இப்படியாக நடந்து முடிந்தது ஆளுநரின் “அப்போலோ விசிட்” நாடகம்!

ஆளுநர் வித்யாசாகர் ராவின் அப்போலோ மருத்துவமனை விசிட் – மினிட் பை மினிட் ரிப்போர்ட்.

மாலை மணி 6.40: முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்படும் சென்னை கிரீம் சாலை அப்போலோ மருத்துவமனைக்கு, ஆளுநர் வித்யாசாகர் ராவ் காரில் வந்து இறங்கினார். அவரை மக்களவை துணை தலைவர் தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ், தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றார்கள். சம்பிரதாய வரவேற்பு முடிந்த பின்னர், அப்போலோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டியின் அலுவலக அறைக்கு ஆளுநர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் சில நிமிடங்கள் இருந்தார்.

6.50: லிஃப்ட் மூலம் மேல்தளத்துக்கு ஆளுநர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்படும் வார்டுக்குச் சென்று, ஜெயலலிதாவை ஆளுநர் பார்த்தார். (ஆளுநர் மாளிகை அறிக்கையில் “ஜெயலலிதாவை ஆளுநர் பார்த்தார்” என்று மட்டும் தான் கூறப்பட்டிருக்கிறது. தன்னை பார்க்க வந்திருக்கும் ஆளுநரை ஜெயலலிதா வரவேற்றார் என்றோ, அவரிடம் ஆளுநர் நலம் விசாரித்தார் என்றோ, இருவரும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார்கள் என்றோ எதுவும் கூறப்படவில்லை. ஏன் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.) அந்த வார்டில் ஆளுநர் சுமார் மூன்றே மூன்று நிமிடங்கள் தான் இருந்திருப்பார். கையோடு கொண்டு வந்திருந்த பழக்கூடையை அங்கே வைத்துவிட்டு, விரைவில் குணமடைய வாழ்த்துவதாக கூறிவிட்டு புறப்பட்டார்.

6.55: லிஃப்ட் மூலம் ஆளுநர் மீண்டும் கீழே வந்தார். மறுபடியும் பிரதாப் சி.ரெட்டியின் அலுவலக அறைக்குச் சென்றார். அவரிடம், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை குறித்தும் பிரதாப் சி.ரெட்டி சுருக்கமாக விவரித்தார். ஜெயலலிதா குணமடைந்து வருவதாக சொல்லக் கேட்டு, ஆளுநர் மகிழ்ச்சி அடைந்தார். ஜெயலலிதாவுக்கு சிறந்த மருத்துவ கவனிப்பும், சிகிச்சையும் அளித்து வருவதற்காக மருத்துவர்களை பாராட்டினார். பழச்சாறு வந்தது. குடித்தார்.

7.15: மருத்துவமனையைவிட்டு வெளியேறி, காரில் ஏறி போய்விட்டார்.

இப்படியாக ஆளுநர் வந்தார், பார்த்தார், சென்றார், சம்பிரதாய அறிக்கை வெளியிட்டார்.

அதன்பிறகும், ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய சந்தேகங்கள் என்னவோ நீடிக்கவே செய்கின்றன.

மத்திய அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவை பார்த்துவிட்டுச் சென்றிருக்கும் ஆளுநர், மத்திய அரசுக்கு அளிக்கும் ரகசிய அறிக்கையில் தான் அவரது ‘உண்மையான அப்சர்வேஷன்’ இடம் பெறும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

– அமரகீதன்

0a1m