சர்தார் – விமர்சனம்

நடிப்பு: கார்த்தி, ராஷி கண்ணா, ராஜிஷா விஜயன், லைலா, முனீஸ் காந்த், சங்கி பாண்டே, பாலாஜி சக்திவேல், ரித்விக் மற்றும் பலர்

இயக்கம்: பி.எஸ்.மித்ரன்

தயாரிப்பு: ’பிரின்ஸ் பிக்சர்ஸ்’ எஸ்.லக்‌ஷ்மணன் குமார்

இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு: ஜார்ஜ் சி.வில்லியம்ஸ்

படத்தொகுப்பு: ரூபன்

மக்கள் தொடர்பு: ஜான்சன்

கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ’விருமன்’, ’பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது ஹாட்ரிக் முயற்சியாகவும், தீபாவளி விருந்தாகவும் வெளிவந்திருக்கிறது ‘சர்தார்’.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணத்தைத் திருடுபவர்களை அம்பலப்படுத்தும் வகையில் ‘இரும்புத்திரை’ படத்தையும், அறிவுத் திருட்டுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘ஹீரோ’ படத்தையும் இயக்கி, சமூகப் பொறுப்புணர்வு உள்ள இயக்குனர் என்ற பெயர் பெற்ற பி.எஸ்.மித்ரன், ‘சர்தார்’ படத்தில் கார்த்தியுடன் கரம் கோர்த்திருப்பதாலும், கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருப்பதாலும் இதன் ட்ரைலர், பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதாலும் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பொருளியல் காரணங்களுக்காக இரண்டு உலகப் போர்கள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இனி மூன்றாவது உலகப் போர் தண்ணீருக்காக நடக்கக் கூடும் என்பது சமூக அறிவியலாளர்களின் அச்சம். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீர் பிரச்சனையை ‘சர்தார்’ படத்தில் முதன்மைப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் பி.எஸ்.மித்ரன்.

நம் தாத்தா – பாட்டி காலத்தில், “தண்ணீரை பணம் கொடுத்து விலைக்கு வாங்க வேண்டிய நிலை வரும்” என்று சொல்லியிருந்தால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்; சொன்னவனை பைத்தியமாகப் பார்த்திருப்பார்கள். ஆனால் இன்று ‘வாட்டர் கேன்’, வாட்டர் பாட்டில்’ ‘வாட்டர் பாக்கெட்’ என ஒவ்வொரு மாதமும் தண்ணீருக்காக எவ்வளவு செலவளிக்கிறோம் என்று கணக்குப் போட்டுப் பார்த்தால் தலை சுற்றுகிறது. உலகிலுள்ள அத்தனை மனிதர்களுக்கும் இலவசமாகக் கிடைத்துக்கொண்டிருந்த – இயற்கையின் வரப்பிரசாதமான – தண்ணீரை, லாபவெறி கொண்ட கொள்ளைக்கார பெருமுதலாளிகள் தங்கள் சுயநலத்துக்காக திட்டமிட்டு தண்ணீரை கடைச்சரக்காக்கி, பெருவணிகமாக மாற்றி வெகுமக்களின் வயிற்றில் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். மட்டுமல்லாது, ‘பைப் லைன் திட்டம்’ என்ற பெயரில் “உன் வீட்டு நிலத்தடி நீர் உனக்குச் சொந்தமில்லை” என்ற கொடுமையான நிலையை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறது கார்ப்பரேட் முதலாளிய அரசு.

இந்த பெருங்கொள்ளை ஒருபுறம் இருக்க, அப்படி விலைக்கு வாங்கும் தண்ணீர் சுகாதாரமானது தானா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. அந்த தண்ணீரைத் தாங்கிவரும் பிளாஸ்டிக் கேன்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் போன்ற பிளாஸ்டிக் பொருட்களில் நம் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஆபத்து இருப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்.

இப்படி பல வழிகளிலும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாக மாறியிருக்கும் தண்ணீர் பிரச்சனையை மையப் பொருளாகக் கொண்டு, ‘பிளாஸ்டிக் பாட்டில் விவகாரம்’,  ’ஒரே நாடு – ஒரே பைப் லைன் திட்டம்’, தண்ணீர் மாஃபியா ஆகியவற்றை  போலீஸ் மற்றும் உளவாளி ஜானர் கதையில் கலந்து,  அப்பா –மகன் சென்டிமென்ட்டை சேர்த்து ‘சர்தார்’ படத்தை சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

கதை என்னவென்றால், வெளியுலகத்துக்கு சந்திரபோஸ் என்ற நாடகக் கலைஞராகவும், உண்மையில் ராணுவ உளவாளியாகவும் இருந்து மாயமான சர்தார் (கார்த்தி),  ’தேசத்துரோகி’ என இந்திய அரசால் அறிவிக்கப்படுகிறார், இதனால் அவமானமடையும் அவரது ஒட்டுமொத்த குடும்பமும் தற்கொலை செய்துகொள்கிறது. இதில்  தப்பித்த அவரது மகன் விஜய பிரகாஷ் (இன்னொரு கார்த்தி), தன் சித்தப்பாவினால் (முனீஸ்காந்த்) வளர்க்கப்பட்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகிறார்.  இவரும் வழக்கறிஞராக இருக்கும் ஷாலினியும் (ராஷி கண்ணா) காதலர்கள்.

0a1m

பப்ளிசிட்டி பிரியராக இருக்கும் இன்ஸ்பெக்டர் விஜய பிரகாஷுக்கு சமூக ஊடகங்களில் மேலும் புகழ் சேர்க்கக் கூடிய ஒரு கேஸ் கிடைக்கிறது,

அதாவது, ‘ஒரே நாடு – ஒரே பைப் லைன்’ என்ற கொள்ளைத்திட்டம் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறார் தனியார் நிறுவன முதலாளியான இந்திய உளவுத் துறையின் முன்னாள் உயர் அதிகாரி (சங்கி பாண்டே). மறுபுறம், தண்ணீரை வியாபாரமாக்கியதால் ஏற்படும் விளைவினால் உடல்நலப் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் தன் மகனை (ரித்விக்) போல மற்ற குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க தண்ணீர் நிறுவன முதலாளிகளை எதிர்த்து போராடுகிறார் மங்கை (லைலா). இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண மங்கை யாருக்கும் தெரியாமல், மிக முக்கியமான கோப்புகளை எடுக்க முயற்சிக்கிறார். இது தெரியவர மங்கை மீது தேசத்துரோகி என்ற பட்டம் சுமத்தப்படுகிறது. இந்த கேஸை கையில் எடுக்கும் விஜய பிரகாஷ் விசாரணையில் இறங்க, அந்த கேஸ் அவரது அப்பா சர்தாரிடம் கொண்டுபோய் சேர்க்கிறது.

உண்மையில் சர்தார் செய்த தவறுகள் என்ன? அவர் ஏன் தேச துரோகியாக அறிவிக்கப்பட்டார்? என்பதே ’சர்தார்’ படத்தின் மீதிக்கதை.

அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் கார்த்தி, இரண்டு வேடங்களுக்குமான வித்தியாசத்தை நடிப்பில் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். உளவாளியான அப்பா, விளம்பரம் தேடும் இன்ஸ்பெக்டரான மகன் ஆகிய பாத்திரங்களுக்கு இரட்டை வேடம் மூலம் உயிர் கொடுத்துள்ளார். உளவாளி கார்த்தியின் கேரக்டருக்கு இயக்குநர் கொடுத்துள்ள வடிவமைப்பும், அதற்காக கார்த்தி காட்டியுள்ள மெனக்கெடல்களும் ரசிக்கும்படியாக உள்ளன.

படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் என இரண்டு கதாநாயகிகள். இருவருக்குமே சம வாய்ப்பு. இயல்பாக நடித்திருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் லைலா. சிறிது நேரமே வந்தாலும் தன் பாத்திரத்துக்கேற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

முனீஷ் காந்த், சங்கி பாண்டே, இயக்குநர் பாலாஜி சக்திவேல், சிறுவன் ரித்விக் உள்ளிட்டோர் நடிப்பு கவனம் ஈர்க்கிறது.

கதை, திரைக்கதை, வசனம், மேக்கிங், ஆக்சன் காட்சிகள் என அனைத்திலும் மிகுந்த கவனம் செலுத்தி செதுக்கியுள்ளார் இயக்குனர் பி.எஸ்.மித்ரன். அவர் சொல்ல நினைத்த பாட்டில் தண்ணீர் பிரச்சனை, உளவாளிகளின் தியாக வாழ்வு ஆகியவற்றை பாமரர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் திரையில் தீட்டிக்காட்டுவதில் வெற்றி பெற்றுள்ளார். பாராட்டுகள்.

ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவும், ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.

‘சர்தார்’ –  குடும்பத்துடன் பார்த்து, ரசித்து, பாடம் கற்றுக்கொள்ளத் தக்க தரமான படம்!.