வாகா – விமர்சனம்
படத்தில் எடுத்த எடுப்பிலேயே, ‘தந்தி தொலைக்காட்சி’யின் ‘ஆயுத எழுத்து’ நிகழ்ச்சியில் ரங்கராஜ் பாண்டே ரகுநாத் ஆச்சார்யா, மூக்கை விடைத்துக்கொண்டு, முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு, ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமியின் தெனாவட்டு உடல் மொழியுடன், “இந்தியா – பாகிஸ்தான் ராணுவ பிரச்சனை” குறித்து விவாதம் நடத்துவதாக காட்டுகிறார்கள். பார்ப்பனிய – பாரதிய – கார்ப்பரேட் முதலாளியவாதியான பாண்டேவை முதல் ஃபிரேமில் பார்த்தவுடனே பக்கென்றிருக்கிறது நமக்கு. அதிலிருந்து படம் முழுக்க நிறைய பக்… பக்… பக்…!
பாண்டே மொகறை மறைந்த பிறகு வருவது என்னவென்றால், ‘ரோஜா’ படத்தில் அதன் நாயகன் அரவிந்த்சாமியை காஷ்மீர் “தீவிரவாதிகள்” பிடித்து வைத்திருப்பது போல, இந்த படத்தில் இதன் நாயகன் விக்ரம் பிரபு மற்றும் அஜய் ரத்னம் உள்ளிட்ட சில இந்தியர்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் பிடித்து வைத்திருக்கிறார்கள். சித்ரவதைக் கூடத்தில் வைத்து அடித்து துவைக்கிறார்கள். அது மட்டுமா? ரோம சாம்ராஜ்ஜியத்தில் அடிமைகளை மல்யுத்தம் செய்ய வைத்து பிரபுக்கள் வேடிக்கை பார்ப்பார்களே… அதுபோல, இரண்டு இந்தியர்களை சகதிக்குள் இறக்கிவிட்டு, மல்யுத்தம் செய்ய வைத்து வேடிக்கை பார்க்கிறார்கள். அதில் தோற்ற இந்தியனை, தனியே அழைத்துச் சென்று, அவன் முகத்தை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பாணியில் முகமூடி போட்டு மறைத்து, கழுத்தை கத்தியால் கரகரவென அறுக்கிறார்கள். துண்டான தலையை கொண்டுபோய் இந்திய எல்லைக்குள் விட்டெறிந்துவிட்டுப் போகிறார்கள்.
இதை பார்த்த நமக்கு, நாயகன் விக்ரம் பிரபு கதி என்ன ஆகும் என்ற கேள்வியும், ஆவலும் மேலிட பதைபதைப்புடன் தொடர்ந்து படத்தை ஆர்வமாக பார்ப்போம் என்பது இப்படத்தின் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் நம்பிக்கை! ஆனால், வழக்கமான கேடுகெட்ட ஆக்ஷன் மசாலா படங்களின் நாயகனாகவே நாம் விக்ரம் பிரபுவை பார்த்துவருவதால், இந்த படத்திலும் அவர் க்ளைமாக்ஸில் சண்டை போட்டு, பாகிஸ்தான் ராணுவத்தினரிடமிருந்து தப்பித்து பாரதம் வந்து விடுவார் என்பது நமக்கு தெரியும்; ஆதலால் எந்த பதைபதைப்பும் நமக்கு ஏற்படவில்லை!
அதன்பிறகு, விகரம் பிரபு யார்? அவர் எப்படி பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார்? என்ற விவரங்களை படுகேவலமான, பல்லாயிரக்கணக்கான ஓட்டைகள் கொண்ட திரைக்கதை மூலம் தன் இஷ்டத்துக்கு அளந்துவிடுகிறார் இயக்குனர். காஷ்மீரில் உண்மையில் என்ன நடக்கிறது? நமது “வந்தேமாதரம்” ராணுவம் அங்கேயும், மணிப்பூரிலும், ஈழத்திலும் செய்த, செய்கிற அட்டூழியங்கள் என்ன? என்ற அறிவோ, தேடலோ, நியாய உணர்வோ சிறிதும் இல்லாமல், “நாட்டுப்பற்று” என நினைத்துக்கொண்டு ஆண்டு விழாவில் நாடகம் போடும் ஆரம்பப் பள்ளி மாணவனின் சகல அறியாமைகளுடனும் சகட்டுமேனிக்கு ஓட்டு ஓட்டென்று ஓட்டுகிறார் இயக்குனர். இதில் பாரதிய வெறியரான மணிரத்னம் பாணியில் ஒரு காதல் வேறு. தாங்க முடியவில்லை.
எல்லை பாதுகாப்பு படை வீரர் கதாபாத்திரத்துக்கு விக்ரம் பிரபு சரியாகப் பொருந்துகிறார். ஆனால், படம் முழுக்க அவரிடம் வழக்கமான முகபாவனைகள் மட்டுமே தென்படுகின்றன. எமோஷன் காட்சிகள், நடன அசைவுகளில் அவர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கதை மற்றும் இயக்குனரை தேர்ந்தெடுப்பதிலும் தான்.
விக்ரம் பிரபுவின் காதலியாக ரன்யா ராவ் (அறிமுகம்) கதாநாயகிக்கான பங்கை நிறைவாக செய்கிறார். துளசி, கருணாஸ், சத்யன், அஜய் ரத்னம், வித்யூ லேகா ஆகியோர் படத்தில் வந்து போகிறார்கள்.
சதீஷ் குமாரின் ஒளிப்பதிவு எல்லைக் காட்சிகள், மலைகள், காடுகள், வேலிகள் ஆகியவற்றை கண் முன் கடத்துகிறது. மோகன் ராஜின் பாடல் வரிகளில் “ஏதோ மாயம் செய்கிறாய்…” பாடல் ரசிக்க வைக்கிறது. இமானின் பின்னணி இசை ஓ.கே. ஆனால் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்.
இந்த படத்தில் “ஆணியே பிடுங்க வேண்டாம்டா” என்று ஒரு பாடல் வருகிறது. இப்படத்தின் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமாரவேலனிடம் நாம் சொல்ல விரும்புவதும் அதுதான்!