போக்ஸோ வழக்கில் சர்ச்சை தீர்ப்பு: பெண் நீதிபதியை நிரந்தரமாக்கும் உத்தரவு வாபஸ்
போக்ஸோ சட்டத்தில் இரு சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை இந்த மாதத்தில் வழங்கிய மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு பெண் நீதிபதி புஷ்பா கானேடிவாலாவை நிரந்தர நீதிபதியாக நியமிக்க அளித்த ஒப்புதலை உச்ச நீதிமன்ற கொலிஜியம் திரும்பப் பெற்றுள்ளது.
போக்ஸோ சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்ட இருவரை சமீபத்தில் நீதிபதி புஷ்பா கனேடிவாலா விடுவித்தார். இந்த தீர்ப்புகளுக்கு கடும் கண்டனம் எழுந்ததைப் புரிந்துகொண்ட உச்ச நீதிமன்ற கொலிஜியம் இந்த முடிவை எடுத்துள்ளது.
கடந்த 19-ம் தேதி நீதிபதி புஷ்பா கனேடிவாலா அளித்த தீர்ப்பில், “ 12 வயது சிறுமியின் ஆடையோடு மார்பகங்களை பிடிப்பது போக்ஸோ சட்டத்தில் பாலியல் குற்றாமாகாது. உடலோடுஉடல் தொடர்பில் இல்லை” எனத் தீர்ப்பளித்து குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்தார்.
கடந்த 15-ம் தேதி நீதிபதி கனேடிவாலா அளித்த தீர்ப்பில் “ 5 சிறுமியின் கைகளைப் பற்றுவதும், பேண்ட் ஜிப்பை திறக்கச் செய்யவைப்பதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் பாலியல் குற்றமில்லை எனக் கூறி தண்டனை பெற்றவரை விடுவித்து” தீர்ப்பளித்தார்.
12 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவரை விடுவித்த வழக்கில் மத்திய மகளிர் ஆணையம், குழந்தைகள் உரிமைகள் ஆணையம் சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், மும்பை உயர் நீதிமன்றம் அளி்த்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இதற்கிடையே கடந்த 20-ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, என்.வி.ரமணா, ஆர்எப் நாரிமன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமர்வு, நீதிபதி புஷ்பா கனேடிவாலாவை நிரந்தர நீதிபதியாக நியமித்து பரிந்துரைத்தது.
நீதிபதி புஷ்பா கனேடிவாலா அளித்த இரு தீர்ப்புகளும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் தங்கள் பரிந்துரையை கொலிஜியம் திரும்பப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிபதி புஷ்பா கனேடிவாலா மகாராஷ்டிராவில் அமராவதி மாவட்டத்தில் கடந்த 1969-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி பிறந்தவர். பல்வேறு வங்கிகள், காப்பீடு நிறுவனங்களுக்கு வழக்கறிஞராக புஷ்பா பணியாற்றியுள்ளார்,
பல்வேறு சட்டக்கல்லூரிகளிலும், எம்பிஏ மாணவர்களுக்கும் கவுரப்பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு நேரடியாக மாவட்ட நீதிபதியாக புஷ்பா நியமிக்கப்பட்டார், அதன்பின் 2019ம் ஆண்டு பிப்ரவரி 13-ம்தேதி மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.