பசங்க 2 – விமர்சனம்

சிறுவர்களை மையமாக வைத்து ‘பசங்க’ என்ற படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற பாண்டிராஜ், மீண்டும் அதே பாணியில் எடுத்திருக்கும் படம் ‘பசங்க 2’.

’பசங்க’ படத்தில் கிராமத்து சிறுவர்களை வைத்து படமாக்கிய இயக்குநர், இந்த இரண்டாம் பாகத்தில் நகர்ப்புற, அதிலும், மேல் தட்டு சிறுவர்களை வைத்து பாடம் எடுத்துள்ளார்.

பெற்றோர்கள் தங்களது ஆசையை பிள்ளைகள் மீது திணிப்பது, தாங்கள் சிறந்த பெற்றோர்கள் என்று தமது உறவினர்களிடம் நிரூபிக்க, குழந்தைகளை அவர்கள் முன்பு பாட்டு, ரைம்ஸ் சொல்ல சொல்வது, முதல் மதிப்பெண் எடுப்பதற்காக பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுப்பது, இப்படி எதையும் பெற்றோர்கள் செய்யக்கூடாது, அவர்களை அவர்களாக வளர்க்க வேண்டும் என்பது தான் ‘பசங்க 2’ படத்தின் கதைக்கரு.

“குழந்தைகளை குழந்தைகளாகவே வளர்ப்பது எப்படி?” தெரிந்துக் கொள்ள விரும்புபவர்கள் இந்த படத்தை பார்த்தால் தெரிந்துக் கொள்ளலாம்.

படத்தில் முக்கிய குழந்தை நட்சத்திரங்களாக நடித்துள்ள நிஷேஷ் மற்றும் வைஷ்ணவியின் சுட்டித்தனம், அவர்களது பெற்றோர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும், படம் பார்ப்பவர்களுக்கு நகைச்சுவையாக உள்ளது.

குழந்தைகளின் பெற்றோர்களாக அவதிப்படும் கார்த்திக்குமார் – பிந்து மாதவி மற்றும் முனிஷ்காந்த் – வித்யா ஜோடிகளின் நடிப்பு ரசிக்க வைக்கிறது.

சிறப்பு தோற்றத்தில் வரும் சூர்யாவும், அமலா பாலும் குழந்தைகளை வளர்க்கும் விதத்தை சொல்லும் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு குழந்தைகளும் ரசிக்கும் விதத்தில் வண்ணமயமாக இருக்கிறது. அரோல் கரோலியின் இசையில் பாடல்கள் இனிமை, பின்னணி இசை அருமை.

தமிழ் சினிமாவில் பலதரப்பட்ட சப்ஜக்ட்டுகளில் படம் வந்தாலும், குழந்தைகளை மையமாக வைத்து வரும் படங்கள் என்பதே குறைவு தான். அதிலும், தற்போதைய காலகட்டத்தில், காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பரபரப்பாக இருக்கும் பெற்றோர்களுக்கு, தங்களது குழந்தைகள் குறித்த நினைவை ஏற்படுத்தும்விதமாக உள்ள இப்படத்தை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கலாம்.

பணம் அதிகமாக வாங்கும் பள்ளிகளே சிறந்த பள்ளி என்று நினைப்பது, குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்தை வியாதி என்று நினைத்து மருத்துவர்களை நாடுவது என பித்துப் பிடித்து அலையும் பெற்றோர்களுக்கு இயக்குநர் பாண்டிராஜின் ‘பசங்க 2’ சரியான பாடமாக இருக்கும்.

Read previous post:
thangamagan 13-11-15
தங்க மகன் – விமர்சனம்

“தனுஷ் படமா...? அப்பா கடுகடு என்றிருப்பார்; மகனாக வரும் தனுஷ் எந்நேரமும் அவருக்கு குடைசல் கொடுப்பார். தலைமுறை இடைவெளி காரணமாக இருவரும் படத்தின் பெரும்பகுதி மோதிக்கொண்டே இருப்பார்கள்”

Close