போதைக்கு முடியாததால், தற்போது மீண்டும் ஒருநாள் விசாரணை கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர் போலீஸார். ‘சம்பவ இடத்தில் இந்தக் கலர் சட்டை அணிந்திருந்தார்; இந்தக் கைப்பையில்தான் ஆயுதம் எடுத்துச் சென்றார்’ என வீடியோ பதிவு எடுக்க திட்டமிட்டுள்ளனர். படுகொலை வழக்கில் கிடைத்துள்ள ஆதாரங்களை முற்றிலும் அழித்துவிட்டு, புதிய வீடியோ பதிவின் மூலம் குற்றவாளி இவர்தான் என உறுதிப்படுத்தும் வேலைகளில் இறங்கிவிட்டனர். இந்த அக்கறையை வேறு ஏதாவது வழக்கில் இவர்கள் காட்டியிருக்கிறார்களா? மறுவிசாரணை என்ற பெயரில் உண்மைக் குற்றவாளிகளை திசை திருப்பிவிடும் முயற்சியாகவே இதைப் பார்க்கிறோம். போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என மனுத்தாக்கல் செய்ய இருக்கிறோம்” என்றார் ராம்ராஜ்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பு கூறுகையில், “நீதிமன்றம் கொடுத்த கால அவகாசத்திற்குள் தேவைப்படும் அளவுக்கு ஆதாரங்களைத் திரட்டிவிட்டோம். இன்னமும் விசாரணை முடியவில்லை. எனவேதான், மீண்டும் காவல் விசாரணைக்கு அனுமதி கோருகிறோம். வழக்கில் ராம்குமார்தான் குற்றவாளி என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. புழல் சிறையில் அவரைச் சுற்றியும் போலீஸார் உள்ளனர் என்பது சுத்தப் பொய்” என்று தெரிவித்தது.

எது தான் உண்மை? அது எப்போது தான் வெளியே வருமோ?