கண்ணும் கண்ணும் கொள்ளை யடித்தால் –விமர்சனம்

இது ரசிக்கத்தக்க சுவாரஸ்யமான படம்; ஆனால், இப்படியொரு படம் வருகிறது என்பதையும், இது மலையாள டப்பிங் படமல்ல, நேரடி தமிழ்ப்படம் என்பதையும், போதுமான விளம்பரங்கள் மூலம் தயாரிப்பு நிறுவனங்கள் தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்கத் தவறியதால், போதுமான வெற்றியைப் பெற முடியாமல் போன படம்!

பொறியியல் பட்டதாரிகளான சித்தார்த் (துல்கர் சல்மான்), காளீஸ் (ரக்‌ஷன்) இருவரும் மது, ஆட்டம், பாட்டம் என நாட்களை கொண்டாட்டமாக கழிக்கும் நண்பர்கள். தங்கள் பணத் தேவைக்கு இணையம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பலவித மோசடிகளில் ஈடுபடுகின்றனர். இவர்களது வாழ்க்கையில் தென்றல்போல நுழைகிறார் அழகுக்கலை நிபுணரான மீரா (ரீது வர்மா). அவர் மீது சித்தார்த் காதலில் விழ, மீராவின் தோழி ஸ்ரேயாவை காளீஸ் தனக்கான ஜோடியாக நினைக்கிறார். காதல் கைகூடிவிட்ட நிலையில், கடைசியாக ஒருமுறை மோசடி செய்து திரட்டிய பணத்துடன் கோவாவுக்கு போய் அங்கு நேர்மையான முறையில் வாழ முடிவு எடுக்கின்றனர். இவர்களை மோப்பம் பிடித்துவிடும் காவல் ஆணையர் பிரதாப் (கவுதம் மேனன்) தனது குழுவுடன் கோவாவுக்கு வருகிறார். அவரால் அவர்களைப் பிடிக்க முடிந்ததா, அவர்கள் மீதான மோசடியை வெளிச்சத்துக்கு கொண்டுவர முடிந்ததா, இல்லையா என்பது கதை.

தொழில்நுட்பத்தை சிறப்பாக கையாளத் தெரிந்தவர்களால் நிகழ்த்தப்படும் நூதன மோசடிகளை, தொழில்நுட்பம் தெரியாதவர்களும் எளிதில் புரிந்துகொண்டு வாய் பிளக்கும் வண்ணம், அவற்றை அணு அணுவாக விவரித்துக் காட்டிய வகையில் ஆச்சரியப்படுத்துகிறார் அறிமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி. போலியான காதலை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள், காதலின் உன்னதத்தை உணரும் தருணத்தை நம்பகமாக உருவாக்கிக் காட்டிய வகையிலும் பாராட்டுகளை அள்ளுகிறார். ஆனால், குற்றம் செய்தவர்களை தண்ணீர் தெளித்துப் புனிதப்படுத்தி அனுப்பும் அணுகுமுறை, சமூகத்தை நேசிக்கும் ஒரு படைப்பாளி செய்யக்கூடியது அல்ல.

திரைக்கதையின் இரண்டாம் பாதியில், எதிர்தரப்பினரை மிக பலவீனமான முட்டாள்களாக சித்தரிக்கும் லாஜிக் சறுக்கல்கள் மலிந்து கிடக்கின்றன. ஆனால் அவற்றைவிட அதிகமாக, ஏற்றுக் கொள்ளத்தக்க, ஊகிக்க முடியாத திருப்பங்கள் நிறைந்திருப்பதால், தர்க்கப் பிழைகள் குறித்து யோசிக்கவே வாய்ப்பு இல்லை. முதன்மைக் கதாபாத்திரங்கள் தப்பிவிடுவார்களா, சிக்கிவிடுவார்களா என்பதிலேயே பார்வையாளர்களின் கவனத்தை நிலைகுத்தச் செய்யும் மாயத்தை கடைசிவரை செய்கிறது ஜெட் வேக திரைக்கதை.

தனது 25-வது படம் எப்படி அமைய வேண்டும் என்பதில் கவனமாக இருந்திருக்கும் துல்கர் சல்மான், அது தரும் இறுதிச் செய்தி பற்றி அலட்டிக்கொள்ளாத ‘இயக்குநரின் நடிகராக’ கவனம் ஈர்க்கிறார். குற்ற உணர்ச்சியே இல்லாமல் குற்றங்கள் செய்யும்போதும், காதலை இரு பரிமாணங் களில் உணரும் தருணங்களையும் அழகாக, துள்ளலாக தனது நடிப்பில் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.

இவருக்கு சற்றும் குறையாத நடிப்பை தந்திருக்கிறார் ரீது வர்மா. காளீஸாக வரும் ரக்‌ஷன் வழங்கும் நகைச்சுவையை விட, அவரது காதல் நடிப்பு எடுபடுகிறது. நிரஞ்சனி அகத்தியனையும் குறைத்துக் கூற ஏதுமில்லை. இந்த நால்வருக்கும் அப்பால் தன்னை ஒரு சிறந்த நடிகராகவும் நிரூபிக்கும் வாய்ப்பை அட்டகாசமாக பயன்படுத்தி இருக்கிறார் கவுதம் மேனன்.

இரைச்சல் மண்டிக் கிடக்கும் பின்னணி இசையைக் கடந்து, ‘என்னைவிட்டு எங்கும் போகாதே’ பாடல் நினைவில் தங்குகிறது. பல இடங்களுக்கு பயணித்து கதாபாத்திரங்களை பின்தொடரும் கே.எம்.பாஸ்கரனின் ஒளிப்பதிவு, திரில்லர் படத்துக்கு அவசியமான ‘கேண்டிட்’ தன்மையை முழுமையாகத் தருகிறது.

இன்றைய நவீன உலகில் குற்றங்களையும், காதலையும் எளிதாக கடந்து சென்றுவிடலாம் என்பதை ஒரு ‘மாயக்கனவு’ போன்ற திரைக்கதை கொண்டு ரசிகர்களைத் திறமையாக ஏமாற்றிவிடுவதில் ஒரு காதல் கிரைம் திரில்லர் வகைப் படமாக உச்சம் தொட்டு, உள்ளத்தை கொள்ளையடிக்கிறது இந்தப் படம்.