சுவாதியை ராம்குமார் கொலை செய்தது ஏன்?” போலீஸ் கமிஷனர் பேட்டி!

“நெல்லையில் இருந்து வேலை தேடி சென்னை வந்த ராம்குமாருக்கு சுவாதி மீது ஒருதலைக் காதல் ஏற்பட்டுள்ளது. அவரை தொடர்ந்து சென்றிருக்கிறார். அவரோடு பழக நினைத்திருக்கிறார். ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் போகவே இத்தகைய நிகழ்வில் ஈடுபட்டிருக்கிறார்” என்று சென்னை காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் கூறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடத்தப்பட்டு, கொலையாளி கைது செய்யப்பட்டது வரை நடந்த விஷயங்கள் குறித்து சென்னை காவல் ஆணையர் டி.கே. ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“ஜூன் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து முதலில் ரயில்வே போலீஸ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. பிறகு, சென்னை பெருநகர காவல்துறைக்கு மாற்றப்பட்டது.

அதன்பிறகு கூடுதல் துணை ஆணையர் சங்கர் தலைமையின் கீழ், இணை ஆணையர் மனோகர், இணை ஆணையர் அன்பு, கூடுதல் இணை ஆணையர் (திருவல்லிக்கேணி) பெருமாள், கூடுதல் இணை ஆணையர் (தி.நகர்) சரவணன் மற்றும் பல கூடுதல் ஆணையர்கள், துணை ஆணையர்கள், இன்ஸ்பெக்டர் என பல அதிகாரிகள் இந்த வழக்கை புலன்விசாரணை செய்வதில் ஈடுபட்டிருந்தனர்.

அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. சுவாதி கொலை சம்பவம் தொடர்பாக பொதுமக்களுக்குத் தெரிந்த எல்லா தகவல்களையும் காவல்துறைக்கு தரலாம் என்று கோரப்பட்டிருந்தது. தகவல் தருவோரின் விவரங்கள் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும் என்றும், அது புலன்விசாரணை விரைந்து முடிக்க வசதியாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

அதன்படி சென்னை புறநகர் பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பொதுமக்கள் எங்களுக்கு பல்வேறு தகவல்களும் அளித்தனர்.

அந்த ஒவ்வொரு தகவலையும் கவனமாக பதிவு செய்து தீவிரமாக விசாரித்து இந்த தனிப்படையினர் வழக்கில் எந்த அளவுக்கு விரைவாக கொலையாளியை பிடிக்க முடியுமோ அந்த அளவுக்கு தீவிரமாக செயல்பட்டனர்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை சுவாதியின் பெற்றோர் முழு ஒத்துழைப்பு அளித்தனர். அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பையும் வலியையும் பொறுத்துக் கொண்டு புலன் விசாரணை அதிகாரிகள், அவர்களை அணுகி விசாரித்தபோது அவர்களுக்குத் தெரிந்த அனைத்து விவரங்களையும் காவல்துறையினருக்கு தெரிவித்து முழு ஒத்துழைப்பு வழங்கினர்.

சுவாதி பணியாற்றிய நிறுவனத்திலும் மற்றும் அவர் பயணம் செய்த பல்வேறு இடங்களிலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டார்கள்.

ராம்குமார் குறித்து மேன்ஷன் காவலாளி கொடுத்த துப்பு மிக உதவிகரமாக இருந்தது. ராம்குமார் நெல்லையில் இருப்பது குறித்து அறிந்ததும் நெல்லை காவல்துறையை அணுகினோம். அவர்களும் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து குற்றவாளியை பிடிக்க உதவினர்.

நேற்று நள்ளிரவு, செங்கோட்டை அருகே அவரது வீட்டிலேயே அவரை பிடிக்க காவல்துறை அணுகியபோது, அவர் காவல்துறை தன்னை நெருங்கிவிட்டதை அறிந்து வீட்டின் பின்னால் ஒளிந்திருந்தபோது அவர் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். சென்னையில் இருந்து முக்கிய அதிகாரிகள் நெல்லை சென்று விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.

இந்த வழக்கில் புலன் விசாரணை செய்ய உதவியாக இருந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் மற்றும் அவருடைய பெற்றோர்களுக்கும் இதற்கு ஒத்துழைப்பு அளித்த ஊடகளுக்கும் எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைதியான முறையில் மக்கள் வாழ அனைத்து விஷயங்களையும் காவல்துறை மேற்கொள்ளும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ராஜேந்திரன் கூறினார்.

மேலும், “நெல்லை காவல்துறை இந்த வழக்கில் சென்னை மாநகர காவல்துறைக்கு நல்ல ஒத்துழைப்பை வழங்கினர். இந்த கொலை வழக்கில் ராம்குமார் மட்டுமே ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவருடன் கொலையில் யாரும் ஈடுபடவில்லை என்றும், கூட்டாளி என இதுவரை யாரும் விசாரணையில் தெரியவரவில்லை” என்றும் காவல்துறை ஆணையர் கூறியுள்ளார்.

“நெல்லையில் இருந்து வேலை தேடி சென்னை வந்த ராம்குமாருக்கு சுவாதி மீது ஒரு தலைக் காதல் ஏற்பட்டுள்ளது. அவரை தொடர்ந்து சென்றிருக்கிறார். அவரோடு பழக நினைத்திருக்கிறார். ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் போகவே இத்தகைய நிகழ்வில் ஈடுபட்டிருக்கிறார். மேற்கொண்டு தகவல்கள் இனி விசாரணைக்குப் பின்பே தெரிய வரும்” என்று ராஜேந்திரன் கூறினார்.

“விசாரணைக்குப் பிறகுதான் எல்லாவற்றையும் கூற முடியும். இப்போதே அனைத்தையும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.

கொலையாளியை பிடிக்க முக்கிய ஆதாரங்கள் என்னென்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “எல்லா ஆதாரங்களையும் உங்களிடம் கொடுத்து விட முடியாது. எவை விசாரணையில் தாக்கல் செய்யப்படுகிறதோ அவை உங்களுக்கு தெரிவிக்கப்படும்” என்று பதிலளித்தார்.

“மேன்ஷனில் உள்ள கேமரா பதிவும், காவல்துறை வெளியிட்ட சிசிடிவி கேமரா பதிவும் ஒத்துப்போனது” என்று ராஜேந்திரன் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட முடியாது. அடையாள அணிவகுப்பு முடிந்த பிறகே புகைப்படத்தை வெளியிட முடியும். சுவாதியை, ராம்குமார் ரயிலில் தினமும் பின்தொடர்ந்து சென்றுள்ளார். கொலையின் உள்நோக்கம் குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தும்” என்று அவர் தெரிவித்தார்.