‘குற்றப்பரம்பரை’ படமெடுக்கும் பாரதிராஜா கவனத்துக்கு…

’குற்றப்பரம்பரை’ படத்தை பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சாராத, நியாயவாதிகள் யாராவது எடுக்க வேண்டும். ஜாதியப் பெருமிதம் தொனிக்க அந்தப் படம் வெளியானால் அது நிச்சயம் ஜாதி வெறிப்படமே!

விரல் ரேகைச் சட்டம் ஒழிக்கப்படுவதற்காக பாடுபட்ட அனைத்து இதர சாதியினர், இயக்கங்களும் அப்படத்தில் இடம் பெறுதல் அவசியம்.

தேவர் என்ற பொதுவான அடையாளத்தின்கீழ் பிரமலைக்கள்ளர்கள் கொண்டு வரப்படுவதே அநீதி என்பேன் நான். மறவரோ, அகமுடையரோ, ஈச நாட்டுக் கள்ளரோ விரல் ரேகைச் சட்டத்தால் குற்றப்பரம்பரை சட்டம் 1911 (Criminal Tribes Act, 1911) பாதிக்கப்பட்டார்களா, என்ன? (1930களில்தான் ஆப்ப நாடு கொண்டயங்கோட்டை மறவர்கள் இதில் இணைக்கப்பட்டனர்.) பிரிட்டிஷ் அரசால் கொடூரமாகத் தண்டிக்கப்பட்ட ஒரு எளிய இனம் எப்படி ஆண்ட பரம்பரையாக இருந்திருக்க முடியும்?

முக்குலத்தோரையும் ’தேவர்’ என்று அறிவிக்கச் சொல்லி பி.டி.குமார் (இன்று அரசகுமார்) உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். பிரமலைக்கள்ளரின் வலிகளைப் புரிந்து கொள்ளாமல் தொடுக்கப்பட்ட வழக்கு அது என்பேன்.

பொருளாதாரத்திலும் கல்வியிலும் சமூகத்திலும் அடிமட்டத்தில் இருந்த பிரமலைக்கள்ளர்களை (தஞ்சாவூர் ஈச நாட்டுக் கள்ளர்களை அல்ல) உயர்த்துவதற்காகவே ’சீர் மரபினர்’ என்ற பிரிவு உருவாக்கப்பட்டு, தனித்துறையாகவே அது இருக்கிறது. அந்தத்துறையின் கீழ கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் இயங்குகின்றன. மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள பிரமலைக் கள்ளர் வகுப்பை சார்ந்தவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக 289 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை தமிழக அரசு நடத்துகிறது.

முக்குலத்தோரில் மற்ற இருவரையும்விட அடித்தட்டு நிலையில் இருப்போர் பிரான்மலைக் கள்ளர் எனப்படும் பிரமலைக் கள்ளர்களே. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்குள்ளேயும் இவர்கள் தனிப்பிரிவாக ‘சீர் மரபினர்’ (denotified community) என்று அழைக்கப்படுகின்ற்னர். இவர்களது சாதிச்சான்றிதழ் அட்டை மஞ்சள் நிறத்தில் இருக்கும். (அகமுடையருக்கு பச்சை நிறம்).

அடிப்படையில் எளிய ஆதிக்குடியாக இருந்தவர்கள் என்பதாலும் கல்வி, பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள் என்பதாலும் இவர்களை ஜாதி அரசியலில் எளிதில் பகடைக்காய்களாக பலராலும் ஆக்கிவிட முடிகிறது என்பதே யதார்த்தம்.

இவையெல்லாம் ஆய்வு விஷயங்கள்.

நான் ‘குற்றப்பரம்பரை’ படம் எடுக்கவிருக்கும் பாரதிராஜா அவர்களுக்கு வைக்கும் கோரிக்கைகள் இவை:

1.பெருங்காமநல்லூரில் மாயக்கா உட்பட 17 கள்ளர் இனத்தவர்கள் இச்சட்டத்துக்கு எதிராகப் போராடியதால் கொல்லப்பட்டனர். அது இப்படத்தில் இடம்பெற வேண்டும்.

2.இச்சட்டத்துக்கு எதிராக அறிவார்ந்த சமூகத்தை தட்டி எழுப்பியவர் ஜார்ஜ் ஜோசப் என்கிற மலையாளி. அவர்தான் பெரியாரை வைக்கம் போராட்டத்துக்கு அழைத்துச்சென்றவர். அவரை கழித்துவிட்டு கதை எழுதிவிடாதீர்கள்.

3.அம்பேத்கர் இச்சட்டத்துக்கு எதிராக பிரிட்டிஷ் அரசிடம் கடுமையாக வாதிட்டிருக்கிறார். அது படத்தில் இடம் பெற வேண்டும். பெரியாரின் கண்டனமும் இடம்பெறுவது அவசியம்.

4.கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ்காரரான வரதராஜூலு நாயுடு, பத்திரிகையாளர் தினகரன், நீதிக்கட்சியைச் சேர்ந்த டி.எம்.நாயர், கள்ளர்களை இக்கொடுமையிலிருந்து படிப்படியாக விடுவித்த நீதிக்கட்சி அரசு, பெரியார் தொண்டரான பி.சுப்பராயன் ஆகியோரைக் கழித்துவிட்டு இப்படம் உண்மைகளைப் பதிவு செய்யக் கூடாது..

5.பிரமலைக்கள்ளர்கள் மட்டுமல்ல, வன்னியர்கள், தொட்டியநாயக்கர்கள் உட்பட 89 ஜாதிகள் விரல் ரேகைச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவை. இந்தியா முழுமையும் 213 ஜாதிகள் இவ்வாறு நசுக்கப்பட்டன. அந்த வரலாறு ஒற்றை வரியில் அல்ல , விரிவாக எழுதப்பட வேண்டும்.

6.இப்படத்துக்கான வசனத்தை தேவர் ஜாதி கவிஞர்கள், அவர்களது வாரிசுகள் எழுதக் கூடாது. வன்னியரோ, தொட்டிய நாயக்கரோ, உப்புக்குறவரோ, ஊராளிகவுண்டரோ எழுத வேண்டும். அவர்களுக்கும் இந்த சட்டத்தால் தேய்ந்த வரலாறு உண்டு.

இவை எவற்றையும் பரிசீலிக்காது, ஜாதிப் பெருமிதக்காரர்கள், ஜாதி வெறியர்கள் புடை சூழ வரலாற்றைத் திருத்தி எழுதிவிடாதீர்கள் இயக்குநர் இமயமே!

வரலாறு உங்களை மன்னிக்காது!

படம் வந்தபிறகு இதையெல்லாம் சொன்னால் நன்றாகவா இருக்கும்? அதனால்தான் முன்கூட்டியே சொல்கிறேன்.

-துரை அரசு