“சுவாதி கொலை குற்றவாளிக்கு கூட்டாளிகள் இல்லை”: போலீஸ் கமிஷனர் தகவல்!

சுவாதி கொலை வழக்கில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் (24) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த மாதம் 24-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு கடந்த 27-ம் தேதி சென்னை காவல்துறைக்கு மாற்றப்பட்டது. 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது. இந்நிலையில், சுவாதி கொலை வழக்கில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் (24) என்ற இளைஞரைக் கைது செய்துள்ளோம்.

தன்னைக் கைது செய்ய போலீஸார் வந்துள்ளதை அறிந்த ராம்குமார், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவர்கள் கூறுவதற்கு ஏற்ப அவரை சென்னைக்கு கொண்டு வருவது பற்றி முடிவு செய்யப்படும்.

சுவாதி கொலை வழக்கில் ராம்குமாருக்கு கூட்டாளியாக யாரும் செயல்படவில்லை. ராம்குமார் கடந்த 3 மாதங்களாகவே சுவாதியைப் பின் தொடர்ந்துள்ளார். சுவாதியுடன் பழக வேண்டும் என அவர் விரும்பியிருக்கிறார். ஆனால், சுவாதி ராம்குமாருடன் பழக மறுத்திருக்கிறார். ராம்குமார் சுவாதியை பின் தொடர்ந்ததற்கான ஆதாரங்கள் போலீஸ் வசம் உள்ளன.

ராம்குமார் கொலை வழக்கில் ஏதாவது தகவல் தெரிந்தால் போலீஸுக்கு தகவல் கொடுக்குமாறு பொதுமக்களிடம் வேண்டியிருந்தோம். தகவல் அளிப்பவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் கூறியிருந்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்றுப் பொதுமக்களில் பலர் எங்களுக்கு துப்பு கொடுத்தனர். பொதுமக்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல், ஊடகங்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சுவாதி கொலையாளி நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே இருப்பதை உறுதி செய்தவுடன் நெல்லை போலீஸார் உதவியை நாடினோம். அவர்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். நெல்லை போலீஸார் உதவியுடன் சென்னையில் இருந்து சென்ற விசாரணைக் குழுவினர் ராம்குமாரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு காவல் ஆணையர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.

Read previous post:
0a1i
சுவாதியை ராம்குமார் கொலை செய்தது ஏன்?” போலீஸ் கமிஷனர் பேட்டி!

“நெல்லையில் இருந்து வேலை தேடி சென்னை வந்த ராம்குமாருக்கு சுவாதி மீது ஒருதலைக் காதல் ஏற்பட்டுள்ளது. அவரை தொடர்ந்து சென்றிருக்கிறார். அவரோடு பழக நினைத்திருக்கிறார். ஆனால் அதற்கு

Close