ஜெயலலிதா நடித்த ‘சூரியகாந்தி’ டிஜிட்டல் வடிவத்துக்கு மாறுகிறது!

ஜெயலலிதா  – முத்துராமன் நடிப்பில் 1973ஆம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றிபெற்ற படம் ‘சூரியகாந்தி’. அது தற்போது நவீன வடிவமாக டிஜிட்டல் மற்றும் சினிமாஸ்கோப்பாக மாற்றப்படுகிறது.

கணவனைவிட மனைவி அதிகம் சம்பாதிக்கிறார் என்கிற தாழ்வு மனப்பான்மை காரணமாக ஏற்படும் சிக்கல் தான் இப்படத்தின் கதை. சோ, மனோரமா, மௌலி, காத்தாடி ராமமூர்த்தி, எம்.ஆர்.ஆர் வாசு மற்றும் பலர் நடித்த இப்படத்தில், “ஓ மேரோ தில்ரூபா“ என்ற பாடலையும், “நானென்றால் அது நீயும் நானும்“ என்ற பாடலையும் ஜெயலலிதா சொந்த குரலில் பாடியிருந்தார்.

மேலும், கவிஞர் கண்ணதாசன் எழுதி, நடிக்க, டி.எம்.சௌந்தர்ராஜன் பாடிய “பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?” என்ற பாடல் பரபரப்பாக பேசப்பட்ட பாடல். இப்படத்தின் நூறாவது நாள் விழாவில் ஜெயலலிதாவுக்கு தந்தை பெரியார் பரிசு வழங்கி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் கதை, வசனத்தை ஏ.எஸ்.பிரகாசம் எழுதி இருந்தார். வித்யா பிலிம்ஸ் வேணுகோபால் தயாரிக்க, முக்தா வி.சீனிவாசன் இயக்கியிருந்தார்.

அன்றைய காலகட்டத்துக்கு மட்டுமல்ல, இன்றைய காலகட்டத்துக்கும் பொருத்தமான படம் ‘சூரியகாந்தி’ என நம்பப்படுவதால், அது மெருகேற்றப்பட்டு கருப்பு வெள்ளையிலேயே ஸ்கோப்பில் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை ஏ.பி.பிலிம்ஸ் கஜலட்சுமி வெளியிடுகிறார்.