“இந்தி தெரியாதது அவமானம் அல்ல; அது என் இன எழுச்சியின் அடையாளம்!” – சகாயம்

“இந்தி தெரியாது என்று சொல்லுவது எனக்கு அவமானம் அல்ல; அது என் இன எழுச்சிக்கான அடையாளம்” என்றார் சகாயம் ஐ.ஏ.எஸ்.

தமிழ் மொழியறிஞர் குணா எழுதிய ‘தமிழரின் தொன்மை’ நூல் வெளியீட்டு விழாவில் சகாயம் ஐ.ஏ.எஸ். ஆற்றிய உரை (பகுதி4):-

சிலகாலம் முன்பு டெல்லியில் எங்களைப் போன்ற குடிமைப்பணி அதிகாரிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளித்தனர். அங்கு பயிற்சி அளிக்க வந்த ஒரு பெண் அதிகாரி ஆங்கிலத்தில் தொடங்கி பேசிக்கொண்டிருந்தார். அதுவரை எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அவர் திடீரென்று இந்தியில் பேசத் தொடங்கிய போது, நான் எழுந்து, “உங்களுடைய இந்தி மொழியை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை” என்று சொன்னேன்.

உடனே அந்த பெண் அதிகாரி, “உங்களுக்கு இந்தி தெரியாதா..? இந்தி நமது தேசிய மொழி” என்றார். நான் உடனே, “இந்தி எனது தேசிய மொழி அல்ல. இந்தி அலுவல் மொழி மட்டுமே. எனது தேசிய மொழி தமிழ்” என்றேன்.

“இங்கே உள்ள இத்தனை அதிகாரிகளில் நீங்கள் ஒருவர் மட்டுமே இந்தி தெரியாது என்கிறீர்கள்” என்றார் அந்த பெண்மணி. நான் உடனே, “அதற்கு காரணம், இந்திய துணைக்கண்டம் முழுதும் இந்தியை திணித்தபொழுது அதை எதிர்த்துப் போராடிய ஒரே இனம் என் தமிழ் இனம் மட்டுமே” என்றேன். “இந்தி தெரியாது என்று சொல்லுவது எனக்கு அவமானம் அல்ல. அது என் இன எழுச்சிக்கான அடையாளம்” என்றேன்.

என் அன்புக்குரிய சொந்தங்களே, 21ஆம் நூற்றாண்டில் எந்த இனமும் சந்திக்காத மாபெரும் அழிவை சந்தித்தது நமது இனம். நமது உறவுகள், சகோதரர்கள், தங்கைகள், அக்காக்கள் மீது, தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகள் போட்டு, பல நாடுகள் இணைந்து நம் இனத்தை அழித்தபோது நாம் ஒரு கள்ள மௌனம்  காத்துக்கொண்டிருந்தோம். இன்றும் நாம் அப்படியொரு மௌனத்தை, தேவையில்லாமல் தொடர்ந்துகொண்டே உள்ளோம்.

அழிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட எம் இனத்திற்கு ஒரு கௌரவம் தேவைப்படுகிறது. அதை உண்டாக்குவதற்கு, நமது பெருமைக்குரிய ஐயா குணா அவர்கள் எழுதிய இந்த ‘தமிழரின் தொன்மை’ என்ற ஆய்வு நூல் உதவும். இதை நாம் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும்.

நாம் எத்தகைய பழம்பெருமைக்குரிய இனம், எத்தகைய சிறப்பு வாய்ந்தது நமது மொழி என்பதை உணர்வது ஒன்றே, நம் மண்ணில் உள்ள அந்நிய ஆட்சியாளர்களை அகற்ற சரியான வழியாகும்.

இந்த மண்ணில் தமிழ்த்தேசியம் எழட்டும்..!