ஜாக்சன் துரை – விமர்சனம்

“நீர் தான் ஜாக்சன் துரை என்பவரோ?” என்ற ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்பட வசனம் மிகவும் பிரபலம். அதிலிருந்து எடுத்துதான் இப்படத்துக்கு ‘ஜாக்சன் துரை’ என பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் ஜாக்சன் என்பது ஒரு வெள்ளக்கார பேயின் பெயர்; துரை என்பது அந்த வெள்ளையனை எதிர்க்கிற ஓர் இந்தியப் பேயின் பெயர்

கதைப்படி, சென்னையில் சி.பி.சி.ஐ.டி பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார் சிபிராஜ். அயன்புரம் என்ற கிராமத்தில் பேயால் ஊர் மக்கள் அவதிப்படுவதால் அதை விசாரிக்க இவர் அனுப்பப்படுகிறார்.

இந்த வழக்கை விசாரிக்க அந்த கிராமத்திற்கு செல்லும் சிபி, அங்கு கிராமத் தலைவரான சண்முக சுந்தரத்தின் மகள் பிந்து மாதவியை பார்க்கிறார். பார்த்ததும் காதல் வயப்படுகிறார்.

யோகி பாபுவின் ஆலோசனைப்படி, பிந்து மாதவியை திருமணம் செய்ய சண்முக சுந்தரத்திடமே பெண் கேட்கிறார். அதே சமயம், பிந்து மாதவியின் தாய்மாமன் கருணாகரன், “பிந்து மாதவியை நான் தான் திருமணம் செய்வேன்” என்று உரிமை கொண்டாடுகிறார்.

இரண்டு பேரும் ஒரே சமயத்தில் பெண் கேட்பதால், அவர்களுக்கு ஒரு போட்டி வைக்கிறார் சண்முக சுந்தரம். அந்த ஊரில் இருக்கும் பேய் பங்களாவில் 7 நாட்கள் தங்குபவருக்கே தன் பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக சண்முக சுந்தரம் கூறுகிறார். பிந்து மாதவியை திருமணம் செய்யும் ஆசையில் சிபிராஜும், கருணாகரனும் அந்த பங்களாவிற்குள் செல்கிறார்கள்.

பேய் பங்களாவில் ஜாக்சன் என்ற பேய் தலைமையில் ஒரு பேய்க்கும்பலும், அதை எதிர்க்கிற துரை என்ற பேய் தலைமையில் இன்னொரு பேய்க்கும்பலும் இருக்கின்றன. இந்த பேய்களால் சிபிராஜூக்கும், கருணாகரனுக்கும் என்ன நடந்தது? இருவரில் யார் பிந்து மாதவியை திருமணம் செய்து கொண்டார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

பில்டப் விடும் சப்-இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார் சிபிராஜ். முந்தைய படங்களில் விட இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பயப்படுவது, காதலிப்பது, காமெடி பண்ணுவது என அனைத்திலும் சரியாக பங்களித்துள்ளார்.

பிந்துமாதவிக்கு வழக்கமான கதாநாயகி வேடம் தான். எனினும், சிலுக்கு ஸ்மிதாவை நினைவூட்டும் முகச்சாயல் இருப்பதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

இடைவேளைக்குப் பிறகு துரை என்ற பேயாக வரும் சத்யராஜின் நடிப்பு படத்திற்கு பலம். ஆனால், சத்யராஜின் வழக்கமான நக்கல் நையாண்டி காட்சிகள் இல்லாதது வருத்தம்.

பிந்து மாதவியை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் சிபிராஜுடன் பேய் பங்களாவிற்கு செல்லும் காட்சிகளில் கருணாகரன் தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பேய் படங்கள் ஹிட்டாகி வரும் நிலையில், இந்த பேய் படத்தை இயக்கி இருக்கிறார் தரணிதரன். வலிமையான நகைச்சுவை நடிகர்களை வைத்துக் கொண்டு படத்தில் காமெடிக்கு பஞ்சம் ஏற்படுத்தி இருக்கிறார். முதல் பாதியில் காமெடி காட்சிகள் கைகொடுத்தாலும் பிற்பாதியில் பெரிதாக எடுபடவில்லை.

யுவாவின் ஒளிப்பதிவும், சித்தார்த் விபினின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

’ஜாக்சன் துரை’ – பயமுறுத்த இயலாத பேய்!