8 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது!

‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதியை, 2009ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் அடிப்படையில் போலீஸார் இன்று (செவ்வாய்க் கிழமை) கைது செய்தனர்.

மதுரையைச் சேர்ந்தவர் திவ்யபாரதி. சமூக செயற்பாட்டாளர். துப்புரவு பணியாளர் நலனுக்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறார். சென்ற ஆண்டு ‘கக்கூஸ்’ என்ற பெயரில் துப்புரவு பணியாளர்கள் சந்தித்துவரும் கொடுமைகளை விவரித்து ஆவணப் படம் தயாரித்தார். இப்படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டது. கேரளத்தில் ‘கக்கூஸ்’ ஆவணப் படத்துக்காக திவ்யபாரதிக்கு விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில், மதுரை மதிச்சியம் போலீஸார் திவ்யபாரதியை இன்று (செவ்வாய்க் கிழமை) கைது செய்தனர். அவரை மதுரை 5வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை ஆகஸ்ட் 8 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் சக்திவேல் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது:

திவ்யபாரதி 2009-ல் மதுரை சட்டக் கல்லூரியில் பயின்றார். இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) மாணவர் பிரிவில் உறுப்பினராக இருந்துள்ளார். அப்போது ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கி மன்னர் கல்லூரியில் பயின்ற மாணவர் ஒருவரை பாம்பு கடித்தது. மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இதையடுத்து ஆதிதிராவிட மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும், உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் திவ்யபாரதி தலைமையில் அரசு மருத்துவமனைக்கு உள்ளேயும், வெளியேயும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக மதிச்சியம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு மதுரை 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாததால் திவ்யபாரதிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த பிடிவாரண்ட் அடிப்படையில் திவ்யபாரதி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இவ்வாறு போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, திவ்யபாரதியை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அவருக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. எனினும், நிபந்தனையின் பேரில் ஜாமீனில் செல்ல நீதிபதி உத்தரவிட்டார்.

தனது கைது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திவ்யபாரதி, ”தொடர் அரசியல் செயல்பாடுகளில் இருப்பவர்களை முடக்குவதற்காக இது போன்ற வழக்குகள் போடப்படுகின்றன. சமூக செயல்பாட்டாளர்களுக்கு இது போன்ற நடவடிக்கைகள் இயல்பு தான்” என்று தெரிவித்தார்.

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகத் துண்டுப் பிரசுரம் விநியோகித்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சேலம் மாணவி வளர்மதி, மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி ஆகியோரின் கைதுக்கு எதிராகத் திவ்யபாரதி தொடர்ந்து தனது கருத்துகளைப் பதிவு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.