ஜீனியஸ் – விமர்சனம்

இன்றைய எந்திரமய வாழ்க்கைச் சூழலில் மனஅழுத்தம் மிகப் பெரிய பிரச்சனை என்று சரியாகவும், இந்த மனஅழுத்தத்துக்கு செக்சும், திருமணமும் தான் தீர்வு என்று போலியாகவும் சொல்ல வந்திருக்கிறது இயக்குனர் சுசீந்திரனின் ‘ஜீனியஸ்’.

சிறு வயதிலேயே நன்றாகப் படித்து ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவிக்கும் மாணவன் ரோஷனையும், அதற்கு காரணமானவர் என நம்பப்படும் ரோஷனின் தந்தை ஆடுகளம் நரேனையும் பள்ளி ஆண்டுவிழாவில் மேடையேற்றிக் கௌரவித்து பாராட்டுகிறார்கள். இதனால் அதீத உற்சாகம் அடையும் நரேன், தன் மகனை இன்னும் இன்னும் படி படி என்று பாடாய் படுத்துகிறார்..

இப்போது வளர்ந்து பெரிய ஆள் ஆகிவிட்ட ரோஷன் ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் தனியாளாக பெரிய புராஜெக்ட்களைச் செய்து முடிக்கும் திறமைசாலியாகத் திகழ்கிறார்.. ஆனால், திடீரென வித்தியாசமாக நடந்துகொள்ளத் தொடங்குகிறார். அவரின் இந்த மனநிலை மாற்றம் சுற்றியிருப்பவர்களை ஆபத்தில் தள்ளுகிறது. ரோஷனுக்கு என்ன ஆனது, அதற்கு என்ன முடிவு என்பது மீதிக்கதை.

ஹீரோவாக தயாரிப்பாளர் ரோஷனே நடித்திருக்கிறார். சினிமா மீதான அவரின் காதல் புரிகிறது. ஆனால், அந்தக் காதல் கொஞ்சம் அதிகமான மெனக்கெடலை அவருக்குக் கொடுத்திருக்கலாம். பல இடங்களில் சீரியல் கேரக்டர்கள்போல ஒட்டாத நடிப்பு.

சுசீந்திரன் படங்களில் ஹீரோயின்களுக்கென சில துறுதுறு காட்சிகள் இருக்கும். அது இந்தப் படத்தில் மிஸ்ஸிங். ஹீரோயின் பிரியா லால் சும்மா வந்துபோகிறார்.

ஆடுகளம் நரேனை இதே போன்ற ரோலில் `நண்பன்’ படத்தில் ஏற்கெனவே பார்த்துவிட்டதால், இதில் பெரிதாக ஈர்க்கவில்லை. ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ்ணன், வ.ஐ.ச.ஜெயபாலன் போன்ற தேர்ந்த நடிகர்களே ஒன்றிரண்டு காட்சிகள்தாம் வந்துபோகிறார்கள்.

ஈரோடு மகேஷும், தாடி பாலாஜியும் காமெடி என ஏதோ செய்ய முயற்சி செய்து தோற்கிறார்கள். கதையை குட்டிச்சுவர் ஆக்கும் கேடுகெட்ட கதாபாத்திரத்தில் வரும் சிங்கம்புலி ஒன்றிரண்டு இடங்களில் சிரிக்க வைப்பதோடு சரி..

இசை என யுவன் ஷங்கர் ராஜா பெயர் வருகிறது. படத்தில் அதற்கான அறிகுறி சுத்தமாக இல்லை. கிராமத்துக் காட்சிகளில் கண்களை குளுகுளுவாக்குகிறது குருதேவ்வின் கேமரா.

சுசீந்திரன் படங்களின் பெரும் பலமே எழுத்துதான். ஆனால், `ஜீனியஸி’ல் கதை, திரைக்கதை இரண்டுமே அலட்சியமாக எழுதப்பட்டவைபோல இருக்கின்றன. முதல் பாதி ஒரு திசையில் செல்ல, மறுபாதி இன்னொரு திசையில் செல்கிறது. நவநாகரிக பிராத்தல் செண்டர், அங்கே அடியாட்கள் சகிதம் வில்லன் செய்யும் கொடுமைகள் என கதை நகர்கையில் சோர்வு தட்டுகிறது.

“என் ஆபீஸ்ல நிறைய பொண்ணுங்க பசங்களோட செக்ஸுவல் ரிலேஷன்ஷிப் வெச்சுக்கிட்டு, அதுக்கப்புறம் வேற ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா இருக்காங்க” போன்ற வசனங்கள் எல்லாம் முற்போக்கானவை என யாரோ சொல்லியிருப்பார்கள்போல. அதுவும் அதை ஹீரோ சொல்லும் இடமும் தொனியும்… சகிக்க முடியவில்லை.

‘ஜீனியஸ்’ – அரைவேக்காடு!

 

Read previous post:
0a1i
அஜீத்தின் ‘விஸ்வாசம்’ ரிலீஸ் தேதியில் மாற்றம் இல்லை: 2-வது லுக் வெளியீடு!

சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா, ரோபோ சங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்திருக்கிறார்கள். டி.இமான்

Close