மோடி அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கம்யூ. கட்சியினர் போராட்டம்: 50 ஆயிரம் பேர் கைது!

மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 15 ஆயிரம் பெண்கள் உட்பட 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தி திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும். நீட் நுழைவுத் தேர்வை கைவிட்டு, தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளித்திடல் வேண்டும். அனைத்து பகுதி மக்களையும், தொழில்களையும் பெரிதும் பாதித்துள்ள ஜிஎஸ்டி வரியை மறுபரிசீலனை செய்திட வேண்டும்.   விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்திட வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ5000 வேலையில்லாக் கால நிவாரணம் வழங்கிட வேண்டும். மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தை அனைத்து கிராமங்களிலும் அமல்படுத்தவும், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் அமல்படுத்தவும், தினஊதியம் ரூ 400 வழங்கிடவும், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழுவை உடன் அமைத்திட வலியுறுத்தியும், சென்னையில் செயல்பட்டு வரும் செம்மொழி ஆய்வு மையம் தொடர்ந்து மேம்பட்ட முறையில் செயல்படவும், சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ் ஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்படவும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திடவும், இயற்கை வளச் செல்வங்கள்  கொள்ளை போவதை தடுத்து நிறுத்துவதுடன், அரசு நிர்ணயித்த விலையில் மணல் பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்திட வலியுறுத்தியும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைத்து மக்களுக்கும் தட்டுப்பாடு இன்றி இலவசமாக கிடைத்திடக் கோரியும், ஊழலை ஒழித்திட, மாநில அரசு லோக் ஆயுக்தா சட்டத்தையும், மத்திய அரசு லோக்பால் சட்டத்தையும் உடன் நிறைவேற்றிட வலியுறுத்தியும், உள்ளாட்சி  அமைப்புகளுக்கான தேர்தலை உடன் நடத்திடக் கோரியும், தமிழக மீனவர்கள் உடமைக்கும், தொழிலுக்கும், உயிருக்கும் பாதுகாப்பு அளித்திட வலியுறுத்தியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

தென் சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை பனங்கல் மாளிகை அருகில் மாவட்ட செயலாளர் எஸ்.ஏழுமலை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை மூத்த தலைவர் தா.பாண்டியன் தொடங்கி வைத்து பேசினார்.

தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் தஞ்சையிலும், மாநில துணைச்செயலாளர் கே.சுப்பராயன் திருப்பூரிலும், மாநில துணைச் செலாளர் மு.வீரபாண்டியன் சிவகாசியிலும், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கோ.பழனிச்சாமி நெல்லையிலும், டி.எம்.மூர்த்தி திருவள்ளுரிலும், பி.சேதுராமன் மதுரையிலும், பி. பத்மாவதி திருச்சியிலும், என்.நஞ்சப்பன் தர்மபுரியிலும், ந.பெரியசாமி கரூரிலும் போராட்டத்திற்கு தலைமை வகித்து கைதாகினர்.

மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆங்காங்கே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு தலைமை தாங்கி கைதாகியுள்ளனர். மறியல் போராட்டத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன் மத்திய, மாநில அரசுகள் கோரிக்கைகளை நிறைவேற்றிட முன்வர வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.