உடுமலை சங்கர் கொலை குற்றவாளிகள் 6 பேருக்கு தூக்கு: நீதிபதி அலமேலு நடராஜன் அதிரடி தீர்ப்பு!

திருப்பூர் மாவட்டம், உடுமலை குமரலிங்கத்தை சேர்ந்தவர் சங்கர் (22). இவர், பழநியைச் சேர்ந்த கவுசல்யாவை காதலித்து சாதிமறுப்பு திருமணம் செய்தார். இதனால் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி உடுமலையில் பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாயார் அன்னலட்சுமி, தாய் மாமன் பாண்டித்துரை, மற்றும் எம். மணிகண்டன், எம்.மைக்கேல் (எ) மதன், பி.செல்வக்குமார், பி.ஜெகதீசன், தன்ராஜ்,  தமிழ்(எ) தமிழ் கலைவாணன்,  கல்லூரி மாணவர் பிரசன்னகுமார் மற்றும் மற்றொரு மணிகண்டன்  என 11 பேரை உடுமலை போலீஸார் கைது செய்தனர்.

வழக்கில், விசாரணை கடந்த மாதத்துடன் நிறைவடைந்த நிலையில்,  திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், 1. சின்னசாமி (கவுசல்யாவின் தந்தை, 2. பி.ஜெகதீசன் 3.எம்.மணிகண்டன், 4.எம்.மைக்கேல் (எ) மதன், 5.பி.செல்வக்குமார், 6.தன்ராஜ், 7.தமிழ்(எ) தமிழ் கலைவாணன், 8. மணிகண்டன்.மா (அடைக்கலம் கொடுத்தவர்) ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கில் நீதிபதி அலமேலு நடராஜன்  இந்த தீர்ப்பை வழங்கினார். பின்னர் இந்நிலையில், தண்டனை விவரங்களை வழங்கினார்.

அதன்படி, முதல் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, குற்றவாளிகள் எம். மணிகண்டன், ஜெகதீசன், எம்.மைக்கேல் (எ) மதன், பி.செல்வக்குமார், தமிழ்(எ) தமிழ் கலைவாணன் ஆகிய 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தன்ராஜ் (எ) தமிழ் (எ) ஸ்டீபன் தன்ராஜ் என்பவருக்கு இரட்டை ஆயுள் விதிக்கப்பட்டுள்ளது.

கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மா.மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, கவுசல்யாவின் தாய்மாமன் பாண்டித்துறை மற்றும் கல்லூரி மாணவர் பிரசன்ன குமார் ஆகியோரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொலை வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளை போலீஸார் வேனில் ஏற்றி அழைத்துச் செல்ல முயன்றபோது வளாகத்திலிருந்த சிலர் கொலையை நியாயப்படுத்திப் பேசியதாகத் தெரிகிறது. இதனால், அங்கிருந்த சிலர் தாக்குதலில் ஈடுபட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தும் சிறு அசம்பாவிதம் நிகழ்ந்தது. இதனால், நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.