“எங்கள் தங்கப்பெண் பி.வி.சிந்து”: விஜயகாந்த் மகன் பெருமிதம்!

இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில்  மகளிர் பேட்மின்டன் போட்டியில் கலந்துகொண்ட பி.வி.சிந்து வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன. இந்நிலையில் நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகனும்,  சென்னை ஸ்மாஷர்ஸ் அணியின் உரிமையாளருமான விஜய பிரபாகரன் கூறியதாவது:

கடந்த வருடம்  சிந்து எங்கள்  சென்னை ஸ்மாஷர்ஸ் அணியின் கேப்டனாக திகழ்ந்தார். தற்பொழுது சிந்து ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் மகளிர் பேட்மின்டனில் கலந்துகொண்டு விளையாடி, அதில் அவர்  தங்கத்தை தான்  தவறவிட்டாரே  தவிர,  தோல்வி அடையவில்லை.

2012-ல் சாய்னா நேவால் வெண்கலப் பதக்கத்தை மட்டுமே வென்றார். ஆனால் எங்கள் தங்கப்பெண் சிந்து தனது 21வது வயதிலேயே வெள்ளி பதக்கத்தை வென்றது எங்களுக்கு பெருமைக்குரிய செய்தியாகும்.

தோனி எப்படி சென்னை சூப்பர் கிங்ஸில் பங்குபெற்று, பிறகு உலகக் கோப்பையை வென்றாரோ, அதேபோன்று சிந்துவும் சென்னை ஸ்மாஷர்ஸ் அணியிலிருந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றார் என்பதை பெருமையாக எடுத்து கொள்வோம்.

இவ்வாறு விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.

0a6h