நாய் சேகர் ரிட்டன்ஸ் – விமர்சனம்

நடிப்பு: வடிவேலு, ஆனந்த்ராஜ், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ஷிவாங்கி கிருஷ்ணகுமார், ஷிவானி நாராயணன், வேல ராமமூர்த்தி, சச்சு மற்றும் பலர்

இயக்கம்: சுராஜ்

தயாரிப்பு: ’லைகா புரொடக்சன்ஸ்’ சுபாஸ்கரன்

ஒளிப்பதிவு: விக்னேஷ் வாசு

இசை: சந்தோஷ் நாராயணன்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ்

திரைப்பட ரசிகர்கள் மத்தியில் ‘ நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு மூன்று காரணங்கள்.

முதல் காரணம்: 2017ஆம் ஆண்டு விஜய்யுடன் இணைந்து வடிவேலு நடித்த ’மெர்சல்’ திரைப்படம் வெளியானது. அதற்குப் பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் அவர் நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் என்பதால் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’க்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

இரண்டாவது காரணம்: ‘தலைநகரம்’ படத்தில் வடிவேலு ஏற்று நடித்திருந்த ’நாய் சேகர்’ கதாபாத்திரம் பிரபலமான ஒன்று என்பதோடு, நினைத்தாலே சிரிப்பை வரவழைக்கும் வகையில் அதில் நகைச்சுவைக் காட்சிகள் இருந்தன. இந்நிலையில், படத்துக்கு ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என பெயர் வைத்திருப்பதோடு, இப்படத்தில் வடிவேலுவே நாயகனாக நடித்திருக்கிறார் என்பதாலும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

மூன்றாவது காரணம்: இயக்குனர் சுராஜுடன் வடிவேலு இணைந்த ’தலைநகரம்’, ’மருதமலை’ ஆகிய படங்களில் எல்லாம் அவரது காமெடி காட்சிகள் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன. ’கத்தி சண்டை’ படத்தில்கூட, நகைச்சுவை ஓரளவு சிறப்பாகவே இருந்தது. ஆகவேதான், சுராஜும் வடிவேலுவும் இணையும் இப்படத்திற்கு  எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இப்படி ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’  பூர்த்தி செய்கிறதா? பார்க்கலாம்!

0a1e

ஆட்களைக் கடத்தியே பழக்கப்பட்ட தமிழ்ச்சினிமாவில், முதல் முறையாக நாய்களைக் கடத்தினால் எப்படி இருக்கும் என்ற நகைச்சுவையான புத்தம்புது கதைக்கரு மீதும், அப்படி நாய்களைக் கடத்துவதே ஹீரோ தான் என்ற காமெடியான சிந்தனை மீதும் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம்.

இப்படம் இரண்டு நகைச்சுவையான கடத்தல்காரர்களின் அறிமுகத்துடன் தொடங்குகிறது . ஒருவர் ’தாஸ்’ என்ற கதாபாத்திரப் பெயர் கொண்ட ஆனந்த்ராஜ்; இவர் ’லொள்ளு சபா’ சேஷு, ராமர் உள்ளிட்ட கூட்டாளிகள் சகிதம் பெண்களைக் கடத்தும் தாதா. மற்றொருவர் ‘நாய் சேகர்’ என்ற கதாபாத்திரப் பெயர் கொண்டவடிவேலு; இவர் தன் கூட்டாளிகளான ரெடின் கிங்ஸ்லி, ஷிவாங்கி, இட்ஸ் பிரசாந்த் ஆகியோருடன் சேர்ந்து விலை உயர்ந்த நாய்களைக் கடத்தி, அவற்றின் பணக்கார உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் ‘இந்தியாவின் முதல் நாய்கடத்தல் மன்னன்’ ஆகத் திகழ்பவர்.

ஒருநாள் தாதா ஆனந்த்ராஜுக்குப் பிடித்த அவரது செல்ல நாயை வடிவேலு கடத்துகையில், சிக்கல் ஆரம்பம் ஆகிறது. ஆவேசம் கொள்ளும் ஆனந்த்ராஜ், வடிவேலுவைக் கொல்லாமல் விட மாட்டேன் என்று கிளம்புகிறார்.

இந்நிலையில், தன் குடும்பத்தின் கடந்த காலம் பற்றியும், அந்த குடும்பத்தின் ராசியான நாய் கடத்தப்பட்டது பற்றியும் வடிவேலுவுக்குத் தெரிய வருகிறது. அவை என்னவென்றால், வடிவேலுவின் அப்பாவான வேல ராமமூர்த்தி, திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லாத நிலையில், தன் குடும்பத்தோடு பைரவர் கோயிலுக்குச் செல்கிறார். அங்கு சித்தர் ஒருவர் அவருக்கு தெய்வ அருள் பெற்ற ராசியான நாய்க்குட்டி ஒன்றைத் தருகிறார். நாயோடு சேர்ந்து வேல.ராமமூர்த்தியின் செல்வச் செழிப்பும் வளர, குழந்தை பாக்கியம் ஏற்பட்டு வடிவேலுவும் பிறக்கிறார். திடீரென ஒருநாள், அந்த ராசியான நாய் திருடப்பட்டு காணாமல் போகிறது. அதுமுதல் குடும்பத்தை மீண்டும் தரித்திரம் பற்றிக்கொள்கிறது.

இதை தெரிந்துகொள்ளும் வடிவேலு, தன் குடும்பத்தின் ராசியான நாய் இப்போது ஹைதராபாத்தில் வசிக்கும் பெரும்புள்ளியான மேக்ஸிடம் இருப்பதை அறிந்து, அதை மீட்கும் முயற்சியில் இறங்குகிறார். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா? கொலைவெறியுடன் தன்னைத் துரத்தும் தாதா ஆனந்த்ராஜிடமிருந்து தப்பித்தாரா? என்ற கேள்விகளுக்கு நகைச்சுவையாய் விடையளிக்கிறது ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் மீதிக்கதை.

0a1d

வடிவேலுவை சின்னத் திரையிலோ, குறுந்திரையிலோ பார்த்தாலே கூட பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சி பொங்கும். அப்படியிருக்கும்போது அவரை பெரிய திரையில் இப்புதுப்படக் கதையின் நாயகனாக பார்க்கும்போது பல மடங்கு மகிழ்ச்சி திரையரங்கில் பிரவாகம் எடுத்து ஓடுவதைக் காண முடிகிறது. அவரும் இந்த ’கம் பேக்’கை சீரியசாக எடுத்துக்கொண்டு, எந்தெந்த காட்சிகளில் எப்படியெல்லாம் சிரிக்க வைக்கலாம் என்று சிந்தித்து அருமையாக நடித்து சிறப்பாகத் தன் பங்களிப்பை செலுத்தியிருக்கிறார்.

படத்தில் எதிர்பாராத சர்ப்ரைஸ் ஆனந்த்ராஜின் பெர்ஃபார்மன்ஸ். மனிதர் பிய்த்து உதறியிருக்கிறார். அவரது காமெடி ஒன்லைனர்கள் படத்துக்கு பெரிய பலம் சேர்க்கின்றன. அவரும், வடிவேலுவும் சேர்ந்து வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.

ஷிவாங்கி கிருஷ்ணகுமார், இட்ஸ் பிரசாந்த், ரெடின் கிங்ஸ்லி, ராமர், முனிஷ்காந்த், பாலா, தங்கதுரை, பூச்சி முருககன், ஷிவானி நாராயணன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் திரையில் தோன்றி தங்களால் இயன்ற அளவு சிரிக்க வைக்கிறார்கள்.

வடிவேலுவுக்கு வெற்றிப்படம் கொடுக்கும் முயற்சியில் இயக்குனர் சுராஜ் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார். வடிவேலுவின் பழைய ஜோக்குகளை இயக்குனர் அதிகம் நம்பியிருப்பது தெரிகிறது. அதற்கு பதிலாக, கலகலப்பாக சிரிக்க வைக்கும் புதிய ஜோக்குகளைச் சேர்த்து, செம்மையாகவும் செழுமையாகவும் திரைக்கதை அமைத்திருந்தால் வெற்றி பிரமாண்டமானதாக இருந்திருக்கும்.

விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவு வண்ணத்தை வாரிக்கொண்டு வந்து கண்ணுக்கு குளிர்ச்சியூட்டுகிறது. சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.

’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ – எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் திரையரங்குக்குச் சென்றால் ஜாலியாகப் பார்த்து சிரித்து மகிழலாம்! பெரிய எதிர்பார்ப்புடன் சென்றால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிக்க வந்திருப்பதைக் கண்ணாரக் கண்டு, மன நிறைவோடு வீடு திரும்பலாம்!!